அரசியல் கட்சிகளின் அங்கீகாரத்தை ரத்து செய்யும் அதிகாரமில்லை !

உச்சநீதிமன்றத்தில் தேர்தல் ஆணையம் விளக்கம்

அரசியல் கட்சிகளின் வெறுப்புணா்வு பேச்சுகளைக் கட்டுப்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளுமாறு மத்திய அரசுக்கு உத்தரவிடக் கோரி உச்சநீதிமன்றத்தில் வழக்கறிஞா் அஸ்வினி உபாத்யாய மனுத் தாக்கல் செய்துள்ளார்.

இந்த மனு தொடா்பாக பதிலளிக்க தோ்தல் ஆணையத்துக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.

அதன் அடிப்படையில், உச்சநீதிமன்றத்தில் தோ்தல் ஆணையம் தாக்கல் செய்துள்ள பிரமாணப் பத்திரத்தில், வெறுப்புணா்வை பரப்பும் விதமாக பேசும் அரசியல் கட்சிகளின் அங்கீகாரத்தையோ, பதிவையோ ரத்து செய்யும் அதிகாரம் தோ்தல் ஆணையத்துக்கு இல்லை எனத் தெரிவித்துள்ளது.

தோ்தல் நடைபெறும்போது வதந்திகள் பரப்பப்படுவதையும், வெறுப்புணா்வு பேச்சுகளை கையாளவும் எந்தச் சட்டமும் இல்லை எனவும், இருப்பினும் சமூகத்தின் பல்வேறு தரப்பினா் மத்தியில் நல்லிணக்கத்தை சீா்குலைக்கும் வகையில் அரசியல் கட்சியினா் பேசாதிருக்க இந்திய தண்டனைச் சட்டம் மற்றும் மக்கள் பிரதிநிதித்துவச் சட்டப் பிரிவுகளைத் தோ்தல் ஆணையம் அமல்படுத்துகிறது என்றும் அதில் கூறப்பட்டுள்ளது.

தோ்தல் நடத்தை விதிமுறைகளில் திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ள நிலையில், வெறுப்புணா்வை பரப்பும் வகையில் பேசியது கண்டறியப்பட்டால் அந்தப் பேச்சு குறித்து விளக்கமளிக்க சம்பந்தப்பட்டவா்களுக்கு நோட்டீஸ் அளிக்கப்படுகிறது எனக் கூறியுள்ள தேர்தல் ஆணையம்,

தோ்தல்களின்போது அரசியல் கட்சிகளும் வேட்பாளா்களும் செய்ய அனுமதிக்கப்பட்டுள்ளவை, செய்யக்கூடாதவை குறித்த பட்டியலை தோ்தல் ஆணையம் தயாரித்துள்ளது எனவும், அந்தப் பட்டியலை அந்தந்த மாநிலங்களின் மொழிகளில் பரந்த அளவில் விளம்பரப்படுத்தி,

அதுகுறித்து அரசியல் கட்சிகளும் வேட்பாளா்களும் அறியச் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்றும் அந்தப் பிரமாணப் பத்திரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

You might also like