வாக்காளர் அட்டையுடன் ஆதார் எண் இணைப்பு!

– மத்திய அரசு அறிவிப்பு

வாக்காளர் அடையாள அட்டையுடன் ‘ஆதார்’ எண்ணை இணைப்பதற்கான அறிவிப்பை மத்திய அரசு வெளியிட்டுள்ளது.

இது குறித்து பேசிய அவர் மத்திய சட்ட அமைச்சர் கிரண் ரிஜிஜு, “தேர்தல் ஆணையத்தின் ஆலோசனைப்படி, தேர்தல் சட்டத் திருத்த சட்டத்தின் நான்கு முக்கிய அம்சங்கள் செயல்பாட்டிற்கு வருகின்றன.

இதன்படி, ஒருவரின் பெயர் பல இடங்களில் வாக்காளர் பட்டியலில் இடம் பெறுவதைத் தடுக்க, வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதார் இணைக்கப்படும். அடுத்து, ஆண்டுதோறும் ஜனவரி-1 ல் புதிய வாக்காளர்கள் சேர்க்கப்படுகின்றனர்.

அதன் பின் 18 வயது பூர்த்தியானோர், தங்கள் பெயரை வாக்காளர் பட்டியலில் சேர்க்க ஓராண்டு காத்திருக்க நேர்கிறது. அதனால் இனி, ஜனவரி-1 ஏப்ரல்-1 ஜூலை-1, அக்டோபர்-1 ஆகிய தேதிகளில், 18 வயது பூர்த்தியானவர்கள் புதிய வாக்காளர்களாக பதிவு செய்து கொள்ளும் நடைமுறை அறிமுகமாகிறது.

இதனால் ஓராண்டில் நான்கு முறை புதிய வாக்காளர்களை சேர்க்கலாம். வெளிநாடுகளில் உள்ள இந்தியத் துாதரகங்களில் பணியாற்றுவோர், எல்லைகளில் காவல் காக்கும் ராணுவ வீரர்கள் ஆகியோர் சேவைப் பிரிவு வாக்காளர்களாக கருதப்படுவர்.

அடுத்து, வாக்களிப்பதில் பாலின சமத்துவ உரிமையை அளிக்க, மனைவி என்ற சொல்லுக்கு பதிலாக துணைவர் என்ற சொல் பயன்படுத்தப்படும். இதனால், சேவைப் பிரிவினரில் கணவன் அல்லது மனைவி சார்பில் பரஸ்பரம் வாக்களிக்க முடியும்.

இவற்றோடு, தேர்தல் தொடர்பான சாதனங்கள், ஆவணங்கள் ஆகியவற்றை வைக்கவும், பாதுகாப்பு படையினர் தங்கவும் எந்த இடத்தையும் தேர்தல் ஆணையம் கோர, சட்டம் வகை செய்கிறது.

பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு வரலாற்று சிறப்பு மிக்க இந்தத் தேர்தல் சீர்திருத்தங்களை அமலுக்கு கொண்டு வந்துள்ளது” எனக் கூறினார்.

You might also like