இந்தியாவின் 15-வது குடியரசுத் தலைவராகிறார் முர்மு!

குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்தின் பதவிக்காலம் வரும் 24ம் தேதியுடன் நிறைவடைகிறது. இதனால், நாட்டின் 15-வது குடியரசுத் தலைவரைத் தேர்வு செய்வதற்கான தேர்தல் கடந்த 18ம் தேதி நடந்தது.

இதில், பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியின் சார்பில், பழங்குடி இனத்தை சேர்ந்த ஜார்கண்ட் முன்னாள் ஆளுநர் திரவுபதி முர்முவும், எதிர்க்கட்சிகள் சார்பில் முன்னாள் ஒன்றிய அமைச்சர் யஷ்வந்த் சின்காவும் வேட்பாளராக போட்டியிட்டனர்.

குடியரசுத் தலைவர் தேர்தலில் பதிவான வாக்குகள் நேற்று எண்ணப்பட்டன. முதலில் நாடாளுமன்ற ஓட்டுப் பெட்டியில் இருந்த வாக்குகள் எண்ணப்பட்டன. மொத்தம் 748 எம்.பி.க்களில் திரவுபதி முர்மு 540 எம்.பி.க்களின் வாக்குகள் பெற்று முன்னிலை பெற்றார். யஷ்வந்த் சின்கா 208 எம்.பி.க்களின் வாக்குகள் பெற்று பின்தங்கினார்.

அதன் பின்னர் எம்எல்ஏக்கள் பதிவு செய்த வாக்குகளை எண்ணும் பணி நடைபெற்றது. 20 மாநிலங்களில் பதிவான வாக்குகள் எண்ணி முடிக்கப்பட்ட நிலையில், மெஜாரிட்டிக்கு தேவையான வாக்குகளை விட அதிக வாக்குகள் பெற்றார் முர்மு.

3வது சுற்று வாக்கு எண்ணிக்கை முடிவில் திரவுபதி முர்மு 50 சதவீத வாக்குகளை கடந்ததால் அவர் குடியரசுத் தலைவராக தேர்வாகியிருப்பது உறுதியானது.

அதன்பின்னர் மீதமுள்ள மாநிலங்களின் வாக்குகள் எண்ணி முடிக்கப்பட்ட நிலையில், அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டது. குடியரசுத் தலைவர் தேர்தலில் பாஜக கூட்டணி வேட்பாளர் திரவுபதி முர்மு வெற்றி பெற்றதாக தேர்தல் அதிகாரி பி.சி.மோடி அறிவித்தார்.

திரவுபதி முர்மு 6,76,803 வாக்குகளும், எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளர் யஷ்வந்த் சின்ஹா 3,80,177 வாக்குகளும் பெற்றுள்ளனர்.

திரவுபதி முர்மு 64 சதவீத வாக்குகளையும் பெற்று வெற்றி பெற்றுள்ளார்.

யஷ்வந்த் சின்ஹாவுக்கு 36 சதவீத வாக்குகள் கிடைத்துள்ளன. இதன்மூலம் நாட்டின் 15வது குடியரசுத் தலைவராக திரவுபதி முர்மு பதவியேற்க உள்ளார்.

25ம் தேதி டெல்லியில் நடக்கும் விழாவில், அவருக்கு உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி என்.வி.ரமணா பதவிப் பிரமாணம் செய்து வைக்க உள்ளார்.

You might also like