– பிரபலங்கள் இரங்கல்
பிரபல பின்னணிப் பாடகர் கே.கே. என அழைக்கப்படும் கிருஷ்ணகுமார் குன்னத், கொல்கத்தாவில் நடைபெற்ற ஒரு இசை நிகழ்ச்சிக்குப் பிறகு தீடீரென உடல்நிலை சரியில்லாமல் மயங்கி விழுந்தார். உடனடியாக அருகிலுள்ள தனியார் மருத்துவமனைக்கு அவர் அழைத்துச் செல்லப்பட்டார்.
இந்நிலையில் அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள் அவர் மாரடைப்பு காரணமாக இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.
இந்தியத் திரையுலகின் பல்துறைப் பாடகர்களில் ஒருவரான கே.கே, இந்தி, தமிழ், தெலுங்கு, கன்னடம் மற்றும் பெங்காலி உள்ளிட்ட பல மொழிகளில் பாடல்களைப் பதிவு செய்துள்ளார். அவருக்கு மனைவி மற்றும் குழந்தைகள் உள்ளனர்.
தமிழ் சினிமாவில் 60-க்கும் மேற்பட்ட பாடல்களை கே.கே பாடியுள்ளார்.
அதில், காதல் வளர்த்தேன் (மன்மதன்), அப்படிப் போடு (கில்லி), காதலிக்கும் ஆசை இல்லை (செல்லமே), நினைத்து நினைத்து (7ஜி ரெயின்போ காலனி), உயிரின் உயிரே (காக்க காக்க), ஸ்ட்ராபெர்ரி கண்ணே (மின்சார கனவு), ஒல்லிக்குச்சி உடம்புக்காரி (ரெட்) உள்ளிட்ட பாடல்கள் இதில் அடங்கும்.
53 வயதான பாடகர் கேகே திரைத்துறையில் அறிமுகமாவதற்கு முன்னர் 3,500 விளம்பரங்களுக்கு பாடல் பாடியுள்ளார்.
கேரளத் தம்பதிக்கு பிறந்த கேகே, தமிழில் இளையராஜா, ஏ.ஆர்.ரகுமான், யுவன் சங்கர் ராஜா, தேவா, வித்யாசாகர், மணி சர்மா மற்றும் ஹாரிஸ் ஜெயராஜ் ஆகியோர் இசையிலும் பாடியுள்ளார்.
பாடகர் கேகே.வின் மறைவுக்கு ரசிகர்கள் பலரும் டுவிட்டரில் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
அவரது திடீர் மரணம் ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியையும், மிகுந்த சோகத்தையும் ஏற்படுத்தி உள்ளது.