சிவாஜிகணேசனை யார் என்று கேட்ட கவிமணி!

உள்ளத்துள்ளது கவிதை – இன்பம்
உருவெடுப்பது கவிதை
தெள்ளத் தெளிந்த தமிழில் – உண்மை
தெரிந்துரைப்பது கவிதை.

இப்படி கவிதைக்குரிய விளக்கத்தை கவிதையாக வழங்கிய கவிப்பெருந்தகை  ‘கவிமணி’ என்று நம் அனைவராலும் போற்றப்படும் தேசிக விநாயகம் பிள்ளை.

“அழகு என்பதே உண்மை, உண்மை என்பதே அழகு” என்றார் ஆங்கிலக் கவிஞர் கீட்ஸ். கவிமணியின் பாடல்களில் உண்மையும் அழகும் கைகோர்த்துச் செல்வதை உணர முடியும்.

கரும்பினும் இனிமை பெற்ற கவிமணி தேசிக விநாயகம் பிள்ளையின் பாடல்கள் தமிழ் மக்களுக்குக் கிடைத்த பெருஞ்செல்வம், அரிய செல்வம், தெவிட்டாத அமிர்தம் என புகழ்வார் ரசிகமணி டி.கே.சி.

“தேசிக விநாயகத்தின் கவிப்பெருமை, தினமும் கேட்பது என் செவிப்பெருமை.” எனப் புகழ்மொழி சூட்டுவார் நாமக்கல் கவிஞர்.

“இவரது உண்மையுள்ளம், உண்மைப் பாடல்களின் மூலமாய் உண்மை வித்துக்களைக் கற்பவர் மனத்தில் விதைத்து, உண்மைப் பயிரைச் செழித்தோங்கச் செய்கிறது.

இவர் பாடல்களில் காணும் தெளிவும், இனிமையும், இவரது உள்ளத்திலேயுள்ள தெளிவு, இனிமை முதலிய சிறந்த இயல்புகளின் நிழற்படமேயாகும்,” என்பார் பேராசிரியர் வையாபுரிப்பிள்ளை.

இத்தகைய புகழாரங்களை கவிஞர்கள் சூட்டினாலும் புகழுக்கு ஆசைப்படாத கவிஞர் இவர்.

கல்கி எழுதி சிவாஜி கணேசன் நடித்த கள்வனின் காதலி படத்தில் ‘வெயிற்கேற்ற நிழலுண்டு, வீசும் தென்றல் காற்றுண்டு’ என்று கண்டசாலா-பானுமதி பாடிய பாடல் இன்றைக்கும் ரசிக்கப்படுகிற பழைய பாடல்களில் ஒன்றாகும்.

“வெய்யிற்கேற்ற நிழல் உண்டு வீசும் தென்றல் காற்றுண்டு
கையில் கம்பன் கவி உண்டு கலசம் நிறைய அமுதுண்டு
தெய்வ கீதம் பல உண்டு தெரிந்து பாட நீ உண்டு
வையம் தரும் இவ்வனமன்றி வாழும் சொர்க்கம் வேறுண்டோ”

(உமர் கய்யாம் பாரசீக மொழியில் எழுதிய கவிதையை தமிழில் மொழிபெயர்த்தவர் கவிமணி தேசிக விநாயகம்).

“வெயிற்கேற்ற நிழலுண்டு வீசும் தென்றல் காற்றுண்டு” எனும் கவிமணியின் பாடலை பயன்படுத்திக்கொண்டனர். அதற்கு கொடுப்பதற்காக ஒரு பெருந்தொகையை எடுத்துக்கொண்டு சின்ன அண்ணாமலையும் சிவாஜி கணேசனும் கவிமணியை சந்திக்க அவரது இல்லத்திற்கு சென்றனர்.

அவர்களுடன் பேசிக்கொண்டிருந்த கவிமணி சிவாஜியைப் பார்த்து தம்பி யார் என்று கேட்டார். பதட்டத்துடன் சின்ன அண்ணாமலை இவர்தான் சிவாஜி கணேசன் என்று சொல்லவும், கவிமணி அப்படியா தம்பி என்ன செய்து கொண்டிருக்கிறார் என்று கேட்டார்.

கவிமணிக்கு சினிமா பார்க்கும் பழக்கம் இல்லை. அதனால் அவருக்கு சிவாஜி கணேசனைத் தெரியவில்லை. பாடலுக்காக ஒரு பெருந்தொகையை சிவாஜி கொடுக்கவும் அதை வாங்க மறுத்து இந்த பாடல் நான் எப்போதோ எழுதியது அதற்கு இது தேவை இல்லை தம்பி என்று மறுத்து விட்டார்.

இந்த சிறு நிகழ்வு ஒன்றே போதும் கவிமணி பணம், புகழ் இவற்றை விரும்பாததற்கு.

– நன்றி: முகநூல் பதிவு

You might also like