காசாங்காடு குலதெய்வக் கோயில் பயண அனுபவம்!

சமீபத்தில் பட்டுக்கோட்டை அருகிலுள்ள காசாங்காடு என்ற கிராமத்திற்குச் சென்ற தனது பயண அனுபவத்தை அழகாகப் பதிவுசெய்துள்ளார் திரைப்பட இயக்குநர் சரசுராம்.

நீங்களும் அந்தப் பதிவை படியுங்கள்…

அழகான சூழல். ஆள் அரவமற்ற பகுதி. மிகச் சுத்தமாக இருந்தது கோயில். பாடிக்காட் முனீஸ்வரர் கோயில் – காசாங்காடு. பட்டுக்கோட்டை. நண்பரின் குலதெய்வ கோயில்.

தொடர் கதை விவாத இடைவெளிகளில் மனம் இளைப்பாற வேறொன்றை தேடத்தான் செய்கிறது. வெளியே எங்காவது போய் வரலாம் என்றேன்.

எனக்கு புதிய இடங்கள் போவதில்தான் பெரும் விருப்பம். அதுவே என் இளைப்பாறல்! நண்பர் காரில் எங்களை கூட்டிக் கொண்டு போனார்.

கம்பீரமான அந்த முனீஸ்வரர் மிரட்டலாக இருந்தார். ஆங்காங்கே வேண்டுதலுக்காய் வைக்கப்பட்ட சிலைகள் புன்னகையோடு எங்களிடம் ஏதேதோ கதைகள் சொல்வதுபோல் இருந்தது. நாங்களும் விடவில்லை.

அடர்த்தியான மரநிழலுடன் குளிமையாய் ஒரு இடம் கிடைத்தது. சிறிது நேரம் அமர்ந்து எங்கள் கதையைப் பேசினோம்.

சுற்றிலும் இருந்த சிலைகள் அதை காதுகொடுத்து கூர்ந்து கவனிப்பதாக தோன்றியது.

நடுவே நகரும் காலம் சிரித்தபடி ஏதோ எழுதுவதுபோல் இருந்தது. அதைத்தான் நான் எப்போதும் அற்புதமான திரைக்கதை என்பேன்” என்று எழுதியுள்ளார் சரசுராம்.

– நன்றி: முகநூல் பதிவு

You might also like