அதிமுகவில் பல்வேறு குழப்பங்கள் சூழ்ந்துள்ள நிலையில், உள்ளாட்சி பதவிகளுக்கான வேட்பாளர்களின் படிவத்தில் கையெழுத்திடுவது யார்? என்ற கேள்வி எழுந்துள்ளது.
தமிழகத்தில் காலியாக உள்ள உள்ளாட்சி அமைப்புகளுக்கு ஜூலை 9-ம் தேதி இடைத்தேர்தல் நடைபெறும் என்று மாநில தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
அதன்படி ஊரக உள்ளாட்சி அமைப்புகளில் காலியாக உள்ள இரண்டு மாவட்ட கவுன்சிலர், 20 ஊராட்சி ஒன்றிய கவுன்சிலர், 40 ஊராட்சி தலைவர்கள் உள்ளிட்ட 510 பதவிகளுக்கு தேர்தல் நடைபெற உள்ளது.
இந்தப் பதவிகளுக்கான வேட்புமனு தாக்கல் கடந்த 20 ஆம் தேதி தொடங்கியது. வேட்புமனு தாக்கல் செய்ய இன்று கடைசி நாள் ஆகும். எனவே இன்று மாலை 5 மணிக்குள் வேட்புமனுக்களை தாக்கல் செய்ய வேண்டும்.
இந்த 510 பதவிகளில், மாவட்ட கவுன்சிலர், ஒன்றிய கவுன்சிலர், நகராட்சி மற்றும் மாநகராட்சி கவுன்சிலர் உள்ளிட்ட 34 பதவியிடங்ளுக்கு கட்சி அடிப்படையில் தேர்தல் நடைபெறுகிறது.
இந்த பதவிகளுக்கு கட்சி சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கு அந்த கட்சிகளின் சின்னங்களை ஒதுக்கீடு செய்ய ஏ மற்றும் பி என்ற இரண்டு படிவங்களை சமர்பிக்க வேண்டும். படிவங்களில் சம்பந்தபட்ட கட்சித் தலைவர்கள் கையெழுத்திட வேண்டும்.
அதிமுகவில் பொதுச் செயலாளர் பதவி நீக்கப்பட்ட பின்னர் ஒருங்கிணைப்பாளர் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் தான் இந்த படிவங்களில் கையெழுத்திட்டு வந்தனர்.
அதிமுகவில் நிலவி வரும் உள்கட்சி சர்ச்சையால், ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகளே செல்லாது என எடப்பாடி பழனிசாமி ஆதரவாளர்கள் தெரிவித்துள்ளதால் இந்த படிவங்களில் யார் கையெழுத்து இடுவார்கள் என்ற புதிய சர்ச்சை அதிமுகவில் எழுந்துள்ளது.
இதனால் அதிமுக வேட்பாளர்களுக்கு இரட்டை இலை சின்னம் கிடைப்பதில் சிக்கல் எழுந்துள்ளது.