முன்னாள் சபாநாயகர் சேடப்பட்டி முத்தையா மறைவு!

மதுரை மாவட்டம் டி.கல்லுப்பட்டி அருகே உள்ள முத்தப்பன்பட்டியை சேர்ந்தவர் சேடப்பட்டி முத்தையா. முன்னாள் சபாநாயகரான இவர் வயது முதிர்வு காரணமாக அடிக்கடி உடல் நலம் பாதிக்கப்பட்டார்.

கடந்த 2 மாதமாக அவரது உடல்நிலை மிகவும் பாதிக்கப்பட்டதால், மதுரையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் இன்று மதியம் அவர் சிகிச்சை பலனின்றி காலமானார். அவருக்கு வயது 77.

தீவிர எம்.ஜி.ஆர். ரசிகரான சேடப்பட்டி முத்தையா அ.தி.மு.க.வின் ஆரம்ப காலத்தில் இருந்தே கட்சிப் பணியாற்றி வந்தார். கடந்த 1991-ம் ஆண்டு சேடப்பட்டி தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்று தமிழக சட்டசபை சபாநாயகரானார். 

1991 முதல் 1996-ம் ஆண்டு வரை சபாநாயகராக பொறுப்பு வகித்த இவர் 1998-ம் ஆண்டு நடந்த நாடாளுமன்றத் தேர்தலில் அ.தி.மு.க. சார்பில் பெரியகுளம் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்று மத்திய அமைச்சரானார்.

தரைவழி போக்குவரத்து இணை அமைச்சராக பொறுப்பு வகித்தார். அந்த நேரத்தில் வாஜ்பாயின் அரசு ஒரு ஓட்டில் கவிழ்ந்தது.

அப்போது சேடப்பட்டி முத்தையாவின் நடவடிக்கையில் ஜெயலலிதாவுக்கு அதிருப்தி ஏற்பட்டதால் அவரை கட்சியில் இருந்து ஓரம் கட்டினார்.

இதனால் அ.தி.மு.க.வில் இருந்து விலகி தி.மு.க.வில் இணைந்த சேடப்பட்டி முத்தையா, இறுதிக்காலத்தில் சொந்த ஊரான முத்தப்பன்பட்டியில் குடும்பத்தினருடன் வசித்து வந்த நிலையில் உடல் நலம் பாதித்து காலமானார்.

You might also like