இனி நான் எனக்குள்ளேயே ஒடுங்க மாட்டேன்!

பாப்லோ நெரூடா, உலகம் போற்றிய சிலி நாட்டு புரட்சிக் கவிஞர். உலகப் புரட்சியாளர்களால் நேசிக்கப்பட்டவர். நோபல் பரிசு பெற்றவர். எல்லாவற்றுக்கும் மேலாக கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினர்.

அவரது கவிதைகள் தோழர் ஆர்.என்.கே. அவர்களுக்கு மிகவும் பிடிக்கும்.

எனது அரசியல் கட்சிக்கு…..                 

அறிமுகமற்ற மனிதர்களிடமும்

நீ எனக்கு சகோதரத்துவம் கொடுத்தாய்

வாழ்ந்து கொண்டிருக்கும் எல்லாவற்றின் மொத்த

வலிமையையும்

நீ எனக்குக் கொடுத்தாய்

ஒரு புதிய பிறப்புப் போல

நீ எனது தேசத்தை எனக்குக் கொடுத்தாய்

தனியனான மனிதனுக்குக் கிடைக்காத சுதந்திரத்தை

நீ எனக்குக் கொடுத்தாய்

நெருப்புப் போலக் கனன்றெரியச் செய்ய

நீ எனக்குக் கற்றுக் கொடுத்தாய்

ஒரு மரத்துக்குத் தவிர்க்க இயலாத உயரத்தை

நீ எனக்குக் கொடுத்தாய்

மனிதர்களின் ஒருமையையும், பன்முகத் தன்மையும் காண

நீ என்னைத் தகுதியானவனாக்கினாய்

எல்லோருடைய வெற்றியிலும்

என்னுடைய அந்தரங்கத் துயர்கள்

இறந்து போவது எவ்வாறு என்று

நீ எனக்குக் காட்டித் தந்தாய்

எனது சகோதரர்களின் கடினப் படுக்கைகளில் இளைப்பாற

நீ எனக்குக் கற்றுக் கொடுத்தாய்

பாறைமீது உருவாக்குவது போல

யதார்த்தத்தின் மீது நிர்மாணம் மேற்கொள்ள

நீ என்னைத் தூண்டினாய்

மந்த புத்திக்காரன் மீது விழும் சாட்டை போல

கொடுஞ் செயல்களுக்கு என்னை எதிரியாக்கினாய்

உலகத்தின் புத்துணர்வையும் சுகத்தின் சாத்தியங்களையும்

நீ எனக்குக் கற்றுக் கொடுத்தாய்

நீ என்னை இறப்பற்றவனாக்கி இருக்கிறாய்

எவ்வாறெனில்

இனி நான் எனக்குள்ளேயே ஒடுங்க மாட்டேன்.

    – பாப்லோ நெரூடா.       தமிழில்: சுகுமாரன்

You might also like