யாகாவாராயினும் ‘நா’ காக்க!

“தள்ளி நில்லுய்யா.. உடம்பு நாத்தம் வீச்சமடிக்குது’’ – தன்னைச் சந்திக்க வந்த ஊர்க்காரர்களைப் பார்த்துச் சொல்வார் அரசியல்வாதி.

அதற்குச் சட்டென்று பதில் சொல்வார் அந்த விவசாயி,

‘’ஆமா.. எங்க உடம்பு மட்டும் வீச்சம் அடிக்கும்.. எங்க ஓட்டு மட்டும் மணக்குமா?’’

      – இயக்குநர் கே. பாலசந்தர் இயக்கிய ‘தண்ணீர் தண்ணீர்’ படத்தில் வரும் வசனம் இது. வசனத்தை எழுதியிருந்தவர் கோமல் சுவாமிநாதன்.

திரைப்படங்களில் வரும் இம்மாதிரியான காட்சிகளை இப்போதைய அதிகாரச் சூழலில் நேரடியாகவே பார்த்துக் கொண்டிருக்கிறோம்.

கடந்த தேர்தலின்போது மக்களைப் பார்த்துப் பணிந்து கும்பிடு போட்டு வாக்குக் கேட்ட அதே அரசியல்வாதிகள் தான் மக்களின் வாக்குகளால் அமைச்சரான பிறகு அதே மக்களைத் தூரத்தில் நிறுத்தி அதிகாரத் தொனியில் பேசுகிறார்கள்.

நன்கு படித்த அமைச்சர்களும் கூட இப்படிப் பேசுகிறார்கள். அரசு அதிகாரிகளும் இதே மனநிலையைத் தான் பிரதிபலிக்கிறார்கள்.

இந்த நிலைமை உணர்த்துவது ஒன்றைத் தான்.

அதிகாரத்திற்குப் போய் அமர்கிறவர்களில் பெரும்பாலானவர்கள் பெரும் நிலச்சுவாந்தார் மாதிரியே நடந்து கொள்கிறார்கள். அவர்களுடைய மனங்களில் கெட்டி தட்டிப் போயிருக்கிறது நிலபிரபுத்துவ எச்சம்.

இது ஒருபுறம் இருக்கப் பொது வெளியில் பதற்றத்தை உருவாக்கும் விதமாகப் பேசுகிறவர்கள் அதிகரித்திருக்கிறார்கள். ஏற்கனவே பதற்றங்கள் குறையாத நிலையில் மேலும் பதற்றத்தை உருவாக்குகின்றன இத்தகைய தூண்டுதலான பேச்சுகள்.

அப்படிப் பேசுகிறவர்கள் யாராக இருக்கட்டும், எந்தப் பொறுப்பிலும் இருக்கிறவர் ஆகட்டும். அவர்களுடைய பேச்சு எந்தக் கலவரம் உருவாகவும் வழிவகுத்துவிடக் கூடாது.

சாதி, மதம், அரசியலின் பெயரால் யாரையும் சீண்டுகிற வேலைகளில் இந்தச் சந்தர்ப்பங்களில் இறங்குவது ஆரோக்கியமானது அல்ல.

அதிலும் ஆட்சிப் பொறுப்பில் இருப்பவர்கள் மிகவும் கவனத்துடன் செயல்பட வேண்டிய நேரமிது. எந்த மதம் சார்ந்தவர்கள் மீதும் வெறுப்பை விதைக்க அனுமதிக்கக் கூடாது.

நம் மக்களிடம் இயல்பாக இருக்கிற மதம் கடந்த நேசத்தைச் சிலர் திட்டமிட்டு பிளவு ஏற்படுத்த அனுமதிக்கக் கூடாது.

மாநில ஆட்சியைக் கலைப்பதற்கான தந்திரமாக யாரும் பயன்படுத்தவும் விட்டுவிடக் கூடாது.

அதனால் தான் திரும்பவும் சொல்ல வேண்டியிருக்கிறது. யாராக இருந்தாலும் இந்தச் சந்தர்ப்பத்தில் ‘நா’ காக்க!

You might also like