வாழ்க்கை என்பது ஒரு வட்டம் தான். ஏதோ ஒரு நம்பிக்கையை பற்றிக் கொண்டு எல்லோரும் ஓடிக் கொண்டிருக்கிறோம். விடிகின்ற பொழுதுகள் ஏதோ ஒரு நம்பிக்கையை நமக்குள் விதைத்து விட்டுச் செல்கிறது.
காலை எழுந்து அன்றாடம் செய்ய வேண்டியவற்றை எல்லாம் முடித்துவிட்டு தூங்கச் செல்லும்போது நாளை என்ன செய்ய என்று சில நேரங்களில் அலுப்பு தட்டிவிடும் வாழ்க்கை.
அப்படியே சோர்ந்து போய் இருக்கும் போது நாம் எதிர்பார்க்காத திருப்பங்கள் ஏற்படும். இவ்வாறு ஏற்படும் மாற்றங்கள் வாழ்க்கையில் ஒரு படிப்பினையை கொடுத்து நம்மை வாழவைக்கும்.
அது நிச்சயமாக நம் வாழ்க்கையில் ஏற்படும் தோல்விகளுக்கு முதல் இடம் கிடைக்கும். ஆம் தோல்வி என்று ஒன்று இல்லை என்றால் வெற்றி எனும் சுவையை நம்மால் உணர முடியாது.
நம்மால் முடியும் என்ற எண்ணம் தோன்றுவதற்கு தோல்விகளே காரணமாக இருக்கிறது.
மேகங்கள் மூடுவதால் நிலாவின் ஒளியில் மாற்றங்கள் இருக்குமே தவிர மறைந்து போவதில்லை. மேகங்கள் விலகும் போது பூமியில் தனது பிரகாசமான ஒளி பரவச் செய்யும் நிலா.
அது போன்றுதான் வாழ்க்கையில் தோல்விகளும், துன்பங்களும் அவமானங்களும் நமக்குள் மறைந்திருக்கும் தன்னம்பிக்கையை வெளிக்கொண்டு வருகிறது.
தன்னம்பிக்கையின் உதாரணமாக சாதித்து காட்டிய இந்தியாவின் முதல் பெண் தீயணைப்பு அதிகாரியாக வலம் வரும் மீனாட்சி விஜயகுமார் அவர்களை இந்தத் தொடரில் பார்க்கலாம்.
இந்தியாவின் முதல் பெண் தீயணைப்பு அதிகாரியான மீனாட்சி விஜயகுமார் அவர்கள் சென்னை தாம்பரத்தில் இருக்கும் மாநில பயிற்சி மையத்தின் இணை இயக்குனராக பணியாற்றுகிறார்.
இரண்டு உயிர்களைக் காப்பாற்றியதற்காக 2013 ஆம் ஆண்டில் அவர் வீரதீரத்திற்கான ஜனாதிபதி பதக்கத்தை பெற்றார். 2019 இல் சேவைக்கான ஜனாதிபதி பதக்கத்தையும் பெற்றுள்ளார்.
தென்கொரியா, ஆஸ்திரேலியா, அமெரிக்காவில் நடைபெற்ற உலக தீயணைப்பு வீரர்கள், உலகக் காவல் போட்டிகளில் மற்றும் நாக்பூரில் நடைபெற்ற தீ விளையாட்டுக்களில் பதக்கம் வென்ற முதல் இந்திய தீயணைப்பு அதிகாரியும் இவர் தான்.
மீனாட்சி விஜயகுமார் 1990 ஆம் ஆண்டு சென்னை செல்லம்மாள் கல்லூரியில் ஆங்கில உதவிப் பேராசிரியராக தனது வாழ்க்கையைத் தொடங்கினார்.
புது தில்லியில் உள்ள ஃபாதர் ஆக்னல் இன்ஸ்டிடியூட் ஆஃப் மேனேஜ்மென்ட்டில் கம்யூனிகேஷன் டெக்னிக் விரிவுரையாளராக பணியாற்றினார்.
1998 இல் குரூப்-1 தேர்வில் தேர்ச்சி பெற்றார், ஆனால் தீயணைப்பு சேவையில் பெண் அதிகாரிகளை சேர்க்கலாம் என்று முடிவு செய்யப்படுவதற்கு முன்பு 2003 வரை காத்திருக்க வேண்டிய சூழ்நிலைக்கு தள்ளப்பட்டார்.
தனது வாழ்க்கையில் பெரும் சவால்களைக் கடந்து இந்த நிலைமைக்கு வந்திருக்கிறார். பத்து வயதில் தனது தந்தையை இழந்த அவருக்கு மூன்று சகோதரிகள்.
உறவுகளால் ஒதுக்கப்பட்டு வாடகைக்கு கூட வீடு கிடைக்காமல் தவித்ததாக ஒரு போட்டியில் கூறியிருப்பார்.
பொதுப்பணித் துறைத் தேர்வு 2000-ஆம் ஆண்டு நடைபெற்ற பொதுத் தேர்வு எழுதினார் மீனாட்சி விஜயகுமார்.
ஆனால் இந்தத் துறைக்கு அப்போது பெண்கள் தேர்வு செய்யப்படவில்லை அதற்காக மூன்று ஆண்டுகள் முடிவுக்காக காத்திருந்ததாக கூறியுள்ளார்.
தீயணைப்பு பயிற்சி ஆண்களுக்கு எப்படியோ அப்படித்தான் பெண்களுக்கு வழங்கப்பட்டது.
ஏணி மீது ஏறுவது, சுமார் 230 லிட்டர் தண்ணீரை சுமந்து கொண்டு ஓடுவது போன்று இருந்தாலும் என்னால் முடியும் என்று விடாமுயற்சியுடன் செயல்பட்டதாக கூறியுள்ளார்.
பெண் தானே இவளால் எப்படி முடியும் என்று தன்னை கேலி செய்தவர்கள் முன் தன்னம்பிக்கையுடன் அவர்களை விடவும் உழைப்பை அதிகம் கொட்டி தன்னை தனித்துவமாக காட்டி கொண்டதாகவும் கூறியிருப்பார்.
இந்த வேலையில் ஆபத்து அதிகம் தான் இருந்தும் என்னால் முடியும் என்று தனக்கு தானே சவாலாக இருந்ததாகவும் கூறியிருப்பார்.
தீ விபத்து என்றால் இரவு பகல் பார்க்காமல் அப்படியே ஓட வேண்டும். இந்தத் துறை போன்று வேறு எந்தத் துறையிலும் உயிர் ஆபத்துகள் சவால்கள் என்பது குறைவு தான்.
உடல் ரீதியாகவும் நிறை சவால்களை சந்தித்து இருப்பதும், அறுவை சிகிச்சை வரை ஆபத்தான நிலையை கடந்து வந்ததாகவும் கூறியிருந்தார்.
எந்த நேரமும் விழிப்புடன் இருக்க வேண்டிய சூழ்நிலையில் வேலை, வீட்டில் கணவர், குழந்தை இவர்களையும் கவனித்துக் கொண்டு சாதித்துக் காட்டி தனித்துவமான பெண்மணியாக வாழ்ந்து வருவதற்கான காரணம் அது தன்னால் முடியும் என்ற தன்னம்பிக்கை மட்டுமே.
இதில் வேலை பார்க்க வேண்டும் என்றால் தனித்துவமான துணிச்சலும் தன்னம்பிக்கையும் வேண்டும்.
அவரது உழைப்பு, விடாமுயற்சி, துணிச்சல் மற்றும் அசராத தன்னம்பிக்கை தற்போது அவரது கட்டுப்பாட்டில் 9 மாவட்டங்களைச் சேர்ந்த 95 தீயணைப்பு நிலையங்கள் உள்ளன.
மீனாட்சி விஜயகுமார் அவரை விடவும் தன்னம்பிக்கைக்கு உதாரணமாக யார் இருக்க முடியும்.
-யாழினி சோமு