பொய் வேஷம் போட்டுத் திரிய என்னால் முடியாது!

– ஜெயகாந்தன் சொன்ன பதில்

கேள்வி : இலக்கிய அபிமானிகள்  உங்களைப் புரட்சி எழுத்தாளர், சிறுகதை மன்னர் என்றெல்லாம்  அழைப்பதை நீங்களே விமர்சிக்கிறீர்களே.. ஏன்?

ஜெயகாந்தன் பதில் : ஏனெனில்  புரட்சி என்றால் என்னவென்று எனக்குத் தெரியும். அதில் எனது பங்கு எவ்வளவு என்றும் எனக்குத் தெரியும்.

நான் எழுகிற ஒவ்வொரு எழுத்தும், எனது இயக்கத்தின் ஒவ்வொரு அசைவும் பொதுவாக எல்லோரும் நினைக்கிற புரட்சியை நோக்கமாகக் கொண்டது என்று பொய் வேஷம் போட்டுத்  திரிய என்னால் முடியாது.

புரட்சியின் நாயகர்களான கார்ல் மார்க்ஸை, லெனினை யாரும் புரட்சி எழுத்தாளர் என்று சொல்வதில்லை.

‘சிறுகதை மன்னன்” என்கிற அடைமொழி பற்றியும் எனது விமர்சனம் இதுவே.

செகாவையோ, மாப்பசானையோ அப்படி யாரும் சொல்வதில்லை. அப்படி எல்லாம் சொல்வது இலக்கிய அபிமானம் ஆகாது. அது என் மீதுள்ள அபிமானமே என்று நான் புரிந்து கொள்கிறேன்.

கேள்வி : என் வாசகர்களுக்குப் பிடித்தது இது தான் என்று ஒரே மாதிரியாகக் குறுகிய நோக்கில் எழுதலாமா?

ஜெயகாந்தன் பதில் :  வாசகர்களுக்குப் பிடித்ததை நான் எழுதுவதில்லை. நான் எழுதுவதை விரும்புகிறவர்களே என் வாசகர்கள்”

– ‘ஆனந்த விகடன்’ (25.03.1973) வார இதழில் வெளியான ஜெயகாந்தனுடனான பேட்டியில் இருந்து ஒரு பகுதி.

You might also like