கட்சியில் மாற்றம் வருமா?
கடந்த ஜுலை மாதம் அதிமுக பொதுக்குழு கூடி, கட்சியின் தற்காலிக பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிச்சாமியை தேர்வு செய்தது.
திரளான பொதுக்குழு உறுப்பினர்கள், எம்.எல்.ஏ.க்கள், மாவட்ட செயலாளர்கள் எடப்பாடி பக்கம் நின்றார்கள். இதனால் தெம்பாகவும், உற்சாகமாகவும் இருந்தார்.
அதன் பின் எடப்பாடி பழனிசாமிக்கு சறுக்கல்கள் ஆரம்பித்தன. எடப்பாடியை அங்கீகரிக்க மறுத்து உயர்நீதிமன்றம் அளித்த தீர்ப்பு முதல் சறுக்கல்.
அதன் பின்னர் அவருக்கு தொடர்ச்சியாக பின்னடைவு தான். பாஜக மேலிட ஆதரவைப் பெற அவர் மேற்கொண்ட முயற்சி தோல்வியில் முடிந்தது.
நீதிமன்ற தீர்ப்பையடுத்து, ’’ஒன்றாக இணைந்து செயல்படுவோம்’’ என ஓ.பன்னீர்செல்வம் அழைப்பு விடுத்தார்.
அதனை நிராகரித்ததன் மூலம், ’’எடப்பாடி இமாலய தவறு செய்து விட்டார்’’ என அரசியல் நோக்கர்கள் சொல்ல ஆரம்பித்தனர். அவர்கள் சொன்னது நிஜமாகிக் கொண்டிருக்கிறது.
அணி மாறும் எம்.எல்.ஏ.க்கள்
எடப்பாடி, எம்.ஜி.ஆரோ.. ஜெயலலிதாவோ அல்ல. அந்த ஆளுமை மிக்கத் தலைவர்கள், ஆணையிட்டால், யாரும் கேள்வி கேட்க முடியாது. விரல் அசைவுக்கு தொண்டர்கள் கட்டுப்படுவார்கள்.
இன்று என்ன நடக்கிறது?
எடப்பாடியின் கைப்பிடியில் அதிமுக இல்லை. எம்.எல்.ஏ.கக்ள் மற்றும் மாவட்ட செயலாளர்கள், தங்களுக்கென்று ஒரு கூட்டத்தை உருவாக்கி கொண்டுள்ளதால், அதிருப்தியில் உள்ள உள்ளூர் நிர்வாகிகளும் தொண்டர்களும், ஓபிஎஸ் பக்கம் சாய ஆரம்பித்து விட்டனர்.
எடப்பாடி பக்கம் இதுவரை இருந்த உசிலம்பட்டி எம்.எல்.ஏ. அய்யப்பன், ஓபிஎஸ் பக்கம் வந்து விட்டார். இன்னும் பலர் வர உள்ளதாக தகவல்.
கே.பாக்யராஜ்
நடிகரும், இயக்குநருமான கே.பாக்யராஜ், ஓபிஎஸ், அணியில் சேர்ந்துள்ளார்.
எடப்பாடியின் கோட்டை எனப்படும் கொங்கு மண்டலத்தை சேர்ந்த பாக்யராஜ், ஓபிஎஸ் பக்கம் வந்திருப்பது, எடப்பாடிக்கு அதிர்வலைகளை ஏற்படுத்தி இருப்பது நிஜம்.
ஏன்?
பாக்யராஜ், எம்.ஜி.ஆர். காலத்து ஆள். இன்னும் சொல்லப்போனால், அவர் எம்.ஜி.ஆரின் ஆள். “எனது கலை உலக வாரிசு‘’ என எம்.ஜி.ஆரால் பகிரங்கமாக அறிவிக்கப்பட்டவர் பாக்யராஜ்.
அது மட்டுமல்ல – பாக்யராஜுக்கு, அதிமுகவில் அரசியல் அந்தஸ்தையும் எம்.ஜி.ஆர். வழங்கினார்.
1984 ஆம் ஆண்டில் தமிழகம் முழுவதும் உள்ளாட்சித் தேர்தலில் அதிமுக வேட்பாளர்களை ஆதரித்து பிரச்சாரம் செய்தவர் பாக்யராஜ்.
அப்போது உடல்நலம் குன்றி இருந்ததால், புரட்சித்தலைவரால் பிரச்சாரத்துக்கு செல்ல முடியவில்லை. தனக்குப்பதிலாக பாக்யராஜை அனுப்பி வைத்தார்.
முந்தானை முடிச்சு, தாவணிக் கனவுகள் என சூப்பர் – டூப்பர் படங்களைக் கொடுத்து பாக்யராஜ் உச்சத்தில் இருந்த நேரம் அது. எம்.ஜி.ஆருக்காக அவர் பிரச்சாரம் செய்தார்.
ஓசூரில் ஆரம்பித்து தமிழகம் முழுவதும் இரவு-பகலாக அதிமுக வேட்பாளர்களுக்கு ஆதரவு திரட்டினார்.
பழனிச்சாமியை எடப்பாடியில் கூட பலர் அறிந்திராத சமயத்தில் சேலம் மாவட்டத்தில் பாக்யராஜ் கிராமம் கிராமமாக சென்றார்.
பாக்யராஜுக்கு ஒவ்வொரு ஊரிலும் திரளும் கூட்டம், அடுத்த நிமிடமே எம்.ஜி.ஆரை சென்றடையும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
அந்தத் தேர்தலில் அதிமுக மிகப்பெரிய வெற்றியை அடைந்திருக்க வேண்டும்.
எம்.ஜி.ஆர். கவனத்துக்கு கொண்டு செல்லாமல், இரண்டாம் கட்ட தலைவர்கள், நிறுத்திய வேட்பாளர்களால், நகரசபைகளில் அதிமுக வெற்றி பாதிக்கப்பட்டது.
மீண்டும் பாக்யராஜ்
எம்.ஜி.ஆர். மறைவுக்கு பிறகு அதிமுகவில் ஏகப்பட்ட விரும்பத்தகாத நிகழ்வுகள் ஏற்பட்டன. அதில் ஒன்று – ’’எம்.ஜி.ஆர். மக்கள் முன்னேற்ற கழகம்‘’ எனும் பெயரில் பாக்யராஜ் தனிக்கட்சி ஆரம்பித்து, கலைஞர்-ஜெயலலிதா ஆகிய இரு பெரும் ஆளுமைகளை ஒரே நேரத்தில் எதிர்கொண்ட நிகழ்வு. வெற்றி கிடைக்கவில்லை.
அரசியலுக்கு முழுக்குபோட்டார்.
கிட்டத்தட்ட 30 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் அரசியல் களத்தில் குதித்துள்ளார்.
எம்.ஜி.ஆர். காலத்து ஆட்களுடன், இப்போதும் நல்ல தொடர்பில் இருப்பவர் பாக்யராஜ்.
ஓபிஎஸ்சுக்கு, அவர் ஒரு நம்பிக்கை நட்சத்திரம் என்பதில் சந்தேகமில்லை.
பாக்யராஜையும் சேர்த்துக்கொண்டு தமிழகம் முழுக்க ஓபிஎஸ் பயணம் மேற்கொள்ள திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது.
“இந்த பயணத்தால் அதிமுகவில் பெரும் மாற்றம் ஏற்படும்’’ என கட்சி தொண்டர்கள் நம்பிக்கையுடன் உள்ளனர்.
– பிஎம்எம்.