– குழந்தைகளுக்கு நேரு எழுதிய கடிதம்
உலகெங்கும் ஒவ்வொரு வருடமும் குழந்தைகள் தினம் ஐ.நா.சபை தீர்மானத்தின் படி நவம்பர் 20-ம் தேதி கொண்டாடப்படுகிறது.
ஆனால் இந்தியாவின் முதல் பிரதமரான ஜவஹர்லால் நேரு பிறந்த நாள் அன்று (நவம்பர்-14) அந்த தினம் கொண்டாடப்படுகிறது. குழந்தைகள் மற்றும் ரோஜாப் பூக்களின் மீது அவர் காட்டிய அன்பு யாவரும் அறிந்ததே.
அவர் குழந்தைகளை மொட்டுக்களோடு ஒப்பிட்டுப் பேசுவார். இந்நாட்டின் எதிர்காலமாக குழந்தைகள் இருப்பதால் அவர்கள் அக்கறையுடனும் பாசத்துடனும் வளர்க்கப்பட வேண்டும் என்று விரும்பினார்.
குழந்தைகள் தான் நாட்டின் உண்மையான சக்தி மற்றும் சமுதாயத்தின் அடித்தளம் என்று உணர்ந்தார்.
அப்படிப்பட்ட குழந்தைகளுக்காக நேரு எழுதிய கடிதம் இதோ.
டிசம்பர் – 3, 1949
“அன்புள்ள குழந்தைகளே, நான் குழந்தைகளுடன் இருப்பதையும் பேசுவதையும் மேலும் அவர்களுடன் சேர்ந்து விளையாடுவதையும் மிகவும் விரும்புகிறேன். இந்தத் தருணத்தில் நான் ஒரு மிக வயதானவன் என்பதை மறந்து போகிறேன்.
நான் எழுத அமரும்போது என் வயதையும் உங்களுக்கும் எனக்கும் உள்ள இடைவெளியையும் மறக்க முடிவதில்லை. வயதானவர்கள் இளையவர்களுக்கு எப்போதுமே நீதிக் கதைகள் மற்றும் அறிவுரைகள் சொல்வதே பழக்கம்.
நான் ஒரு பையனாக இருந்தபோது இதில் எனக்கு விருப்பம் இல்லாமல் இருந்தது. நீங்களும் இதை விரும்ப மாட்டீர்கள் என்று நினைக்கிறேன்.
சில நேரங்களில் மற்றவர்கள் சொல்வதைக் கவனமாகக் கேட்கும் போது நான் என்னை ஒரு அறிவாளியாகவும் புத்திசாலியாகவும் முக்கியமானவனாகவும் உணர்கிறேன்.
அதன்பின் என்னை நானே கவனிக்கும் போது என்னைப் பற்றி சந்தேகப்படுகிறேன்.
எந்தத் தருணத்திலும் புத்திசாலிகள், தாங்கள் அறிவுடையவர்கள், மற்றவர்களை விட உயர்வானவர்கள் என்பதைக் காட்டிக் கொள்ள மாட்டார்கள். அப்படியானால் நான் எதைப்பற்றி எழுதுவது?
நம்மைச் சுற்றி எவ்வளவு அழகான விஷயங்கள் இருந்தும் கூட வயதானவர்கள் தேவையற்ற விவாதங்களாலும் சிறு சச்சரவுகளாலும் தங்களை இழக்கிறார்கள்.
நீங்கள் உங்களைச் சுற்றிய அழகை ரசிக்க கண்களையும் காதுகளையும் தீட்டிக் கொண்டு ரசிப்பீர்கள் என்று நம்புகிறேன்.
நீங்கள் பூக்களை அதன் பெயர்களைக் கொண்டும் பறவைகளை அதன் சங்கீதம் கொண்டும் அடையாளம் காண்பீர்களா?
அவற்றைப் பாசத்தோடும் நட்போடும் நெருங்கினால் நமது நண்பர்களாக மாற்றுவது எவ்வளவு எளிது. வயதானவர்கள் வித்தியாசமாகத் தங்களுக்குள்ளேயே சிறு வட்டங்களிலும் குழுக்களிலும் தங்களை அமிழ்த்திக் கொள்கிறார்கள்.
அதிர்ஷ்டவசமாக, தங்களைப் பிளவுபடுத்தும் அந்தத் தடைகள் பற்றி குழந்தைகளுக்குத் தெரியாது.
நம்மிடையே ஒரு பெரிய மனிதர் இருந்தார் என்று உங்களுக்குத் தெரியும். அவர் தான் மகாத்மா காந்தி. அவர் ஓர் அறிவாளி, ஆனால் அவர் அதை வெளிக்காட்டிக் கொண்டதில்லை.
அவர் எளிமையானவர், பல வழிகளில் அவர் ஓர் குழந்தையைப் போன்றவர். அவர் உற்சாகத்துடனும் புன்னகையுடனும் உலகை எதிர்கொள்வதற்கு கற்றுத் தந்தார்.
நமது தேசம் மிகப்பெரியது. அதற்கு செய்வதற்கு நமக்கு மிகப்பெரிய கடமை ஒன்று இருக்கிறது. நாம் ஒவ்வொருவரும் நம்முடைய பங்கை சிறிதளவு செய்தால் அது மலைபோல் உயர்ந்து நாட்டின் முன்னேற்றத்திற்கு வழிவகுக்கும்.”
– ஜவகர்லால் நேரு
- நன்றி: ‘த சண்டே இந்தியன்’ டிசம்பா் 2007 இதழ்