சமூகத்துக்குப் பாடம் நடத்தும் நூலாசிரியர்!

நூல் அறிமுகம்:

கவிஞர் பிருந்தா சேது எழுதிய நூல் கேளடா மானிடவா. குழந்தை வளர்ப்பும் பெற்றோரும் என்ற தலைப்பை முன்வைத்து எழுதப்பட்ட கட்டுரைகளின் தொகுப்பு நூல். ஹெர் ஸ்டோரிஸ் பதிப்பகத்தின் வெளியீடாக வந்திருக்கிறது.

இருபது தலைப்புகளின்கீழ் மாறுபட்ட பார்வையில் குழந்தை வளர்ப்புப் பற்றி எழுதியுள்ளார் பிருந்தா சேது.

தன் கட்டுரைகள் பற்றி முகவுரையில் பேசியுள்ள அவர், “நீ ஆண்கள் சார்பாகவே பேசி இருக்கே என்று சில நண்பர்களும், நீ பெண்கள் சார்பாகவே பேசி இருக்கே என சில நண்பர்களும் கோபித்துக் கொண்டார்கள்.

உண்மையில், நான் குழந்தைகளுக்காகவும் அவர்களின் வருங்காலத்திற்காகவுமே அக்கறை கொண்டு எழுதியதாக உணர்கிறேன்.

ஒரு சூழல் மாற வேண்டும் என்றால், தற்போதைய அதன் நிலையை உணர்வதும் மாறுவதும் நிகழவேண்டும்; பிறகு, எதிர்காலத்தில் அதைப் புதிதாக மாற்றியமைப்பதும் நிகழ வேண்டும். அந்த இரு கோணங்களில்தான் இந்தக் கட்டுரைகளை எழுதினேன்” என்று விளக்கம் தருகிறார்.

மிக முக்கியமாக, மகளுடன் நிகழ்ந்த உரையாடல்களைச் சொல்ல வேண்டும். இதை எழுதும் காலம், எனக்கும் அவருக்குமான உறவு இன்னும் சீர்ப்பட்டது;

மேலும் நெருக்கமானது; எப்போது பெற்றவளாகவும் எந்த நேரத்தில் உற்றவளாகவும் இருக்க வேண்டும் என எனக்குக் கற்றுக் கொடுத்ததாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்த நூலுக்கு ‘புதிய தரிசனம்’ என்ற தலைப்பில் திலகவதி ஐபிஎஸ் எழுதிய அணிந்துரையை ‘தாய்’ இணையதள வாசகர்களுக்காக இங்கே வழங்குகிறோம்.

`நீங்கள் எதையும் செய்யாதவரை எதுவும் செயல்படப்போவதில்லை’ என்கிறார் அமெரிக்கக் கவிஞரும், சமூகச் செயற்பாட்டாளருமான மாயா ஏஞ்சலோ.

பெண்களின் நிலை, அவர்களுக்கு மறுக்கப்படும் உரிமைகள், இழைக்கப்படும் கொடுமைகள், குழந்தைப் பருவத்தில் ஆண், பெண் இருபாலரும் எதிர்கொள்ளும் பிரச்னைகள்… இவற்றையெல்லாம் பலகாலமாகப் பேசி வருகிறோம்.

ஆனால், இவற்றுக்கான தீர்வுகளை முன்வைத்திருப்பவர்கள் நம்மில் வெகு குறைவே. அப்படி முன்வைக்கப்படுபவையும் ‘இது இப்படித்தான்…’, ‘இதை இப்படி அணுகினால்தான் சரிவரும்…’ என தீர்க்கமான, அழுத்தம் திருத்தமான தீர்வுகளாக இருப்பதில்லை.

‘கேளடா மானிடவா’ என்கிற இந்தக் கட்டுரை நூலில் இவை அனைத்தையும் உள்ளடக்கி, கையில் பிரம்பெடுக்காத குறையாக சமூகத்துக்கே பாடம் நடத்தியிருக்கிறார் எழுத்தாளர் பிருந்தா சேது.

ஒவ்வொரு கட்டுரையும் எதையோ நமக்கு விவரிப்பதுபோல அல்லாமல், நம்முடன் நெருங்கிய நண்பர் உரையாடுவதுபோன்ற உணர்வை ஏற்படுத்துவது, இந்தக் கட்டுரைகளின் மிகப்பெரிய பலம்.

பாலியல் வன்கொடுமை, சைல்டு அப்யூஸ், மீ டூ, பதின் பருவம், காதல், ஆண்-ஆண்மை, பாலியல் கல்வி, குழந்தை வளர்ப்பு… என இன்றைக்குப் பேசித் தீரவேண்டிய, உணர்ந்து தெளியவேண்டிய அத்தனை பேசுபொருள்களும் இந்தக் கட்டுரைகளுக்குள் அடங்கியிருக்கின்றன.

சில கருத்துகளை ஆணித்தரமாக பிருந்தா சேது எடுத்துரைக்கும்போது வியப்பேற்படுகிறது.

ஒரு கட்டுரையில் ‘ஆகச்சிறந்த, பெண்ணியத்திற்கு வித்திட்ட பெரியார் அவர்களே பெண்களுக்குத்தான் அறிவுரை கூறுகிறார். பெண்களைக் கர்ப்பப்பையை வெட்டி எடுத்துவிடச் சொல்கிறார். முடியை ’க்ராப்’ வைத்துக்கொள்ளச் சொல்கிறார்.

ஆண்களுக்கென்று அவர் எதையும் சொல்லவில்லை. அவர்களின் எதையும் மாற்ற நிர்பந்திக்கவில்லை’ என்று குறிப்பிடுகிறார் பிருந்தா.

பெரியார் வாழ்ந்த காலகட்டத்தில் அவர் கருத்துகளெல்லாம் பெரும் தாக்கத்தையும், புரட்சிகர எண்ணங்களையும் கிளர்ந்தெழச் செய்தவை.

இப்போது யோசித்துப் பார்த்தால், பிருந்தா முன்வைக்கும் கேள்வியின் நியாயமும் புரிகிறது.

வழிகாட்டுதல், அறிவுரை என்பவையெல்லாம் ஒருவர்மீது ஏற்படும் அக்கறையின் பொருட்டு எழுபவையே. ஆனால் அறிவுரை சொல்பவரைப் பார்த்தாலே தெறித்து ஓடுவது மனித இயல்பு.

இந்த நூலும் ஒரு வகையில் அறிவுரை (வழிகாட்டல்) வகையைச் சேர்ந்ததுதான். மனிதக்குலத்தின் மீது தீராத நேசமும் அக்கறையும் கொண்டிருப்பவர் பிருந்தா சேது. அதன் வெளிப்பாடுதான் இந்தக் கட்டுரைத் தொகுப்பு.

பெண்களை, குழந்தைகளை எப்படி அணுகவேண்டும் என்பதைக் கற்றுத்தரும் கையேடு என்றுகூட இந்த நூலைச் சொல்லலாம்.

ஒவ்வொரு கட்டுரையையும், ‘எதையும் கேள்வி கேள்’ என்கிற சொற்றொடரோடு நிறைவு செய்கிறார் பிருந்தா சேது. கேள்வி கேட்காததன் பலனைத்தான் இன்றைய சமூகம் அறுவடை செய்துகொண்டிருக்கிறது.

இத்தொகுப்பிலுள்ள ஒரு கட்டுரையில் ஆண்களிடம், ‘உங்களை நீங்களே கேட்டுக் கொள்ள வேண்டியவை’ என 60 கேள்விகளை முன்வைத்திருக்கிறார் இந்நூலாசிரியர்.

இன்றைய சூழலுக்கு ஏற்ப, ஒரு புதிய கோணத்தில், எளிய மொழியில் விரிகிறது ‘கேளடா மானிடவா.’

இந்நூல் நமக்கு ஏற்படுத்துவது ஒரு புதிய தரிசனத்தை!

****

கேளடா மானிடா: பிருந்தா சேது

(குழந்தை வளர்ப்பும் பெற்றோரும்)

வெளியீடு: ஹெர் ஸ்டோரிஸ், சென்னை 

விலை ரூ. 150

பா. மகிழ்மதி

You might also like