“கடைசியில் பாருங்கள்! காங்கிரஸ் கட்சியில் காந்திகள் (சோனியா காந்தி, ராகுல்காந்தி, பிரியங்கா காந்தி) மட்டுமே எஞ்சி இருக்கப்போகிறார்கள்’’ என 7 ஆண்டுகளுக்கு முன்னரே ஹிமந்தா பிஸ்வா சர்மா சாபமிட்டார்.
யார் இவர்?
ஹிமந்தா பிஸ்வா சர்மா – அசாம் முதலமைச்சர். பாஜகவைச் சேர்ந்தவர். ஆனால் காங்கிரசில் நீண்ட காலம் இருந்தவர். ராகுல் காந்தியின் போக்கு பிடிக்காமல் 2015-ம் ஆண்டு காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகினார். அந்த சமயத்தில் அவர் சொன்னது தான், முதல் பாராவில் உள்ள வரிகள்.
அண்மை நிகழ்வுகளைப் பார்த்தால் அவரது சாபம் பலித்துவிடும் என்றே தோன்றுகிறது. காங்கிரஸ் கட்சியிலிருந்து ஒவ்வொரு சக்கரமாக விலகி சென்று கொண்டிருக்கிறது.
தலைவர்கள் விலகுவது காங்கிரசுக்கு புதிதல்ல. இந்திரா காந்தி காலத்திலேயே, காங்கிரஸ் இரண்டாக பிளவு பட்டது. காமராஜர் போன்ற பெருந்தலைவர்கள் விலகினர்.
இளம் தலைவர்களும், தொண்டர்களும், இந்திரா பக்கம் நின்றதால் அகில இந்திய அளவில் காங்கிரசுக்கு எந்த பாதிப்பும் ஏற்படவில்லை.
கொஞ்ச ஆண்டுகளுக்குப் பிறகு சரத்பவாரும், இந்திராவுடன் மோதி, காங்கிரசை உடைத்தார்.
மகாராஷ்டிராவில் மட்டுமே, பாதிப்பை ஏற்படுத்தியது.
ராஜீவ் காந்தியிடம் இருந்து வி.பி.சிங் விலகிய போது, பெரிய மாற்றம் ஏதும் உருவாகவில்லை.
பறிபோன மாநிலங்கள்
ஆனால், சோனியா காந்தி, காங்கிரஸ் தலைவரான பின்னர், அந்த கட்சிக்குள் நிகழ்ந்த பிளவுகள், காங்கிரசின் அடித்தளத்தையே ஆட்டம் காண வைத்து விட்டது.
சரத்பவார் ஓடினாலும், மகாராஷ்டிராவில் காங்கிரஸ் கட்சிக்கு செல்வாக்கு குறையவில்லை.
ஆனால், இப்போது?
மம்தா பானர்ஜி விலகினார். மேற்குவங்க மாநிலத்தில் காங்கிரஸ் பூஜ்யம் ஆனது.
ராஜசேகர ரெட்டி ராஜினாமா செய்து விட்டு, தனிக்கட்சி ஆரம்பித்தார். ஆந்திராவில் காங்கிரசுக்கு முகவரியே இல்லை.
ரங்கசாமி ‘’டாடா டாடா” சொன்னார். புதுச்சேரியிலும் காங்கிரஸ் விழி பிதுங்கி நிற்கிறது.
சில மாதங்களுக்கு முன் அமரீந்தர் சிங் ராஜினாமா செய்தார். பஞ்சாப் பறி போனது.
இந்த தலைவர்களை எல்லாம், சோனியா சமாதானப்படுத்தி இருக்கலாம். செய்யவில்லை.
அதன் பிறகாவது சோனியா சுதாரித்தாரா என்றால் அதுவும் இல்லை. ராகுல் தலையில் பொறுப்பை சுமத்தினார்.
அவரது சொதப்பலால், காங்கிரஸ் கட்சி, மூத்த தலைவர்களை எல்லாம் இழந்து கொண்டிருக்கிறது.
ராகுல் இன்றைக்கு கட்சியின் அதிகாரப்பூர்வ தலைவர் இல்லை. ஆனால் அவரது எண்ணமே, கட்சியின் முடிவாகிறது.
ஜோதிர் ஆதித்யா சிந்தியாவை இழந்த கையோடு, மத்தியபிரதேச மாநிலத்தையும் இழந்துள்ளது காங்கிரஸ்.
காங்கிரசை உயிர்ப்பிக்க ’’ஜி23’’என்ற பேனரில், மூத்த தலைவர்கள் ஒன்று சேர்ந்து சோனியாவுக்கும், ராகுலுக்கும் சில ஆலோசனை அளித்தனர். அவர்கள் பொருட்படுத்தவில்லை.
விளைவு?
குலாம் நபி ஆசாத் விலகிச் சென்று விட்டார். இதன் மூலம் ஜம்மு-காஷ்மீரையும் காங்கிரஸ் தொலைத்துள்ளது.
எஞ்சி இருக்கும் தலைவர்களை தக்க வைத்துக்கொள்ளும் கடைசி முயற்சியாக அகில இந்தியத் தலைவர் தேர்தலை அக்டோபர் 17 ஆம் தேதி நடத்துவது என கட்சியின் காரிய கமிட்டி முடிவு செய்துள்ளது.
சோனியாவுக்கு உடல் நலம் சரி இல்லை.
அவர் தேர்தலில் நிற்க மாட்டார்.
மூத்த தலைவர்கள் காலில் விழாத குறையாக ராகுலை கெஞ்சியும், அவர் தலைமை பொறுப்பை ஏற்க மறுக்கிறார்.
காந்தி குடும்பத்தை தவிர வேறு யாரும் காங்கிரசை வழி நடத்த முடியாது என அந்த கட்சியில் பெரும்பாலானோர் நம்பும் நிலையில், தலைவர் பதவிக்கு போட்டியிட முடிவு செய்துள்ளார் சசிதரூர்.
இவர் திருவனந்தபுரம் தொகுதி காங்கிரஸ் எம்.பி. ஜி23 அங்கத்தினர்களில் இவரும் ஒருவர்.
ஜி23 குழுவில் உள்ள மற்ற ஆட்கள், சசிதரூரை ஆதரிப்பார்களா?
காந்தி குடும்பத்து ஆசீர்வாதம் கிடைக்குமா? என்பதெல்லாம் தெரியவில்லை.
இன்றைய தேதியில், தலைவர் தேர்தலை, காங்கிரஸ் மூத்த தலைவர்கள் ஒரு விஷயமாகவே கருதவில்லை.
ராகுல் கன்னியாகுமரியில் இருந்து தொடங்கியுள்ள ஒற்றுமை இந்தியா பாதயாத்திரை மீதே அவர்கள் கவனம் உள்ளது. எனவே காங்கிரஸ் தலைவர் தேர்தல் சூடு பிடிக்கும் எனத் தெரிகிறது.
– பி.எம்.எம்.