வண்ணம் கொண்ட வெண்ணிலவு!

எஸ்.பி.பி நினைவலைகள் பற்றி நூலாசிரியர் – சித்ரா பாலசுப்பிரமணியன்

எனக்குச் சங்கீதப் பயிற்சி என்று எதுவும் இல்லை. அதற்கான வாய்ப்போ வசதியுமோகூட இல்லை. நான் அறிந்தவரை திரையிசைப் பாடல்கள் என் ரசனை சார்ந்தவையாக இருந்தன.

மிகச் சிறு வயதிலிருந்தே அதுதான் துணையாகத் தொடர்ந்தது. அம்மாவுக்குப் பாட்டுக் கேட்கும் பழக்கம் உண்டு.

காலை எழுந்ததும் அது நாலு மணியே ஆனாலும் ரேடியோவை ஆன் செய்துவிட்டுத்தான் வேலையைத் தொடங்குவார். அந்தப் பழக்கம் எனக்கும் தொற்றிக்கொண்டது.

என் பள்ளி, கல்லூரிப் பருவங்களில் பாடங்களை மனப்பாடம் செய்யும்போதுகூட அருகில் ரேடியோ சன்னமாகப் பாடிக் கொண்டிருந்தால்தான் எனக்கு மனப்பாடமே ஆகும்.

80-களில் டி.வி. வரத் தொடங்கியிருந்த நேரத்திலும் ரேடியோ எங்களது ரசனையானதாகவே இருந்தது.

முன்னிரவு நேரங்களில் வாசலில் பாய் விரித்துக்கொண்டு கால் நீட்டியபடி அமர்ந்து நானும் அம்மாவும் பாட்டுக் கேட்டபடியே பேசிக் கொண்டிருப்போம். அப்போது இந்திப் பாடல்கள் இன்னும் பிரபலம்.

முகம்மது ரஃபியும் கிஷோரும் கீதாவும் மனத்தைக் கொள்ளை கொண்ட காலம் அது.

இன்றும் எனக்கு ரேடியோதான் உறுதுணை. ஒன்றுக்கு இரண்டு டிரான்சிஸ்டர்களை வீட்டில் இரண்டு இடங்களில் வைத்திருப்பேன்.

சில நேரங்களில் இரண்டும் பாடியபடி இருக்கும். டி.எம்.எஸ்.ஸும் சுசீலாவும் ஜானகியும் எஸ்.பி.பி.யும் நாள் முழுக்கத் துணை நிற்பார்கள்.

பாடிக்கொண்டே வேலை செய்யும் பழக்கமும் பாடிக்கொண்டே தனியாக நடக்கும் பழக்கமும் எனக்கு உண்டு.

அதில் சில பாடல்கள் பிரத்யேகமாக அடிக்கடி பாடுபவையாக அமைந்துவிடுவதுண்டு. குறிப்பாக எஸ்.பி.பி.யின் ‘பாடும்போது நான் தென்றல் காற்று’.

எஸ்.பி.பி.யின் பிற்காலத்திய பாடல்களைவிடத் தொடக்ககாலப் பாடல்களில் எனக்குப் பிரேமை அதிகம்.

வாழைத்தண்டு உரிக்கும்போது கைகளில் தட்டுப்படும் மென்குளிர்ச்சியும் அதிலிருந்து கைகளில் சுற்றியிழுக்கும் மெல்லிய நாரின் வழுவழுத் தன்மையும் இளநுங்கின் மென்மையும் அந்தக் குரலில் இருப்பதுபோன்ற உணர்வு எழுந்து சிரித்துக் கொள்வேன்.

ஒருமுறை அல்ல, பலமுறை கேட்ட பின்னும் இந்த உணர்வே இன்றும் தலைதூக்கி நிற்கிறது.

இந்தப் பாடலைக் கேட்கும்போதெல்லாம் மீசை அரும்பும் ஒரு பதின்ம வயதின் பால முகம் கண்களில் தோன்றி மறையும். மனச்சோர்வு இருப்பதாகத் தோன்றும்பொழுது இந்தப் பாடலைக் கேட்டு மனம் தேற்றிக்கொள்வேன்.

“எல்லைகள் இல்லா உலகம் என் இதயமும் அதுபோல் நிலவும்” என எஸ்.பி.பி. என் முகம் தொட்டுக் கொஞ்சுவதாகக்கூட நினைப்பதுண்டு. எல்லையில்லா உலகம் நம்முன் விரிந்து கிடக்கும்போது சோகம் ஏன் என்றும் தோன்றும்.

குரல்கள் வழி மனிதர்கள் நம்மோடு உறவுகொள்வதும் அவர்கள் நம் வாழ்வில் முக்கிய அம்சமாகிப்போவதும் வியப்பான ஒன்றுதான். அந்தக் குரல் ஆறுதல் அளிக்கிறது, மகிழ்ச்சி கொள்ளச் செய்கிறது.

மென்சோகம் ஏற்படுத்தித் துக்கத்தில் ஆழ்ந்திருக்கும் சுகம் சேர்க்கிறது. சிலநேரம் கிளுகிளுப்பூட்டி ரகசியப் புன்னகைகளைத் தோற்றுவிக்கிறது. பலநேரம் நாம் உலகில் தனித்து இல்லை, பற்றிக் கொள்ள ஏதோ இருக்கிறது என்ற நம்பிக்கையை ஏற்படுத்துகிறது.

பால்யத்தில் அறிமுகமான குரல் எஸ்.பி.பி., டி.எம்.எஸ்.ஸின் ஆதிக்கம் முடிந்து இவர் எழுந்துவந்த காலகட்டம். ரேடியோவில் அடுத்தடுத்து வரும் பாடல்களில் எஸ்.பி.பி.யின் குரலை மனம் நாடும். அந்தக் குரலின் மென் அடர்த்திக்கு ஓர் ஈர்ப்பு இருந்தது.

இளமையின் உச்சிப்போதில் நிற்கும் இளைஞனின் மகிழ்வான தருணங்களைப் போலக் கவலையற்ற எதிர்காலம் குறித்த பீதிகளற்ற மகிழ்வான குரலாக எஸ்.பி.பி. அப்போது எனக்கு ஒலித்தார்.

பள்ளியிலிருந்து வீடு வர ஏறக்குறைய இருபது நிமிடங்கள் நடந்து வந்து ரயில் ஏற வேண்டும். என் கல்லூரிக் காலமும் அப்படியே ஆனது. வீடுவரை அரைமணிநேரம் நடந்துவர வேண்டும்.

ஆனால் நடக்கும் களைப்பை நான் எப்போதும் உணர்ந்ததில்லை. பாடல்கள் பாடியபடியே நடந்து கடந்துவிடுவேன். முணுமுணுக்கும் பாடல்களில் பெரும்பாலானவை எஸ்.பி.பி.யினுடையதாகவே இருக்கும்.

அதிலும் குறிப்பாக, ‘பொன்மாலைப் பொழுது’. அதைப் பாடியபடியே வெளிச்சப் புள்ளிகள் சிதறும் அந்திமாலை நேரங்களைக் கடந்திருக்கிறேன்.

வானொலி நிலையத்தில் இளைய பாரதம் தொகுப்பாளராக இருந்தபோது எப்பொழுது எனக்கு நிகழ்ச்சி எனினும் இந்தப் பாடலை விடாமல் ஒலிபரப்பிவிடுவது உண்டு.

அதற்குத் தகுந்தாற்போலக் கவிதை வரிகளை இணைத்துக் கோத்து அந்தப் பாடலை ஒலிக்கச் செய்வதில் அலாதி இன்பம் எனக்கு.

“எல்லைகள் இல்லா உலகம்” என்று பாடிய அதே எஸ்.பி.பி. இன்று “வானம் எனக்கொரு போதிமரம்” என்று பாடுகிறார். என் கூடவே வளர்ந்த ஒரு இளைஞனைப் பார்ப்பது போல எனக்குள் குறுகுறுப்புத் தோன்றுவதுண்டு.

எஸ்.பி.பி. நமக்குள் பாடலின் மனநிலையைக் கொண்டுதருவதில் வல்லவர். உற்சாகம், துள்ளல் என்றால் அதுவும் ஒட்டிக்கொள்ளும்.

“இதுக்குப்போய் அலட்டிக்கலாமா” என்று அவர் பாடுகையில் அதானே என்று நம்மை நாமே கேட்டுக்கொள்வோம்.

“ஒரே நாள் உனை நான் நிலாவில் பார்த்தது” என்றால் மனத்தில் காதல் ஒட்டிக்கொள்ளும்.

சில இந்திப் பாடகர்களின் அழுத்தமான சோகம் எஸ்.பி.பி.யின் குரலில் இல்லை.

“கொட்டும் மழைக் காலம் உப்பு விற்கப் போனேன்
காற்றடிக்கும் நேரம் மாவு விற்கப் போனேன்
தப்புக் கணக்கைப் போட்டுத் தவித்தேன்”

-என்று அவர் தவிக்கும்போதுகூட அதிகம் அறிமுகம் அற்ற இறப்பு வீட்டின் ஒன்றில் மென்சோகத்தோடு நாம் வேடிக்கை பார்க்கும் உணர்வு எழும்.

எனக்குப் பிடித்த, ஆனால் நான் கேட்க விரும்பாத பாடல் எஸ்.பி.பி.யின் குரலில் உண்டு. ‘வெண்மேகம் மண்ணில் வந்து பன்னீர் தூவும்’. அந்தப் பாடலை அடுத்து வரும் காட்சிகளில் இந்தப் பாடலுக்குரிய தங்கை கொல்லப்படுவாள்.

அது அண்ணன் மகிழ்ச்சியான தருணத்திற்காகப் பாடும் பாடல் என்றே சூழல் அமைந்தாலும் அச்சூழல் அப்படியே நீடிக்கப்போவதில்லை என்று எஸ்.பி.பி.யின் குரல் உணர்த்தும். ஏதோ ஒரு கனமான உணர்வு தோன்றுவதை இன்றுவரை மாற்றிக்கொள்ள முடியவில்லை.

அதனால் அந்தப் பாடலைக் கேட்பதைத் தவிர்க்கவே விரும்புவேன்; ஆனாலும் அந்தப் பாடல் எனக்கு ரொம்பப் பிடிக்கும்.

பெரும்பாலும் பாடலில் வரும் உணர்வு நம் வாழ்வில் ஏதோ ஓர் இழப்புணர்வைத் தொட்டுவிடுகிறது. இழந்துபோய்விட்ட அழகிய தருணங்கள் அல்லது இனி மீண்டு வரவே முடியாத அற்புதக் கணங்களின் ஏக்கம் மனத்தில் மீதூறி எழுகிறது.

அந்த மாயத்தை நிகழ்த்திவிடும் செயலை எஸ்.பி.பி. எப்பொழுதுமே செய்துவிடுவார்.

முற்பகலில் இளவெயிலின் உணர்வையும் கைமீறிப் போய்விட்ட காலத்தின் ஏக்கத்தையும் தரும் இன்னொரு பாடல் ‘பூந்தளிர் ஆட பொன்மலர் சூட’.

என்றோ ஒரு பொன்னுலகத்தில் வாழ்ந்த தருணத்தின் தீரா ஏக்கம் இந்தப் பாடலைக் கேட்கும்போதெல்லாம் ஏற்படுவதுண்டு.

எஸ்.பி.பி. தனக்குத் தரப்படும் வரிகளைத்தான் பாடுகிறார். அந்தத் திரைக்கதையின் சூழலை உணர்ந்துதான் பாடுகிறார். ஆனாலும் அவர் குரலில் ஏதோவொரு மாயம் நிகழ்ந்து நமக்குள் வேறோர் உணர்வு புகுந்துவிடுகிறது.

மனம் விசித்திரமானது. அது சங்கிலித் தொடர்போலச் சிலவற்றை இணைத்துத் தன் சேமிப்பில் வைத்துக் கொள்ளக்கூடியது.

சற்றே காற்றடித்து அந்தச் சங்கிலி சிணுங்கினாலும் மீண்டும் மெல்லிய ஒலிப் பரவலை எழுப்பி நினைவுகளை அது மீட்டெடுக்கும். அப்படி ஒன்றை எஸ்.பி.பி. எனக்காகச் செய்திருக்கிறார்.

‘அக்னி சாட்சி’ படம் வெளியாகியிருந்த வேளை. அத்திரைப்பட கதாநாயகி போலவே என் தாயும் மனப்பிறழ்வில் ஆழ்ந்திருந்தார். ஏறக்குறைய இரண்டு ஆண்டுகள் நீடித்த தீரா வேதனை மிகுந்த நாட்கள் அவை.

கீழ் நடுத்தர வர்க்கத்தைச் சேர்ந்த எங்களால் ஓரளவிற்கும் மேல் மருத்துவ வசதிகளை நாட முடியவில்லை. மாநில அரசில் பணிபுரிந்த என் தந்தை தன்னால் முயன்றவரை அனுசரணையாக அம்மாவைக் கவனித்துக்கொண்டார்.

அப்பொழுதெல்லாம் எங்கள் வீட்டு ரேடியோவில் எஸ்.பி.பி.யின் ‘கனாக் காணும் கண்கள் மெல்ல’ என்னும் பாடல் வரும்பொழுதெல்லாம் நான் அம்மாவை அணைத்தபடி அவள் பார்க்காதவாறு என் கண்களில் வழியும் நீரை மறைத்துக் கொள்வேன்.

கிழக்கு வெளுக்காமல் இருக்காது நாளும்
விடியும் நாள் பார்த்து இருப்பேனே நானும்
வரும்காலம் இன்பம் என்று
நிகழ்காலம் கூறும் கண்ணே

– வரிகளை எஸ்.பி.பி. பாடும்போது என் மனத்தில் அவர் நம்பிக்கையை ஊட்டினார்.

என்ன மாதிரியான குரல் அது. தோள்களில் தழுவிக் கொண்டு தலை தடவி ஆறுதல் சொன்ன குரல் அல்லவா அது.

வாழ்வு இன்னமும் மீதம் இருக்கிறது, கலங்க வேண்டாம் என்று நம்பிக்கை அளித்த குரல் அல்லவா அது. இன்றும்கூட அந்தப் பாடலைக் கேட்பதுண்டு.

கேட்கும்போதெல்லாம் லேசான மென் சோகத்தோடு ஒரு துளிக் கண்ணீர் என் கண்களில் வராமல் இருந்ததில்லை.

நம்பிக்கை அளிக்கக்கூடிய வாழ்வுதான் இன்று வாய்த்திருக்கிறது. ஆனால் அன்று ஆறுதல் சொன்னவர் எஸ்.பி.பி.தானே.

அவர் திரையிசைப் பாடகர் மட்டுமல்லர். அந்தக் குரல் வாழ்நாள் முழுவதும் உடன் வரும் இனிய வழித்துணை. சுமைகளை இறக்கிவைத்து இளைப்பாற உதவும் சுமைதாங்கிக் கல். அவரே பாடியதுபோல வண்ணம் கொண்ட வெண்ணிலவு.

நூல் விவரம்:

எங்கேயும் எப்போதும்
எஸ்.பி.பி.நினைவலைகள்
தொகுப்பாசிரியர்: அரவிந்தன்
விலையடக்கப் பதிப்பு ரூ. 125
காலச்சுவடு இணையதள இணைப்பு:
https://books.kalachuvadu.com/…/u0b8eu0b99u0b95u0bafu0…/
அச்சுநூலின் இணைய இணைப்பு: https://www.amazon.in/dp/B0BC4DP7S4/
மின்நூலின் இணைய இணைப்பு: https://www.amazon.in/dp/B0BC4HWVC4/

You might also like