‘நீதிக்குத் தண்டனை’ திரைப்படத்தில் ஒலித்த மகாகவி பாரதியாரின் ‘சின்னஞ்சிறு கிளியே கண்ணம்மா’ பாடல் தான் ஸ்வர்ணலதா எனும் பாட்டுப் பறவையின் முதல் பாடல்.
’மாசி மாசம் ஆளான பொண்ணு’ என காதல் ஆலாபனை பாடிய இவரது குரல் ’ஆட்டமா தேரோட்டமா’ என்று கேப்டன் பிரபாகரனில் ஆர்ப்பரித்தது.
குறிப்பாக ஸ்வர்ணலதா என்றாலே ‘என்னைத் தொட்டு அள்ளிக்கொண்ட மன்னன் பேரும் என்னடி’ பாடல் நினைவில் வருவது தவிர்க்க முடியாததானது.
இளையராஜாவின் இசையில் ஸ்வர்ணலதா பாடிய ’மாலையில் யாரோ மனதோடு பேச.. மார்கழி வாடை மெதுவாக வீச’.. பாடல் இசை ரசிகர்களின் தனிமை இனிமை பாடாலானது.
தனிமையில் இருக்கும் பெண்ணின் காதலை ஒரு ஏகாந்தமாக ஓவியம் தீட்டி தூக்கம் வராத பொழுதுகளில் ஒரு தாலாட்டாக மாறியிருந்தது ஸ்வர்ணலதாவின் இப்பாடல்.
‘சின்னத்தம்பி’, ’இது நம்ம பூமி’, ’பாண்டித்துரை’ ஆகிய திரைப்படங்களில் இவர் பாடிய பாடல்கள் அப்படியே குஷ்புவிற்கு பொருந்திப் போனது.
‘சின்னதம்பி’ திரைப்படத்தில் இடம்பெற்ற ‘போவோமா ஊர்கோலம்… பூலோகம் எங்கெங்கும்… ’ பாடல் அப்போது பட்டித் தொட்டியெங்கும் ஒலித்து தமிழ் இசை ரசிகர்களுக்கு காணும் நேரம் ஆனந்தத்தையும்… காலம் யாவும் பேரின்பத்தையும் அளித்தது.
ஸ்வர்ணலதாவின் குரல் செய்த ஜாலங்கள் ஆயிரமாயிரம். ‘வள்ளி’ திரைப்படத்தில் இடம்பெற்ற ‘என்னுள்ளே என்னுள்ளே பல மின்னல் எழும் நேரம்’ பாடலில் ஸ்வர்ணலதாவின் குரல் காதலின் உச்சத் தருணத்தையும், அது தரும் உன்னத உணர்வை வெளிப்படுத்திக் கேட்கும் ஒவ்வொரு முறையும் மயிர்க் கூச்செறியும் உணர்வை ரசிகர்களிடம் உணர்த்தியது.
ஏ.ஆர்.ரஹ்மானின் வருகைக்கு பிறகு ஸ்வர்ணலதாவின் வெற்றியின் வீச்சு பல மடங்கு உயர்ந்தது. ‘முக்காலா முக்காபுலா’, ‘அக்கடான்னு நாங்க எடை போட்டா’ – ‘குச்சி குச்சி ராக்கம்மா.’, ‘மெல்லிசையே.. என் இதயத்தில் மெல்லிசையே’ – ‘உளுந்து விதைக்கையிலே’ – ‘ஒரு பொய்யாவது சொல் கண்ணே’, ’எவனோ ஒருவன் வாசிக்கிறான்’.. ‘பூங்காற்றிலே’ – பாடல்கள் மாஸ் ஹிட் அடித்து இசை ரசிகர்களின் இதயத்தில் ரிபீட் மோடில் கேட்கப்பட்டது.
ஏ.ஆர்.ரஹ்மானின் இசையில் ’கருத்தம்மா’ திரைப்படத்தில் ஸ்வர்ணலதா பாடிய ‘போறாளே பொன்னுத்தாயி’ பாடல் அவரின் உச்சம் என சொல்லலாம். அந்தளவுக்கு ஸ்வர்ணலதாவின் சோகம் பிழியும் குரல்…. நெஞ்சை கரைய வைத்து இதயத்தை கணக்க வைத்திருக்கும்.
இந்தப் பாடலுக்காக சிறந்த பாடகிக்கான தேசிய விருதையும் வென்றார் ஸ்வர்ணலதா.
“இன்னிசை மட்டும் இல்லையென்றால் நான் என்றோ என்றோ இறந்திருப்பேன்” என ஸ்வர்ணலதா பாடியது போலவே இன்னிசை இருக்கும் வரை ஸ்வர்ணலதா இசை ரசிகர்களின் உள்ளத்தில் இசையாய் வாழ்ந்து கொண்டுதானிருப்பார்.
நன்றி: முகநூல் பதிவு