நினைவில் நிற்கும் வரிகள்:
***
ஒன்று கூடி நின்று
வீரசிந்து பாடுவோம்
வெற்றி சூடுவோம்
நேர்மையற்ற பேர்கள்
வீழநின்று வாட்டுவோம்
நீதி நாட்டுவோம்
(ஒன்று கூடி)
ஈரமற்ற நெஞ்சுகொண்ட
ஈனர் மாய்கவே
ஏழையை மிதித்துவாழும்
எத்தர் வீழ்கவே
கோழையென்று நம்மையெண்ணும்
கொள்கை போக்குவோம் –
கிளர்ச்சி கொண்டுதாக்குவோம்
கூடிநின்று கொடியுயர்த்தி
கொட்டி முழக்குவோம்
செல்வர் கொட்ட மடக்குவோம்
தோழர்காள் துணிந்த வீரர்காள்
(ஒன்று கூடி)
சூழ்ச்சியால் நமைக்கெடுத்த
ஆட்சி வெல்லுவோம்
வஞ்சகர் செருக்கொழித்து
வாழ்க்கை எய்துவோம்
கஞ்சியில்லை என்ற
சொல்லை கப்பலேற்றுவோம்
செகத்தை ஒப்பமாற்றுவோம்
பஞ்சையென்று நம்மைண்ணும்
பான்மைவெல்லுவோம்
புரட்சிப் பாதை செல்லுவோம்
தோழர்காள் துணிந்த வீரர்கள்
(ஒன்று கூடி)
(T.K. பாலச்சந்திரனின் மக்கள் நாடகமன்றத்திற்காக கவிஞர் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் எழுதியது – தாமரை – 1960)