சித்ரா: கலையை நேசிக்கும் குயில்!

பாடகி சித்ராவுடைய குரலின் இனிமை ஒவ்வொரு ஆன்மாவின் அடியாழத்தைத் தொடும் ஆற்றல் படைத்தது.

இடைவெளியே இல்லாமல் நீண்ட காலமாக உச்சத்தில் இருக்கும் ஒரே பெண் பாடகி சித்ரா தான்… 6 தேசிய விருதுகளைப் பெற்ற ஒரே இந்தியப் பெண் பாடகியும் அவர் தான்.

1985-பாடறியேன் படிப்பறியேன் (சிந்து பைரவி)
1986- கண்ணா வருவாயா (மனதில் உறுதி வேண்டும்)
1987 -புத்தம் புது ஓலை வரும் (வேதம் புதிது)
1988- நின்னுக்கோரி வர்ணம் – (அக்னி நட்சத்திரம்)
1989 – ஓ ப்ரியா ப்ரியா (இதயத்தைத் திருடாதே)
1990- சின்னப் பொண்ணுதான் வெட்கப்படுது (வைகாசி பொறந்தாச்சு)
1991- தூளியிலே ஆடவந்த (சின்னத்தம்பி)
1992- ருக்குமணி ருக்குமணி (ரோஜா)
1993- அஞ்சலி அஞ்சலி (டூயட்)
1994- தென்கிழக்குச் சீமையிலே (கிழக்குச் சீமையிலே)
1995 – கண்ணாளனே (பம்பாய்)
1996- மலர்களே மலர்களே (லவ் பேர்ட்ஸ்)
1997 – ஊ லலல்லா ஊ லலல்லா (மின்சாரக் கனவு)
1998- உன் மார்பில் விழி மூடித் தூங்குகிறேன் (நினைத்தேன் வந்தாய்)
1999 – தீண்டாய் மெய் தீண்டாய் (என் சுவாசக் காற்றே)
2000- எங்கே எனது கவிதை (கண்டு கொண்டேன் கண்டுகொண்டேன்)
2001- நீதானா என் தேசிய கீதம் (பார்த்தாலே பரவசம்)
2002- கரிசக் காட்டுப்பூவே (ராஜா)
2003- இதுதானா இதுதானா (சாமி)
2004 – ஒவ்வொரு பூக்களுமே (ஆட்டோகிராப்)
2006 வருகிறாய் (அன்பே ஆருயிரே)
2008 – இதயம் இடம் மாறியதே (ஜோதா அக்பர்)
2009- யாரோ யாருக்குள் இங்கு யாரோ (சென்னை 28)
2010- நான் போகிறேன் மேலே மேலே (நாணயம்)
2011- சந்திக்காத கண்களில் (180)
2014- மௌனம் பேசும் (அமர காவியம்)
2015 – மலர்கள் கேட்டேன் வனமே தந்தனை (ஓ காதல் கண்மணி)
2016 – கொஞ்சிப் பேசிட வேணாம் (சேதுபதி)
– என்று அவருடைய உயரம் எந்தக் காலகட்டத்திலும் மாறவேயில்லை..
எல்லாம் சரியாக இருக்க வேண்டும் என்பதற்கான அவருடைய மெனக்கெடல் அனைத்துத் துறைகளிலும் இருப்பவர்கள் கற்க வேண்டிய பாடம்.

பாடல் பதிவு, பாடல் பதிவுக்கான ஒத்திகை, சர்வதேச இசைக் கச்சேரி, உள்ளூர்க் கச்சேரி, தொலைக்காட்சி நிகழ்ச்சிக்கான பாடல், நேர்காணல், போட்டியாளர்களுக்குக் கற்றுத் தரும் போது பாடுதல் என்று எந்த விதமான பேதத்தையும் அவரிடம் காண முடியாது.

சுதி விலகாமல், தாளம் பிசகாமல் ஸ்வரக் கட்டின் கம்பீரம் குலையாமல் பிரவாகித்துக் கொண்டேயிருக்கும் சங்கீத நதி அவர். காது, மூக்கு, தொண்டை நிபுணர் தொண்டை வலிக்காகத் திறக்கச் சொன்னால் கூட அவர் சுதி விலகாமல்தான் வாய் திறப்பார்.

ஜானகி, எஸ்.பி.பி, ஜேசுதாஸ், மலேசியா, ஜெயச்சந்திரன், ஜென்சி ஆகியோர் ராஜா பள்ளியைச் சேர்ந்தவர்கள்.

சுஜாதா, ஸ்வர்ணலதா, ஹரிஹரன், ஷாகுல் ஹமீது, சங்கர் மகாதேவன், சாதனா சர்கம், உன்னி கிருஷ்ணன், உன்னி மேனன், சின்மயி, ஸ்ரீனிவாஸ், கார்த்திக், நரேஷ் அய்யர், மால்குடி சுபா, அனுபமா, உதித் நாராயணண், சுக்வீந்தர் சிங், எம்.ஜி.ஸ்ரீ குமார், சித் ஸ்ரீராம் ஆகியோர் ரஹ்மான் பள்ளியைச் சேர்ந்தவர்கள்..

மனோ, சித்ரா ஆகிய இருவரை மட்டுமே இரண்டு பள்ளிகளின் கலவை என்று குறிப்பிடலாம். அதுவும் சித்ராவிடம் இருவரின் குணாதிசயங்கள் கூட உண்டு. ஆம் அவர்தான் நிஜமான ‘இளையமான்’

ஜானகியம்மா கம்பீரமானவர். சித்ரா பணிவானவர்.. இளையராஜா, எஸ்பிபி, ஜேசுதாஸ், ஜானகியம்மா ஆகியோர் முன்னிலையில் அவர் காட்டுகிற பணிவு அலாதியானது.

தன்னை விட இளையவர் எனினும் அவர் மனதளவில் ரஹ்மான் மீது வைத்திருப்பதும் குரு மரியாதைதான். ஒட்டுமொத்தமாக அனைத்து மொழிகளிலும் சேர்த்து ரஹ்மான் இசையில் நூற்றுக்கும் மேற்பட்ட பாடல்களைப் பாடிய ஒரே பெண் பாடகி சித்ராதான்.

தனிப்பட்ட வாழ்க்கையில் ஆயிரம் துயரங்கள் இருந்தாலும், தேவையில்லாத செண்டிமெண்டுகளை அவர் பொதுவெளியில் வெளிப்படுத்தியதில்லை. அவர் கலையை மலினப்படுத்தாத அபூர்வமான கலைஞர்.

– நன்றி: மானசீகன் முகநூல் பதிவு

You might also like