மணா-வின் சாதி என்பது குரூரமான யதார்த்தம் நூல் விமர்சனம்:
◆ நூலாசிரியர் மணா ஒரு பத்திரிகையாளர் – ஊடகத்துறையில் 42 ஆண்டுகள் இயங்கி வருபவர். இதுவரை 44 நூல்களையும் 14 ஆவணப் படங்களையும் படைத்தவர். இடதுசாரி சிந்தனையாளரும் கடவுள் மறுப்பாளரும் சமரசமற்ற எழுத்தாளருமாக வாழ்ந்து கொண்டிருக்கிறவர்.
◆ மணா எண்ணற்ற பிரபலங்களை பல்வேறு இதழ்களுக்காக பல சுவையான நேர்காணல்களை நடத்தியவர். அந்த வரிசையில் பேராசிரியர் தொ.பரமசிவனுடன் நடத்திய சிறப்பான நேர்காணலையும் சில கட்டுரைகளையும் தொகுத்து இந்த நூலைப் படைத்துள்ளார் !
◆ தமிழக பண்பாட்டு ஆய்வாளரும், சமகாலத்தில் வாழ்ந்த சமூகவியல் ஆய்வாளரும், நாட்டார் தெய்வங்கள் பெரும் தெய்வங்களின் சமூக மரபுகள் என்று பல விஷயங்களை கள ஆய்வு செய்து வெளிச்சத்திற்கு கொண்டவந்தவருமான அறிஞர் – முனைவர் பேராசிரியர் தொ. பரமசிவன்.
◆ இந்த நூலில் தொ.பரமசிவன் பற்றி அவரது நண்பரும் பேராசிரியருமான மு.ராமசாமி, ‘தொ. பரமசிவன் என்ற கருஞ்சட்டை அறிஞர்’ என்ற தலைப்பில் எழுதியுள்ள கட்டுரை தொ.ப.வை படம் பிடித்துக் காட்டுகிறது !
◆ “தொ. பரமசிவத்தின் ஆய்வு எழுத்துக்களில் இலக்கியம் இருக்கும். மக்கள் வழக்கு அதனினும் முக்கியமாக இருக்கும். இரண்டையும் இணைக்கிற ஒரு வரலாற்றின் தொடர்ச்சியும் அதற்குள் இருக்கும். அவரது ஞானக் குருக்களில் முக்கியமானவர் பெரியார்! பெரியார் சிந்தனையால் வெகுவாக ஈர்க்கப்பட்டவர் தொ.பரமசிவன்!
பெரியார் சிந்தனை என்றிருந்தாலே அதற்கு மனிதத்தை மதிக்கிற மார்க்சியமும் அம்பேத்கரியமும் உள்ளமுங்கியே இருக்குமென்பதுதான் அறிவியல் !”… இவ்வாறு தொ.ப.வையும் பெரியாரையும் விவரிக்கும் மு. ராமசாமி எழுதிய சிறந்த கட்டுரை இந்த நூலில் உள்ளது!
◆ தொ.பரமசிவனுடன் மணா நடத்திய நேர்காணல் நமக்கு நிறைய தகவல்களை தருகிறது. தொ.ப.வின் பள்ளிக்காலம், பாளையங்கோட்டை, கல்லூரி நாட்கள், தமிழ் ஆய்வுப் பணி, ஆசிரியர் பணி, ஆராய்ச்சி களம், முனைவர் பட்டத்திற்காக – அழகர் கோயில் பற்றிய ஆய்வு, நாட்டார் மரபுகள், சாதி பற்றிய தெளிவுகள் இப்படி பல செய்திகள் !
◆ இந்த நூலின் சிறப்பாக நான் கருதுவது – தொ. ப. சாதி பற்றிய தனது கருத்துக்களை தெளிவாக வெளிப் படுத்தியதுதான். அதன் காரணமாகத்தான் இந்த நூலின் தலைப்பை – சாதி என்பது குரூரமான யதார்த்தம் என மணா பெயரிட்டாரோ?
◆இனி தொ. பரமசிவன் அய்யாவின் வார்த்தைகளிலேயே அதை புரிந்து கொள்வோம்:
“நம் நாட்டில் மிகப்பெரிய சமூக நிறுவனம் கோவில் தான்! மற்ற சமூக நிறுவனங்கள் எல்லாம் அழிந்து போய் விட்டன. காலனி ஆட்சியில் எல்லாம் அழிந்தது போக, மிஞ்சியது கோவிலும் – சாதியும் தான்!”
◆ “சாதி என்பது குரூரமான யதார்த்தம்! சமூகம் என்பதே இங்கு சாதியின் அடுக்குகளால் ஆனது. இதை மாற்ற வேண்டும் என்பதே வேறு விஷயம். ஆனாலும் இதை தவிர்க்க முடியவில்லை. இங்கே தனி நபர்கள் என்று யாரும் இல்லை! எல்லோர் மீதும் விரும்பியோ, விரும்பாமலோ சாதி போர்த்தப் பட்டிருக்கிறது!
◆ “மதத்திற்குள்ளும் சாதி வேறுபாடுகள் பாராட்டுவதை பெரியார் கண்டித்தார். குடிஅரசு இதழில் எழுதினார். இடதுசாரி ஆராய்ச்சியாளர்கள் மீது எனக்கு கடுமையான கோபம் உண்டு. அவர்கள் திராவிட இயக்க எழுத்தை விமர்ச்சித்தார்கள். ஆனால் அதை முழுமையாக படிக்கவில்லை. பெரியாரின் எழுத்துக்களை படிக்காமலேயே அவரை நிராகித்தார்கள். இது பெரிய தவறு!”
◆ “வர்க்கத்துக்கும் சாதிக்குமான உறவை மிகச் சரியாக புரிந்து கொண்டவர் பெரியார்! வர்க்கத்தின் மூல வடிவமாகத்தான் சாதியைப் பார்த்து, சாதி ஒழிப்பில் கவனம் செலுத்தினார்! இடதுசாரிகள் அப்படிச் செய்தார்களா?”
◆ “1954ல் பொதுவுடைமை தோழர் ஏ.எஸ்.கே. அய்யங்கார் தனது ‘பகுத்தறிவுச் சிகரம் பெரியார்’ என்ற நூலில் – பெரியாரை இடதுசாரி தோழர்கள் சரிவரப் புரிந்து கொள்ள வில்லை என்று வருத்தப்படுகிறார். அந்த வருத்தத்திற்கான காரணங்கள் இன்னமும் இருக்கின்றன!”
◆ “1997ல் மதுரையில் பெரியாரைப் பற்றி மூன்று நாட்கள் கருத்தரங்கம் நடத்தினோம். பொதுவுடைமை சித்தாந்தத்தில் நம்பிக்கை உள்ளவர்கள் தமிழகம் முழுவதும் இருந்து வந்திருந்தார்கள்! அதன் முடிவில் வலியுறுத்தப்பட்ட விஷயம் – பெரியாரை மீட்டெடுக்க வேண்டும்!”
◆ “மதம் மாற அனுமதித்தது மாதிரி, சாதி மாற ஏன் இந்திய அரசியல் சட்டம் அனுமதிக்க வில்லை? அதனால் இந்தியாவில் பல பிரச்சனைகள் தீர்ந்து விடும்!”
◆ “முதலில் சாதி மறுப்பைக் கோவில் கருவறைகளிலிருந்து துவங்குங்கள்! பிறப்பினால் மேலாண்மையைக் கோவில்கள் மூலமாக தக்க வைத்துக் கொள்கிற வரைக்கும், ஆன்மீக அதிகாரத்தையும் அதன் மூலம் அரசியல் அதிகாரத்தையும் உயர் சாதி தக்க வைத்துக் கொண்டிருக்கிறது!”
◆ “மேல், கீழ் என்கிற அடுக்கு முறையை நியாயப்படுத்துகிற எல்லாமே பிராமணியம் தான்! அது ஒரு ஒடுக்குமுறை கருத்தியல்! முதலாளித்துவம் என்று இதை மார்க்சிஸ்ட்கள் சொல்கிறார்கள்! இதையே பிராமணியம் என்று சொன்னார் பெரியார்!”
◆ இவ்வாறு சாதி பற்றியும், சாதிய அமைப்பை பற்றியும், பிராமணியம் பற்றியும், தந்தை பெரியார் பற்றியும் அனைவரும் புரிந்து கொள்ளும் வகையில் தனது நேர்காணலில் பேராசிரியர் தொ. பரமசிவன் தந்த பதில்களும், அவைகளை சிறப்பாக வெளிக் கொணர கேள்விகளை அமைத்த மணாவும் பாராட்டிற்குரியவர்கள்!
சிறிய நூலில் சீரிய கருத்துக்களை கொண்ட படைப்பு!
சாதி என்பது குரூரமான யதார்த்தம்!
தொகுப்பாசிரியர்: மணா
வெளியீடு: டிஸ்கவரி பப்ளிகேஷன்ஸ்
முதல் பதிப்பு – 2022
பக்கங்கள் 64
விலை ரூ.80/-
பொ. நாகராஜன், பெரியாரிய ஆய்வாளர்.