நெருக்கடி காரணமாக இங்கிலாந்து பிரதமர் பதவியில் இருந்து போரிஸ் ஜான்சன் விலகியதை அடுத்து, அடுத்த பிரதமரைத் தேர்வு செய்யும் நடவடிக்கையில் இங்கிலாந்து ஆளும் கன்சர்வேட்டிவ் கட்சி ஈடுபட்டது.
புதிய பிரதமர் பதவிக்கான தேர்தலில் போட்டியிடுவதாக இந்திய வம்சாவளியைச் சேர்ந்த எம்.பி.க்கள் ரிஷி சுனக், சூவெல்லா பிரேவர்மன் மற்றும் மந்திரிகள் லிஸ் டிரஸ், பென்னி மார்டன்ட் உள்பட 11 பேர் அறிவித்தனர்.
கடைசி நேரத்தில் போக்குவரத்து மந்திரி கிராண்ட் ஷேப்ஸ், ரகுமான் சிஸ்டி, முன்னாள் சுகாதார மந்திரி சஜித் ஜாவித் ஆகியோர் விலகுவதாக அறிவித்த நிலையில், களத்தில் 8 பேர் உள்ளனர்.
இந்நிலையில் நேற்று நடைபெற்ற முதல் சுற்று வாக்குப்பதிவில் கன்சா்வேட்டிவ் கட்சியின் 358 எம்.பி.க்கள் வாக்களித்தனா்.
இதில் 88 வாக்குகள் பெற்று முதலிடம் பிடித்த இங்கிலாந்து முன்னாள் நிதியமைச்சரும், இந்திய வம்சாவளியை சேர்ந்தவருமான ரிஷி சுனக், அடுத்த சுற்றுக்கு முன்னேறினார்.
வர்த்தக மந்திரி பென்னி மொர்டான்ட் 67 வாக்குகள், வெளியுறவு மந்திரி லிஸ் டிரஸ் 50 வாக்குகள், முன்னாள் மந்திரி கெமி படனாக் 40 வாக்குகள், டாம் டுகெந்தாட் 38 வாக்குகள் பெற்று அடுத்தடுத்த இடங்களை பெற்றனர்.
மற்றொரு இந்திய வம்சாவளியான சூவெல்லா பிரேவா்மன் 32 வாக்குகள் பெற்று அடுத்த சுற்று வாய்ப்பை பெற்றார்.
இரண்டாம் சுற்றுக்கு 30 வாக்குகளை பெற வேண்டிய நிலையில், நாதிம் சகாவி, ஜெரிமி ஹண்ட் ஆகியோரும் முறையே 25, 18 வாக்குகள் பெற்று வாய்ப்பை இழந்தனர். இன்று 2-ம் சுற்று தேர்தல் நடைபெறுகிறது.
இந்த சுற்றில் போட்டியாளர்கள் எண்ணிக்கை 6 ஆக குறைந்துள்ளது. கடைசி இருவா் தோ்ந்தெடுக்கப்படும் வரை பலசுற்றுகளாக வாக்குப்பதிவு நடைபெறும்.
புதிய பிரதமராக தோந்தெடுக்கப்படுபவரின் பெயா் வரும் செப்டம்பா் மாதம் 5-ந்தேதி அறிவிக்கப்படுகிறது.