“மகத்தான நிகழ்ச்சிகள் நாடுகளின் வரலாறுகளில் பதிவாகலாம். ஆனால், மனிதமனம் சிறுசிறு நிகழ்ச்சிகளால் தான் அடிப்படை மாற்றங்களை அடைகிறது.”
எழுத்தாளர் அசோகமித்திரன் கூறிய வார்த்தைகள் இவை. சொல்லப்போனால் அசோகமித்திரனின் படைப்புலகம் சிறிய நிகழ்வுகளால் புனையப்பட்டதுதான்.
மனித வாழ்வில் நிகழும் துயர்களை மனக்கசப்புடன் சகித்துக்கொண்டு வாழும் வாழ்வினை அசலாகப் பதிவு செய்த ஆர்ப்பாட்டமில்லாத கலைஞன்.
அவரது கதாபாத்திரங்கள் அனைத்தும் சாமானியர்கள். வாழ்வில் பெரிய அளவில் வெற்றியை ருசிக்காதவர்கள்.
கடைசி நேரத்தில் ரயில் வண்டியைத் தவறவிட்டவர்கள். சிறு தோல்வியை, ஏமாற்றத்தைக் கடக்க முடியாமல் அது நடந்ததற்கான காரணத்தை எண்ணி எண்ணி மனம் வருந்துபவர்கள்.
அசோகமித்திரனின் வார்த்தைகளில் சொல்ல வேண்டுமானால் அவரின் கதைகளில் வரும் பலரும் ‘சங்கடம்’ நிறைந்தவர்கள். நம் வாழ்வில் சங்கடம் என்ற வார்த்தை எந்தெந்த நேரங்களிலெல்லாம் பயன்படுத்தப்படுகிறதோ, அந்த நேரத்தின் வெறுமையுணர்வை, கசப்பை தன் கதைகள் முழுக்கப் பதிவு செய்திருக்கிறார்.
ஒரு ரயில் நிலையத்திலோ, பரபரப்பான வீதிகளிலோ நாம் நடந்து செல்லும்போது நாம் கடந்து செல்லும் மனிதர்களை, கடைபோட்டிருப்பவர்களை, பிச்சைக்காரர்களை என அனைவரையும் நாம் பார்க்கும்போது ஏற்பட்ட அதே உணர்வுநிலை, அவர் அதைப் பற்றி எழுதும்போது நமக்கு ஏற்படும். ஆடம்பரமில்லாத மொழி நடையைக் கொண்டவர் அசோகமித்திரன்.
ஆனால், அவரின் எளிமையான மொழிநடை மிகவும் பலம் வாய்ந்தது. அந்த மொழியின் பலம் அசாத்தியமானது.
இந்திய எழுத்தாளர்களிலேயே மிக முக்கியமானவர் என பலராலும் குறிப்பிடப்பட்ட எழுத்தாளுமை அசோகமித்திரன்.
200-க்கும் மேலான சிறுகதைகள், 9 நாவல்கள், சில கட்டுரைத் தொகுப்புகள் என தன் வாழ்நாள் முழுக்க எழுதித் தீர்த்துள்ளார். அவருடைய கதைகளில் உள்ள ஒருவித யதார்த்ததன்மை அவருக்கென தனி வாசிப்பாளர்களைக் கொண்டுள்ளார்.
சென்னையின் தெருக்களைப் பற்றி அவர் எழுதிய கட்டுரை சென்னையைப் பற்றிய மிகப் பெரிய ஆவணம். தி-நகர், ரங்கநாதன் தெரு, பாரிஸ் என பல இடங்களின் அன்றைய காலகட்டத்தின் சித்திரத்தைக் காட்சிப்படுத்தியிருப்பார்.
அசோகமித்திரன் ஆரம்பத்தில் ஜெமினி ஸ்டூடியோவில் கணக்கராக வேலை செய்தவர். அந்த அனுபவத்திலிருந்து அவர் எழுதிய ‘கரைந்த நிழல்கள்’ என்ற நாவல் சினிமாக் கலைஞர்களின் உலகத்தை வாழ்வைப் பேசும்.
கிரவுடு ஆர்ட்டிஸ்டுகள், புரொடெக்ஷன் வண்டியில் வீசும் ஒருவித நாற்றம், நடிகைகளின் பின்னணியில் நடனம் ஆடுபவர்களின் ஜிகினா முகம் என விரியும் அந்த நாவலில் மனித மனங்களின் மனச்சிடுக்குகளையும் பேசியிருப்பார்.
அவரின் கதாபாத்திரங்கள் எப்போதும் இயலாமை நிறைந்தவர்களாகவே இருந்திருக்கிறார்கள்.
அசோகமித்திரனின் சிறந்த சிறுகதைகளிலே ஒன்றான புலிக்கலைஞன் அவரது ஒட்டுமொத்த படைப்புலகத்துக்குமான சான்று. காதர் என்ற புலிவேஷக் கலைஞன் வாய்ப்பு தேடி ஸ்டுடியோவுக்கு வருவதாகக் கதை தொடங்குகிறது.
அவன் அங்கிருக்கும் அதிகாரிகளிடம் தனக்கு நடிக்க ஒரு வாய்ப்பு வழங்குமாறு கேட்கிறான்.
தனக்குப் புலியைவிட நன்றாகப் புலிபோல நடிக்கத் தெரியும் எனக் கூறி வேஷம் கேட்கிறான். இப்போது தாங்கள் எடுக்கும் படத்துக்கு புலி வேஷம் போடும் ஆள் தேவையில்லை. ஆட்கள் எல்லாம் எடுத்து முடித்தாயிற்று எனச் சொல்கிறார்கள்.
உடனே காதர் அவர்கள் முன்னிலையில் தனது டைகர் பைட்டை அரங்கேற்றுகிறான்.
மிகவும் லாகவமாக அங்கிருக்கும் மேசைகளின் மீது தாவிக் குதித்து அமர்கிறான். அந்தரத்தில் பேனுக்கு அருகில் பறந்து தொங்குகிறான். பேனுக்கும் அவனுக்கும் சில அங்குல இடைவெளிகள்தான் இருக்கின்றன.
அவ்வளவு நுட்பமாக அவன் புலி ஆட்டம் ஆடி முடித்திருப்பான். தனக்கு எப்படியாவது வாய்ப்பு வழங்குமாறு கேட்பான். கடைசியில் அவனது விலாசத்தை எழுதிக் கொடுத்துவிட்டு அங்கிருந்து விடைபெறுவான்.
அவனை எப்படியாவது அடுத்த படத்தில் நடிக்க வைக்க வழி செய்துவிட வேண்டும் என அங்கிருக்கும் ஆசிரியர் முடிவுசெய்கிறார்.
அவர் எழுதும் அடுத்த கதையில் புலிவேஷக் காட்சி ஒன்றைக் கதையில் உருவாக்குகிறார். அந்த இடத்தில் அசோகமித்திரன் கதையை இவ்வாறு முடிக்கிறார்.
“நான் காதருக்குக் கடிதம் போட்டேன். நான்கு நாள்களில் வழக்கம் போல அக்கடிதம் திரும்பி வந்தது. விலாசதாரர் இல்லையென்று.
சர்மா வெள்ளையை அழைத்துக் கொண்டு காதரைத் தேடினார். நாங்களும் எங்கெங்கோ விசாரித்துத் தேடினோம். கதாநாயகன் எதிரிக்கோட்டைக்குள் நுழையும் காட்சி எடுக்கப்பட வேண்டிய நாள் நெருங்கிக் கொண்டே வந்தது. காதர் கிடைக்கவில்லை.
அவன் கிடைத்திருந்தாலும் அதிகம் பயன் இருந்திருக்காது. அந்த ஒரு மாதத்துக்குள் வெளியான ஒரு படத்தில் கிராமிய சங்கீதத்துடன் அந்தக் கதாநாயகன் காவடி எடுப்பதாகக் காட்சி வந்திருந்தது. அந்தப் படம் தமிழ்நாடெல்லாம் தாங்க முடியாத கூட்டத்தைக் கூட்டிக் கொண்டிருந்தது.
நாங்கள் எடுக்கும் படத்தில் கதாநாயகன் கரகம் எடுப்பதாகத் தீர்மானிக்கப்பட்டது.”
வாழ்வின் பாதைகளெங்கும் சதா இதுபோன்ற நிகழ்வுகள் பலருக்கும் நடந்துகொண்டே இருக்கும். இந்தக் கதையில் வரக்கூடிய காதரைப்போல தான் நம் வாழ்வும். நாம் புலியைவிட நன்றாக, புலி ஆட்டம் ஆடக்கூடியவராக இருந்தாலும் பலருக்கும் எதார்த்த வாழ்வில் காதர்களாக தான் அமைந்துவிடுகிறது.
புலியைப் போன்று நாம் கம்பீரமானவர்களாக நம்மை நினைத்துக்கொண்டாலும், புலியாகவே இருந்தாலும் காதரைப் போலக் கூனிக்குறுகி வாய்ப்பு தேடத்தான் இந்த உலகம் சதா நிந்திக்கிறது. புலிவேஷமே போட்டாலும் மனிதர்களாகத்தான் பார்க்கப்படுவார்கள்.
அசோகமித்திரன் தன் கதைகளில் எந்த ஒரு தீர்வையோ, நியாயத்தையோ முன் வைப்பதில்லை.
மாறாக அவர் சாமானியர்களின் வாழ்வை அவர்களின் பார்வையிலேயே பதிவு செய்கிறார். அவை ஒரு உலகை நம் கண்முன்னே விவரிப்பார்.
அந்த உலகில் கதை மாந்தர்கள் தனக்கான நியாய தர்மத்தைக் கடைப்பிடித்தபடி வாழ்ந்து கொண்டிருப்பார்கள். அவரின் 18-வது அட்சக்கோடு நாவல் கிட்டத்தட்ட ஒரு வரலாற்று நாவல் போல இருக்கும்.
ஒரு வரலாற்று சம்பவம் நிகழும்போது அது சாமானியர்களை எந்தவிதமாக ஆட்கொள்கிறது என அந்த நாவல் பேசும்.
18-வது அட்சக்கோடு காட்டுவது இந்திய தேசிய விடுதலையின் ஒரு முக்கியமான வரலாற்றுச் சந்தர்ப்பம். ஹைதராபாத் நிஜாம் பாகிஸ்தானுடன் இணைய அல்லது தனித்தியங்க விரும்புகிறார்.
அதன்பொருட்டு மதவெறி தூண்டிவிடப்படுகிறது. நெருக்கமானவர்கள் கூட சட்டென்று மதவேற்றுமை பாராட்டி எதிரி ஆகிறார்கள். ரசாக்கர்களின் அடிதடி அரசியலுக்கு அஞ்சி மக்கள் அநாதைகளாக தப்பி ஓடுகிறார்கள்.
அதையொட்டி நிகழும் சம்பவங்கள் தான் நாவல். அவரது மற்றொரு முக்கியமான நாவலான தண்ணீர் நாவலும் அப்படியான ஒன்றுதான்.
‘தண்ணீர்’ என்பது நாவலின் தலைப்பானாலும், தண்ணீர்ப் பிரச்னை விரிவாகச் சொல்லப்பட்டாலும் தண்ணீர் இந்நாவலின் மையமில்லை.
நாவல் முழுதும் நகரின் வறட்சியும், தண்ணீருக்காக மக்கள் அல்லல் படுவதும் வெளிக்கோடாக இருப்பினும் உள் வரைவாக ஜமுனா என்பவளின் வாழ்க்கை வருகிறது.
அவள்தான் நாவலின் மையம். அவள் தன் தங்கை சாயாவுடன் ஒரு வீட்டின் ஒண்டுக் குடித்தனம் இருக்கிறாள். அவளை பாஸ்கர் ராவ் என்பவன் சினிமா ஆசைகாட்டி ஏமாற்றுகிறான்.
அவளை மையமாகக் கொண்டு பல கதாபாத்திரங்களைப் பிணைத்து எழுதப்பட்டிருக்கும் நாவல்.
அசோகமித்திரனது பாத்திரப் படைப்புகளும் அலாதியானவை. வறுமை, ஆசை, நிராசை, விரக்தி, கையாலாகாதகோபம் போன்ற பலவித உணர்ச்சிகளுக்கு அதிக இடம் கொடுப்பவை அவரது பாத்திரங்கள்.
இந்நாவலில் வரும் பாத்திரங்களான ஜமுனா, சாயா, டீச்சர், அவளது மாமியார், பாஸ்கர்ராவ், வீட்டுச்சொந்தக்காரி அனைவருமே இத்தகைய உணர்வுகளைப் பிரதிபலிக்கிறார்கள்.
‘எந்தச் சமூகத்துக்கும் கற்பனை நிறைய அவசியம். கற்பனை இருந்தா தான் நாம எதைப் பத்தியும் திட்டமிட முடியும். சராசரி ஆளுக்கோ, எழுத்தாளருக்கோ மட்டுமில்லை. ஒரு பொறுப்புள்ள அரசாங்கத்துக்கும் கற்பனை தேவைப்படுகிறது’.
இறப்பதற்கு சில மாதங்களுக்கு முன் அசோகமித்திரன் அளித்த நேர்காணலில் இவ்வாறு கூறினார். ஆடம்பரமற்ற சொற்களால், மொழிநடையால் தமிழ் எழுத்துலகில் அரியாசனத்தில் அமர்ந்தவர் அசோகமித்திரன். அவரின் பிறந்தநாளில் அவரை நினைவு கூர்வோம்.
– நன்றி: ஆனந்த விகடன்