– ஆய்வில் அதிர்ச்சித் தகவல்
மனச்சோர்வு, ஆண்களைவிட பெண்களுக்கு அதிகம் ஏற்பட வாய்ப்புள்ளதாக சமீபத்திய ஆய்வு ஒன்றில் தெரியவந்துள்ளது.
மனச்சோர்வு, மன அழுத்தம் என்பது இன்றைய தலைமுறையில் இருக்கும் தலையாய பிரச்னை. தொழில்நுட்ப வளர்ச்சிக்கு ஏற்ப, மாறிவரும் உணவுப் பழக்கவழக்கம், நடத்தைகள் என இதற்கு பல காரணங்களைக் கூறலாம்.
இது சாதாரணமாக அனைவருக்கும் அவ்வப்போது இருப்பதுதான் என்றாலும் தொடர்ந்தோ அல்லது அதிகமாகவோ இருந்தால் அதனால் ஏற்படும் விளைவுகள் அதிகம்.
எனவே, மனச்சோர்வு ஏற்படும்போது அதை சரிசெய்துகொள்வதற்கான வழிகளையும் கண்டறிந்து செயல்படுத்த வேண்டும். முடியாத சூழ்நிலையில் மனநல மருத்துவரை அணுகுவது நல்லது.
இந்நிலையில் மனச்சோர்வு குறித்த சமீபத்திய ஓர் ஆய்வில், ஆண்களைவிட பெண்களுக்கு மனச்சோர்வு ஏற்படும் அபாயம் அதிகம் என கண்டறியப்பட்டுள்ளது.
‘பையாலஜிக்கல் சைக்காட்ரி’ என்ற இதழில் இதன் முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன.
கலிபோர்னியா பல்கலைக்கழகம், பிரின்ஸ்டன் பல்கலைக்கழக ஆய்வாளர்கள் இணைந்து மேற்கொண்ட ஆய்வில், மனச்சோர்வு ஏற்படும்போது மூளையில் நியூக்ளியஸ் அக்யூம்பென்ஸ் பகுதியில் தாக்கத்தை ஏற்படுத்துகிறது.
நியூக்ளியஸ் அக்யூம்பென்ஸ், மகிழ்ச்சி, உந்துதல், சமூக இணக்கம் ஆகியவற்றுக்கு உதவுகிறது.
இதில், ஆண்கள் மனச்சோர்வு அடையும்போது அவர்களின் மூளையில் இந்த நியூக்ளியஸ் அக்யூம்பென்ஸில் பெரிதாக பாதிப்பு ஏற்படுவதில்லை என்றும் அதுவே பெண்களுக்கு பாதிப்பு இருப்பதாகவும் கண்டறியப்பட்டுள்ளது.
RGS2 என்ற புரோட்டீன் ஜீனும் மனச்சோர்வுடன் தொடர்புடையது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
– நன்றி: வார இதழ்