பலனை நோக்கிய உழைப்பே உயர்வு தரும்!

ராம்குமார் சிங்காரத்தின் தன்னம்பிக்கைத் தொடர்!

ரு ஊரில், ஒரு முனிவர் இருந்தார். ஒரு நாள் அவரைப் பார்க்க,  4 பேர் வந்தனர். அந்த 4 பேரும் முனிவரிடம், “சாமி உலகத்தப் புரிஞ்சிக்கவே முடியலயே! அதுக்கு என்ன வழி?”ன்னு கேட்டாங்க, அதுக்கு அந்த முனிவர், “தெரியலையேப்பா!”ன்னு நாயகன் ஸ்டைல்ல, ஒற்றை வரியிலே, பதில் சொல்லிட்டாரு.

ஆனாலும் வந்தவங்க விடாம, “என்ன சாமி. நீங்க எவ்ளோ! பெரிய முனிவர்! இதுகூடத் தெரியலைன்னு சொல்லுறீங்களே?”ன்னு கேட்டாங்க.

பொறுமையிழந்த முனிவர் “இவங்களுக்கு உலகத்தைப் புரிய வெச்சுட, வேண்டியதுதான்!”னு முடிவு பண்ணினார்.

அவங்ககிட்ட, “இப்ப நான் உங்களை ஒரு புஷ்பக விமானத்துல அழைச்சிட்டுப் போவேன். போற வழியில ஒரு காட்சியை உங்களுக்கு காட்டுகிறேன். அது பத்தி உங்களோட கருத்தை நீங்க சொல்லணும்.  கருத்து தப்பா இருந்தா, இந்த விமானம் உங்கள கீழ தள்ளி விட்டுடும்”ன்னாரு

அதற்கு ஒப்புக் கொண்ட நால்வரும் முனிவரோட சேர்ந்து புஷ்பக விமானத்துல ஏறினாங்க.

கொஞ்ச தூரம் போனபிறகு ஒரு எடத்துல ஒரு புலி, குட்டி போட்டுக்கிட்டு இருந்திச்சி. குட்டி போட்ட பிறகு தனக்கும் தன் குட்டிகளுக்கும் பசிக்கு இரை தேடி அந்தப் பக்கமா நடந்துட்டிருந்தது.

இந்தப் பக்கமா ஒரு மான், அதுவும் குட்டி போட்டுட்டு பசிக்கு தண்ணீர் குடிக்கிறதுக்கு அந்தப் பக்கமா வந்துச்சி. மானப் பாத்த அந்தப் புலி சட்டுன்னு அது மேல பாஞ்சி அதக் கொன்னு தானும் சாப்புட்டு, தன்னோட குட்டிகளுக்கும் குடுத்திச்சி. அத சாப்புட்ட அந்தப் புலிக் குட்டிங்களுக்கு சந்தோஷம்.

இந்தப் பக்கமா தன் அம்மாவை எதிர்பார்த்து, பச்சிளம் மான் குட்டிகள் ஏக்கமாக காத்திருக்குது. இந்தக் காட்சிய அவங்ககிட்ட காட்டின முனிவர், “இதப் பத்தி உங்க கருத்து என்ன?”ன்னு கேட்டாரு.

அந்த 4 பேருல ஒருத்தர், “புலி பண்ணினது ரொம்பத் தப்பு. மான் குட்டிகளுக்கு இப்ப தாய் இல்லாம போச்சே!”ன்னு சொன்னாரு உடனே அவர அந்த விமானம் கீழே தள்ளி விட்டுடுச்சு.

அடுத்த ஆள், கருத்து சொன்னார். ஏற்கெனவே ஒருத்தன் கீழ விழுந்ததைப் பார்த்த அவர், “இல்ல இது சரிதான். ஏன்னா, இது உலக நியதி, புலிகளுக்கு இரையாகத்தானே மான்கள் இருக்குது”ன்னார். விமானம் அவரையும் கீழ தள்ளி விட்டுடுச்சு.

இதையெல்லாம் பாத்துக்கிட்டு இருந்த அடுத்த ஆளு ரொம்ப உசாரா சொன்னான், இது தப்பும் இல்ல சரியும் இல்லே!”ன்னான். அவனையும் அந்த விமானம் கீழ தள்ளிடிச்சி.

கடைசியாக, விமானத்தில் எஞ்சி இருந்தவனைப் பார்த்தார் முனிவர். “நீ என்ன சொல்லப் போறே?”ன்னு கேட்டார் முனிவர்.

அதுக்கு அவன், “தெரியலயே சாமி”ன்னு சொன்னான். அவனை அந்த விமானம் கீழே தள்ளலை. இரண்டு பேர் ஏறின இடத்திலேயே கீழே இறங்கிட்டாங்க.

என்ன புரியுது? நம்ம வாழ்க்கைக்கு எது தேவையோ அதை மட்டும் நாம் புரிஞ்சிக்கிட்டா போதும். தேவையில்லாத விஷயங்களை தெரிஞ்சிக்க முயற்சி செய்றது அநாவசியம்.

அதேபோல தன் அறிவுக்கு அப்பாற்பட்ட விஷயங்கள் பற்றி தெரிஞ்சமாதிரி பேசுறதும் தப்பு. தெரியாத விஷயங்களை தெரியாதுன்னு எப்போதுமே ஒப்புக்கிறதுதான் உத்தமம்,

இதுக்கிடையே, தம்மைப் போலவே சிந்திச்ச அந்த ஆளுக்கு நல்லது நினைச்ச முனிவர், இவனைப் பார்த்தால் மிகவும் அப்பாவியாக இருக்கிறான். அவனுக்கு ஒரு வழியைக் காட்டுவோம் என்று முடிவெடுத்தார். “கடவுளை நினைச்சுத் தவம் செய்.  உனக்கு வேண்டிய வரத்தைக் கொடுப்பார்…”  என்று வாழ்த்திட்டு அங்கிருந்து கிளம்பிட்டார்.

முனிவர் வாக்கை ஏற்று அந்த நபரும் கடவுளைப் பிரார்த்தனை பண்ணி, கடுமையாக தவம் இருந்தார். பல நாட்கள் சென்ற பிறகு கடவுள் அவர் எதிரில் தோன்றினார்.

“பக்தனே, உனக்கு என்ன வரம் வேண்டும்?” கடவுள் கேட்டார்.

“தவம் செய்தால் கடவுள் வந்து வரம் கொடுப்பார்”னு அந்த முனிவர் சொன்னார், அதான்.” என்றார் பக்தர்.

“வந்துவிட்டேனே…. என்ன வரம் வேண்டும், கேள்….” என்றார் கடவுள்.

அதான்கேட்டேனே வரம்…. அதை கொடுங்க சாமீ….” என்றார் மன்னார்சாமி.

இப்போது கடவுளுக்கே குழப்பம் வந்து விட்டது. கடவுள் பிரத்யட்சம் செய்துவிட்டால் யாருக்காவது வரம் கொடுத்தே ஆக வேண்டும்…!

அதுவும் தவம் செய்தவருக்குத் தவறாமல் வரம் கொடுத்தே ஆக வேண்டும் ஆயிற்றே! சிக்கலான பக்தனாக இருக்கிறானே, என்ன செய்யலாம்..? என்று கடவுள் யோசித்தார்.

“பக்தா, இப்போது நீ என்ன நினைக்கிறாயோ, அதையே வரமாக கொடுக்கின்றேன். பெற்றுக் கொள் – போ!”

“அய்யய்யயோ.. நான் ஒண்ணும் நினைக்கவே இல்லையே

“அதான்..” என்று சொல்லிவிட்டுக் கடவுள் மறைந்து விட்டார்.

இதிலிருந்து என்ன தெரிகிறது? பலனை நோக்கிய உழைப்புதான் உயர்வைத் தரும்! எண்ணம் போல் வாழ்வும் கிடைக்க, மனதில் நல்லதை நினைப்போம். நல்வழி செல்வோம்.

வாழ்வதையும், வாழ விடுவதையும், நமது வாழ்க்கைத் தத்துவங்களாக. ஆக்கிக் கொள்வோம். வெற்றியாளர்களாக வலம் வருவோம்.

ராம்குமார் சிங்காரம் எழுதிய ‘ஒரு கதை, ஒரு விதை’ என்ற நூலிலிருந்து ஒரு பகுதி!

https://ramkumarsingaram.com

You might also like