‘தராசு’ ஷ்யாம்
எம்.ஜி.ஆர். நிறுவிய ‘அகில இந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம்’ பொன்விழா ஆண்டை நிறைவு செய்துள்ள நிலையில், தலைமைக்கான யுத்தம் உக்கிரமாக நடந்துகொண்டிருக்கிறது.
களேபரமான காரணங்களுக்காக அதிமுகவின் பெயர் நாள்தோறும் செய்திகளில் அடிபட்டுக்கொண்டிருக்கிறது. அக்கட்சியில் எம்.ஜி.ஆரும் ஜெயலலிதாவும் கோலோச்சினார்கள். யாரும் கேள்வி கேட்கவில்லை, நீதிமன்றம் போகவில்லை.
ஆனால், இன்று அதிமுகவின் உட்கட்சி சண்டை நீதிமன்றப் படியேறிவிட்டது. நடக்கும் கூத்துகளைப் பார்த்து எம்.ஜி.ஆரும் ஜெயலலிதாவும் அவரவர் நினைவிடங்களில் நெளிந்துகொண்டிருப்பார்கள்.
2006 சட்டமன்றத் தேர்தலில் அதிமுக ஆட்சிப்பொறுப்பை இழந்தது. திமுக வெற்றி பெற்றது. அதற்கடுத்த சில மாதங்களில் அதிமுக தலைமைக்கு உட்கட்சித் தேர்தல் நடந்தது. பொதுச் செயலாளர் என்ற பதவிக்கு அதிமுகவில் அடிப்படை உறுப்பினர்கள் அனைவரும் வாக்களிக்க வேண்டும்.
‘ஒன்றரைக் கோடி’ தொண்டர்கள் எந்தக் காலத்தில் வந்து வாக்களிப்பது? கட்சி உருக்குலைந்துவிடக் கூடாது என்பதற்காக எம்.ஜி.ஆர். போட்டுவைத்த முடிச்சு அது. ஜெயலலிதா ‘ஏகமனதாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்’.
அதன் பின்னர், தேர்தல் ஆணையத்தின் ஒப்புதல் பெறப்பட்டு 2007 பிப்ரவரி 5 அன்று அதிமுகவின் ஜெயலலிதா காலத்திய முதல் அமைப்புச் சட்டம் அமலுக்கு வந்தது.
அடிப்படை உறுப்பினர்கள் பொதுச் செயலாளரைத் தேர்ந்தெடுக்கும் விதி எண் 20, (2)ஐ மாற்றவே முடியாது என்ற புதிய விதி (எண்: 43) அப்போது சேர்க்கப்பட்டது.
ஆனால், மேற்படி விதி, 12.09.2017 அன்று நடந்த அதிமுக பொதுக் குழுவில் திருத்தப்பட்டு ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகள் பொதுக்குழுவால் தேர்ந்தெடுக்கப்படும் என்று மாற்றப்பட்டது.
திருத்த முடியாத விதியைத் திருத்தியது தவறு என்ற குற்றச்சாட்டு எழுந்ததும், 2021 டிசம்பர் முதல் தேதி அதிமுக செயற்குழுவில் மீண்டும் ஒரு திருத்தம் கொண்டுவரப்பட்டது.
அதன்படி விதி எண் 20, (2) மீண்டும் திருத்தப்பட்டு, அடிப்படை உறுப்பினர்களால் கட்சித் தலைமை தேர்ந்தெடுக்கப்படும் என்ற பழைய நிலை மீண்டும் கொண்டுவரப்பட்டது.
அதிரடியாக மறுநாளே இரட்டைத் தலைமைக்குத் தேர்தல் அறிவிக்கப்பட்டு, வேட்புமனுக்கள் தாக்கல் செய்ய இரண்டு நாட்கள் மட்டுமே அவகாசம் வழங்கப்பட்டது. ஒற்றை வாக்கில் இனி இரட்டைத் தலைமைதான் என்கிற நம்ப முடியாத அதிசயம் நடந்தது.
தொடங்கப்பட்ட பின்னணி:
தலைமைப் பதவிக்கு வேட்புமனு பெறச் சென்றவர்கள் அடித்து விரட்டப்பட்டனர். அவர்களில் அதிமுக தொடங்கப்படுவதற்குத் தூண்டுகோலாக இருந்த சென்னை ஓட்டேரியைச் சேர்ந்த ஓம்பொடி பிரசாத்தும் ஒருவர் என்பதுதான் சோகம். அவர் எம்.ஜி.ஆர். மன்றத்துக்காரர்.
1972 அக்டோபர் 17 அன்று அதிமுக தொடங்கப்படுவதற்கு முன் பலதரப்பட்ட சமாதான முயற்சிகள் நடைபெற்றன.
அப்போது எம்.ஜி.ஆர். மனதை மாற்றிய சில நிகழ்வுகள் நடைபெற்றன. அவற்றில் ஒன்று: எம்.ஜி.ஆர். மன்றங்களின் தலைமைப் பொறுப்பாளர் முசிறிப் புத்தனும் ஓம்பொடி பிரசாத்தும் பட்டினப்பாக்கத்தில் தாக்கப்பட்டது.
சென்னை பிளாசா தியேட்டரில் எம்.ஜி.ஆர். படம் பார்த்துக்கொண்டிருந்த பெண்கள் அடித்து விரட்டப்பட்டனர். அனைவரும் மாம்பலத்தில் இருந்த எம்.ஜி.ஆர். அலுவலகத்துக்கு வந்து புகார் அளித்தனர்.
அப்போது அப்பாவு (கி) தெருவில் இயங்கிவந்த தென்சென்னை எம்.ஜி.ஆர். ரசிகர் மன்றச் செயலாளர் தெய்வ சிகாமணி ‘01.10.1972 முதல் 17.10.1972 வரை தொடக்கமும் முடிவும்’ என்ற கட்டுரையில் இது பற்றி விரிவாகப் பதிவுசெய்துள்ளார்.
இப்படியான பின்னணி கொண்ட அதிமுகவில்தான் 2016இல் ஜெயலலிதா மறைவுக்குப் பின் இன்றுவரை தொடர் களேபரங்கள்.
அலட்சியத் தலைவர்கள்:
2022 ஜூலை 11 அன்று இன்னொரு பொதுக்குழு கூட்டப்பட்டு அதில் எடப்பாடி பழனிசாமி இடைக்காலப் பொதுச் செயலாளராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
தீர்மானம் நிறைவேற்றப்பட்டு, நான்கு மாதங்களில் அடிப்படை உறுப்பினர்களால் பொதுச் செயலாளர் தேர்ந்தெடுக்கப்படுவார் என்று அறிவிக்கப்பட்டது.
தேர்தல் ஆணையப் பதிவின்படி அதிமுகவில் இப்போது அமலில் இருப்பது 12.09.2017 அன்று தேர்ந்தெடுக்கப்பட்ட நிர்வாகிகள் பட்டியல். 2022 செப்டம்பருடன் அதன் ஐந்து ஆண்டு ஆயுள் முடிந்துவிட்டது.
அதன் பிறகு நடைபெற்ற 2021 டிசம்பர் தேர்தல் இன்னும் ஆணைய அங்கீகாரம் பெறவில்லை. அது அமலுக்கு வந்தாலும், மீண்டும் ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி இரட்டைத் தலைமைதான் தொடர வேண்டும்.
ஆனால், அந்தத் தேர்தல் அங்கீகாரம் பெறவில்லை என்பது பழனிசாமி தரப்பு நிலைப்பாடு.
இது குறித்த உச்ச நீதிமன்ற மேல்முறையீட்டின் அடுத்த விசாரணை நவம்பர் 22இல் நடைபெறவுள்ளது.
அதற்குள் ஜூலை 11 இடைக்காலப் பொதுச் செயலாளர் தீர்மானம் காலாவதி ஆகிவிடும். நான்கு மாதங்களுக்குள் நிரந்தரப் பொதுச் செயலாளர் தேர்ந்தெடுக்கப்பட வேண்டும் என்ற சுருக்குக் கெடுவைத் தாங்களே விதித்துக் கொண்டிருக்கிறார்கள்.
ஆக, நீதிமன்றமோ, தேர்தல் ஆணையமோ நிவாரணம் தராவிட்டால் அதிமுகவின் தற்போதைய நிர்வாகிகள் யாருமே அவரவர் பொறுப்புகளைத் தொடர முடியாது. இதுவே அதிமுகவின் பொன்விழா ஆண்டு நிறைவடையும் நிலையில் உள்ள உண்மை நிலை.
திடீர் இடைத்தேர்தல் வந்தால் இரட்டை இலைச் சின்னம் முடக்கப்படும்.
பொன்விழா நிறைவு ஆண்டில் இவையெல்லாம் நடக்கக் கூடாது என்று அதிமுக விசுவாசிகள், எம்.ஜி.ஆர். பற்றாளர்கள் விரும்புகிறார்கள். ஆனால், தலைவர்களுக்கோ அந்த எண்ணம் கிஞ்சித்தும் இருப்பதாகத் தெரியவில்லை.
நன்றி: இந்து தமிழ் திசை நாளிதழ். அக்டோபர் – 17, 2022.