சிரிப்பும் சிரிப்பு சார்ந்த இடமும்: கிரேஸி நினைவுகள்!

காதலியின் சிரிப்பு “வைன்”!
குழந்தையின் சிரிப்பு “டிவைன்”!!
– கிரேஸி மோகன்

வார்த்தைகளை வைத்து என்ன வேண்டுமானாலும் செய்யலாம். ஊக்கம் கொடுக்கலாம், காயப்படுத்தலாம், பைத்தியமாக்கலாம் ஏன் பிணமாக கூட ஆக்கலாம்!
அவரவர் வார்த்தைகளை தேர்ந்தெடுப்பதைப் பொறுத்தது அது.

எல்லா வார்த்தைகளுக்குள்ளும் சிரிப்பு ஒளிந்திருந்ததை இவர் மட்டும் எப்படிக் கண்டுபிடிக்கிறார் என்று வியக்கும்படி, தான் தேர்ந்தெடுத்த வார்த்தைகளைக் கொண்டு எல்லோரையும் மனதார சிரிக்க வைத்தவர் இந்த அற்புத கலைஞன் கிரேஸி மோகன்!

இவரது பெயரைக் கேட்டதுமே பலருக்கு உதட்டில் ஒரு சின்னப் புன்முறுவல் தோன்றும். மேடைகளில் அவரைப் பார்த்தபோதெல்லாம் அவர் சிரிக்க வைத்ததால், அவர் பெயரே நம் மனத்தில் மகிழ்ச்சி அலையைப் பரப்பும்.

அவர் பெயரைக் கேட்டாலோ அவர் புகைப்படத்தைப் பார்த்தாலோ உடனே உதடு மெல்லப் பிரிந்து சிறியதொரு புன்முறுவலையாவது காட்ட வேண்டும் என்பது நம் ஆழ்மனம் நம்மையறியாமல் நம் உதட்டிற்கு இட்டிருக்கும் கட்டளை!

சங்கப் பாடல்களின் கீழே ‘வயலும் வயல்சார்ந்த இடமும், மலையும் மலை சார்ந்த இடமும்’ என்றெல்லாம் குறிப்பிடுவார்கள். அதுபோல் கிரேஸி மோகன் என்றாலே  ‘சிரிப்பும் சிரிப்பு சார்ந்த இடமும்’ என்பது பொருள்.

கிரேஸி மோகன் நடிகர், மரபுக் கவிஞர், ஓவியர் என மூன்று துறை வல்லுநராகத் திகழ்ந்த ஒரு முப்பரிமாணப் பிரமுகர்!

அவரது நினைவுதினமான இன்று அவர் அளித்த பேட்டியிலிருந்து ஒரு பகுதி…

முன்பெல்லாம் ஒரு நல்ல தலைப்பைத் தேர்வு செய்து அதன் பின்னர் அதற்கேற்றவாறு கதையை எழுதுவது என் வழக்கம்.

‘அலாவுதீனும் 100 வாட்ஸ் பல்பும்’, ‘கிரேசி தீவ்ஸ் இன் பாலவாக்கம்’ – எல்லாம் இப்படி எழுதியதுதான்.

ஆனால் நாளடைவில் அதை நான் மாற்றிக் கொண்டுவிட்டேன். அது ஒரு தவறான பழக்கம்.

இப்போது அப்படி இல்லை. சினிமாவில் அனுபவம் ஆன பிறகு, முதலில் ஒரு சப்ஜெக்ட்டை எடுத்துக் கொண்டு, பிறகு அதற்கேற்ற கதையை எழுதுகிறேன். கதைக் கரு எங்கிருந்து வேண்டுமானாலும் வரலாம்.

அல்பனி, நியூயார்க்கில் ‘மீசையானாலும் மனைவி’ ட்ராமாவில் சீனுவாக நடிப்பவர்தான் இறுதியில் டாக்டராக வருவார்.

“கங்க்ராஜுலேஷன் மாது, நீங்க அப்பாவாகப் போறீங்க!”என்பது டயலாக்.

அதற்குப் பதிலாக, ‘கங்க்ராஜுலேஷன் மாது, நீங்க எனக்கு அப்பாவாகப் போறீங்க!’ என்று உளறிவிட்டார்.

அதற்கு ஆடியன்ஸிடமிருந்து நல்ல ரெஸ்பான்ஸ் வேறு.

எப்படியோ அதைச் சமாளித்தாலும், உடனே எனக்குத் தோன்றியது சீனுவுக்கு மாது அப்பாவானால் எப்படி இருக்கும் என்று? அப்படி உருவானதுதான் ஜுராஸிக் பேபி. அதில் மாதுவுக்குப் பையனாக, அசுர வளர்ச்சி பெற்ற குழந்தையாகச் சீனு நடிப்பான்.

– நன்றி: முகநூல் பதிவு

You might also like