17 வயதானவர்கள் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்கலாம்!

– தமிழகத் தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹு

“தமிழகத்தில் இம்மாதம் நடக்க உள்ள வாக்காளர் பட்டியல் திருத்த பணியின்போது 17 வயது இளைஞர்கள் இளம்பெண்கள் தங்கள் பெயர்களை வாக்காளர் பட்டியலில் சேர்க்க விண்ணப்பிக்கலாம்” என தமிழகத் தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹு தெரிவித்துள்ளார்.

இது குறித்து பேசிய அவர், “தமிழகம் முழுதும் வாக்காளர்களின் ஆதார் எண்ணை வாக்காளர் பட்டியலுடன் இணைக்கும் பணி ஆகஸ்ட்.1-ல் துவங்கியது.

விடுமுறை நாட்களில் வாக்குச்சாவடி அலுவலர்கள் வீடு வீடாக சென்று வாக்காளர்களின் ஆதார் எண்களை சேகரித்து வருகின்றனர். இப்பணி 2023 மார்ச் 31 வரை நடக்க உள்ளது.

வாக்குச்சாவடி அலுவலரிடம் ஆதார் எண் வழங்க முடியாதவர்கள் https://www.nvsp.inஎன்ற இணையதளம் வழியாக பதிவேற்றம் செய்யலாம்.

து தவிர ‘Voter Help Line’ மொபைல் போன் செயலி வழியாகவும் ஆதார் எண்ணை பதிவேற்றலாம்.

கடந்த மாதம் வரை 6.18 கோடி வாக்காளர்களில் 3.42 கோடி வாக்காளர்கள் தங்கள் ஆதார் எண்களை வாக்காளர் பட்டியலுடன் இணைக்க வழங்கி உள்ளனர். இது மொத்த வாக்காளர் எண்ணிக்கையில் 55.37 சதவீதம்.

அரியலுார் கள்ளக்குறிச்சி தர்மபுரி மாவட்டங்களில் 80 சதவீத வாக்காளர்கள் ஆதார் எண் அளித்துள்ளனர். சென்னையில் மிக குறைந்தபட்சமாக 20 சதவீதம் பேர் மட்டும் ஆதார் எண் வழங்கி உள்ளனர்.

மேலும் 31 மாவட்டங்களில் 50 சதவீதத்துக்கு மேற்பட்ட வாக்காளர்கள் ஆதார் எண் வழங்கி உள்ளனர்.

ஆதார் எண் சேகரிப்பு பணி குறித்து வாக்காளர்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

வரும் 9-ம் தேதி வாக்காளர் வரைவு பட்டியல் வெளியிடப்படும். அன்று முதல் வாக்காளர் பட்டியல் திருத்தப் பணி துவக்கப்படும்.

இந்த முறை 17 வயது இளைஞர்கள் இளம்பெண்கள் தங்கள் பெயரை வாக்காளர் பட்டியலில் சேர்க்க விண்ணப்பிக்கலாம். அவர்களுக்கு 18 வயதானதும் அவர்களின் பெயர் வாக்காளர் பட்டியலில் சேர்க்கப்படும்” எனக் கூறினார்.

You might also like