அடுத்த குடியரசுத் தலைவர்: யஷ்வந்த் சின்காவா, திரவுபதி முர்முவா?

குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் பதவிக்காலம் அடுத்த மாதம் 24-ம் தேதி நிறைவடைகிறது. அடுத்த குடியரசுத் தலைவர் ஜூலை மாதம் 25-ம் தேதி பதவி ஏற்க வேண்டும்.

இதனால் நாட்டின் அடுத்த குடியரசுத் தலைவரை தேர்ந்தெடுப்பதற்கான அரசியல் கட்சிகளின் நடவடிக்கைகள் சூடுபிடித்து வருகின்றன.

இந்நிலையில் குடியரசுத் தலைவர் தேர்தலுக்கான அதிகாரபூர்வ அறிவிப்பை தேர்தல் ஆணையம் கடந்த 9-ம் தேதி வெளியிட்டது.

இதன்படி அடுத்த மாதம் 18-ம் தேதி குடியரசுத் தலைவர் தேர்தல் நடக்க உள்ளது. இந்தத் தேர்தலில் 776 எம்.பி.க்கள், 4,033 எம்.எல்.ஏ.க்கள் வாக்களித்து புதிய குடியரசுத் தலைவரை தேர்ந்தெடுப்பார்கள்.

குடியரசுத் தலைவர் தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் கடந்த 15-ம் தேதி தொடங்கி உள்ளது. வேட்புமனு தாக்கலுக்கு வரும் 29-ம் தேதி கடைசி நாள் ஆகும்.

ஆளும் பா.ஜனதா தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் போட்டியிடும் வேட்பாளரை தேர்ந்தெடுக்க தீவிர ஆலோசனை நடந்து வந்தது. நேற்று மாலை பா.ஜனதா தலைமை அலுவலகத்தில் அக்கட்சியின் ஆட்சி மன்றக் குழு கூட்டம் நடந்தது.

அதில், பிரதமர் மோடி மத்திய அமைச்சர்கள் அமித்ஷா, ராஜ்நாத் சிங், நிதின் கட்காரி, பா.ஜனதா தலைவர் ஜே.பி.நட்டா, மத்தியபிரதேச மாநில முதலமைச்சர் சிவராஜ்சிங் சவுகான் ஆகியோர் கலந்து கொண்டனர்.

இக்கூட்டத்தில் குடியரசுத் தலைவர் தேர்தல் வேட்பாளர் பற்றி ஆலோசனை நடத்தப்பட்டது. இதற்கிடையே நேற்று இரவு பா.ஜ.க. கூட்டணி சார்பில் குடியரசுத் தலைவர் வேட்பாளரை பா.ஜ.க. தேசிய தலைவர் ஜே.பி.நட்டா அறிவித்தார்.

அதன்படி பாரதீய ஜனதா கூட்டணி சார்பில் குடியரசுத் தலைவர் வேட்பாளராக திரவுபதி முர்மு அறிவிக்கப்பட்டுள்ளார்.

இவர் பழங்குடியினர் வகுப்பைச் சேர்ந்தவர். அரசியல் ஆர்வம் காரணமாக பா.ஜ.க.வில் சேர்ந்த திரவுபதி முர்மு ராய்ரங்பூர் சட்டசபை தொகுதியில் போட்டியிட்டு எம்.எல்.ஏ. ஆனார்.

ஒடிசாவில் பா.ஜ.க., பிஜு ஜனதா தளம் கூட்டணி ஆட்சியில் (2000-2004) வர்த்தகம் மற்றும் போக்குவரத்துத் துறை அமைச்சராகவும், கால்நடை வளர்ச்சித் துறை அமைச்சராகவும் இருந்தார்.

கடந்த 2015-ம் ஆண்டு மே 18-ம் தேதி முதல் 2021-ம் ஆண்டு ஜூலை 12-ம் தேதி வரை ஜார்க்கண்ட் ஆளுநராக பதவி வகித்தார். ஜார்கண்டின் முதல் பெண் ஆளுநர் என்ற பெருமையும் திரவுபதி முர்மு பெற்றார்.

ஒடிசாவைச் சேர்ந்தவர் குடியரசுத் தலைவர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளதால் பிஜூ ஜனதா தளம் ஆதரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்தத் தேர்தலில் திரவுபதி முர்மு வெற்றி பெற்றால் இந்தியாவின் முதல் பழங்குடியின பெண் குடியரசுத் தலைவர் என்ற சிறப்பை பெறுவார்.

எதிர்க்கட்சிகள் தரப்பில் பொது வேட்பாளரை நிறுத்துவது தொடர்பாக, டெல்லியில் எதிர்க்கட்சிகளின் தலைவர்கள் கூட்டத்தை தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார் நேற்று கூட்டி இருந்தார்.

இந்தக் கூட்டத்தில் காங்கிரஸ் மூத்த தலைவர்கள் மல்லிகார்ஜூன கார்கே, ஜெய்ராம் ரமேஷ், தி.மு.க. சார்பில் திருச்சி சிவா, விடுதலை சிறுத்தைகள் தலைவர் தொல். திருமாவளவன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

இந்தக் கூட்டத்தில் எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளராக முன்னாள் மத்திய நிதியமைச்சர் யஷ்வந்த் சின்காவை நிறுத்துவது என முடிவு செய்யப்பட்டது. இதை சரத்பவார் நிருபர்களிடம் தெரிவித்தார்.

யஷ்வந்த் சின்கா, பீகார் மாநிலத்தை சேர்ந்தவர். முன்னாள் ஐ.ஏ.எஸ். அதிகாரி. 1984-ம் ஆண்டு பதவியை ராஜினாமா செய்து விட்டு அரசியல் களத்தில் குதித்தார்.

ஜனதா கட்சியின் பொதுச்செயலாளராக, ஜனதாதளம் கட்சியின் பொதுச்செயலாளராக, பா.ஜ.க.வின செய்தி தொடர்பாளராக, திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் துணைத்தலைவராக பணியாற்றி உள்ளார். நேற்றுதான் அவர் திரிணாமுல் காங்கிரசில் இருந்து விலகினார்.

யஷ்வந்த் சின்கா, சந்திரசேகர் பிரதமராக இருந்தபோது மத்திய நிதியமைச்சராக பணியாற்றி உள்ளார்.

வாஜ்பாய் பிரதமராக பதவி வகித்தபோது மத்திய நிதியமைச்சராகவும், வெளியுறவுத்துறை அமைச்சராகவும் இருந்துள்ளார்.

You might also like