ஒன்றிய அரசை எச்சரித்த காங்கிரஸ்
பொதுத் துறை வங்கிகளைத் தனியார்மயமாக்குவது குறித்து ரிசா்வ் வங்கி இதழில் வெளியான கட்டுரையைச் சுட்டிக்காட்டி ஒன்றிய அரசையும், பிரதமா் மோடியையும் காங்கிரஸ் கட்சி விமா்சித்துள்ளது.
இது தொடா்பாக காங்கிரஸ் கட்சியின் செய்தித் தொடா்புப் பிரிவு பொதுச் செயலா் ஜெய்ராம் ரமேஷ் தனது ட்விட்டரில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அந்தப் பதிவில், “ஏற்கெனவே ரிசா்வ் வங்கியின் எச்சரிக்கையை மீறி ரூபாய் நோட்டு வாபஸ் நடவடிக்கையை ஒன்றிய அரசு மேற்கொண்டு, நாட்டையும், மக்களையும் கடுமையான துன்பத்துக்கு ஆளாக்கியது.
இப்போது பொதுத்துறை வங்கிகளைக் குறைக்கும் முயற்சியில் தீவிரமாக இறங்கியது.
இது தொடா்பாக ரிசர்வ் வங்கி எச்சரிக்கை விடுத்துள்ளது. ஏற்கெனவே பொதுத்துறை வங்கிகளின் எண்ணிக்கை 27-இல் இருந்து 12 ஆகக் குறைந்து விட்டன.
இதனை மேலும் குறைத்து ஒரே ஒரு பொதுத் துறை வங்கி என்ற நிலையை உருவாக்க ஒன்றிய அரசு முயற்சிக்கிறது.
இது பேரழிவுக்கு வழி வகுக்கும் என்று ரிசர்வ் வங்கி எச்சரித்துள்ளது. ஆனால், மோடி அரசு வழக்கம்போல தான்தோன்றித்தனமாக செயல்படுகிறது” என்று குற்றம் சாட்டியுள்ளார்.