குழு அமைத்து ஆய்வு செய்யும் ஒன்றிய அரசு
ஆப்பிரிக்க நாடான காம்பியாவில் இருமல் மருந்து குடித்த 66 குழந்தைகள் உயிரிழந்தன. மெய்டன் பார்மாசுட்டிகல்ஸ் தயாரித்தது உள்பட 4 இந்திய இருமல் மருந்துகளுக்கு தொடர்பு இருக்கலாம் என்று உலக சுகாதார அமைப்பு கூறியது.
இதையடுத்து, இவற்றை ஆய்வு செய்து அறிக்கை அளிப்பதாக அது தெரிவித்தது. அதன் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் காலாவதியான இந்திய மருந்துகள் கொடுக்கப்பட்டது தெரிய வந்தது.
இந்நிலையில், உலக சுகாதார அமைப்பின் அறிக்கையை ஆய்வு செய்ய 4 பேர் கொண்ட நிபுணர் குழுவை ஒன்றிய அரசு நியமித்துள்ளது.
இந்தக் குழு, உலக சுகாதார அமைப்பின் ஆய்வறிக்கையில் கூறப்பட்டுள்ள குற்றங்கள் தொடர்பாக விசாரித்து, அது தொடர்பான அறிக்கையை தேசிய பொது மருந்து கட்டுப்பாட்டாளருக்கு அனுப்பி வைக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனிடையே, இருமல் மருந்தை தயாரித்த மெய்டென் மருந்து நிறுவனத்தின் சோனிபட்டு தொழிற்சாலையின், ஒட்டுமொத்த மருந்து தயாரிப்பை முற்றிலும் நிறுத்தும்படி அரியானா அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.