நாம் ஏன் அவரை காப்பி அடிக்கக் கூடாது?

நூல் அறிமுகம்: 

பரீட்சையில் தவிர, வேறு எங்கே வேண்டுமானாலும் காப்பி அடிக்கலாம். எதை யாரிடமிருந்து எப்படி காப்பி அடிப்பது. அதற்குத்தான் இந்த புத்தகம் என்று முன்னுரையில் சுட்டிக்காட்டுகிறார் எழுத்தாளர் ஆயிஷா இரா. நடராசன்.

பத்திரிகையாளரான கே. கணேசன் எழுதிய நூல் காப்பி அடிக்கலாம் வாங்க. இந்த நூலில் காந்தி முதல் கலாம் வரையிலான ஆளுமைகளின் வாழ்க்கைச் சம்பவங்கள் பகிரப்பட்டுள்ளன.

அவற்றை நாம் பின்பற்றினால், அதாவது காப்பி அடித்தால் 100 சதம் முன்னேறுவதற்கான வாய்ப்புகள் இருக்கின்றன என்கிறார் நூலாசிரியர்.

” ‘ஜன்னலில் ஒரு சிறுமி’ என்று ஒரு புத்தகம் இருக்கிறது தெரியுமா? அதில் ஒரு ஜப்பானிய சுட்டியைச் சந்தித்தேன். அவர் பெயர் டோட்டோ சான். அவரைப் பற்றி வகுப்பு ஆசிரியை 100 குறைகளையாவது அம்மாவிடம் சொல்வார்.

இப்படியிருந்து டோட்டோ சான் பெரியவர்களின் சரியான வழிகாட்டுதலுடன் மற்றவர்களுடன் கூடிய பழகும் வகையில் எப்படி வளர்ந்தார்? பிற்காலத்தில் அவளும் மிக நேர்த்தியான புகழ்பெற்ற ஆசிரியையாக எப்படி உயர்ந்தார்? டோட்டோ சான் நம்மை மாதிரி எப்போதும் ஜன்னல் சீட்டை மட்டும்தான் விரும்புவார்.

தன்னைச் சுற்றி நடக்கும் எல்லவாற்றையும் வேடிக்கை பார்ப்பது பிடிக்கும். பெரிய ஆளாக வரவேண்டும் என்ற பிடிவாதம் எப்படி வந்தது?

சொன்னால் நம்புவது கடினம். அவர் காப்பி அடித்தார். சிறந்த மனிதர்களின் நல்ல குணங்களை அவர் காப்பி அடித்தார். தன்னையும் மாற்றிக்கொண்டார்” என்று குறிப்பிடுகிறார் ஆயிஷா இரா. நடராசன்.

“இதுமாதிரி உபயோகமான ஒரு புத்தகம் இதுவரை வந்ததே கிடையாது. காந்தி, ஒபாமா, ஜெஸ்ஸி ஓவன்ஸ், அன்னை தெரசா, கபில்தேவ், நைட்டிங்கேல் என்று ரகசியமாக இல்லாமல், பகிரங்கமாகவே இவர்களை காப்பி அடிக்கலாம். சுட்டி கணேசன் கை பட்டால் துலங்காத காரியம் எதுவும் கிடையாது” என்றும் அவர் பாராட்டுகிறார்.

நூலில் முதல் கட்டுரையாக காந்தியின் வாழ்க்கைதான் சொல்லப்பட்டிருக்கிறது.

நெல்சன் மண்டேலா முதல் ஒபாமா வரை தங்களின் வெற்றிக்குக் காரணமாக யாரைச் சொல்கிறார்கள் தெரியுமா?

மகாத்மா காந்தியைத்தான். அவருடைய வாழ்க்கையில் இருந்துதான் நிறையக் கற்றுக் கொண்டதாக இவர்கள் சொல்கிறார்கள்.

அமெரிக்க அதிபர் ஒபாமாவே காந்தியைப் பார்த்து காப்பி அடிக்கும்போது, நாம் ஏன் அவரை காப்பி அடிக்கக்கூடாது என்று பேரன்புடன் கேட்கிறார் நூலாசிரியர் கணேசன்.

காப்பி அடிக்கலாம் வாங்க (காந்தி முதல் கலாம் வரை):
கே. கணேசன்
வெளியீடு: வர்ஷினி புக்ஸ்
9, திருஞான சம்பந்தர் தெரு,
புதுப்பெருங்களத்தூர், சென்னை – 63
விலை ரூ. 70

***

பா. மகிழ்மதி

You might also like