கோடைக் கால சருமப் பாதுகாப்பு!

கோடைக் காலத்தில் வெயிலின் தாக்கம் அதிகமாக இருப்பதால் சருமப் பிரச்சனைகளை சந்திக்கின்றனர். அதிகப்படியான வெயில் காரணமாக உடலில் நீர் சத்து பற்றாக்குறை ஏற்படுவதன் மூலம் சருமம் பொலிவு இல்லாமல் காணப்படுகிறது.

இந்த கோடைக் காலத்தில் உங்கள் சருமத்தைப் பாதுகாப்பாக வைத்துக் கொள்வது எப்படி என்பதைப் பார்க்கலாம்.

வெயில் சருமப் பாதுகாப்பு:

வெயில் காலங்களில் வியர்வை, மாசு மற்றும் வெப்பம் காரணமாக நமது சருமம் மிகவும் பாதிக்கப்படுகிறது.

கண்ணுக்கு தெரியாத மாசு உங்கள் முகத்தில் தங்கிவிடுகின்றன. இதை தவிர்ப்பதற்கு முகத்தை உங்கள் சருமத்திற்கு ஏற்ற ஃபேஸ் வாஷ் கொண்டு நன்றாகக் கழுவ வேண்டும். இரண்டு வேளை குளிப்பது உங்கள் தோலில் மாசு தங்காமல் பாதுகாக்கும்.

நிறைய தண்ணீர் குடிப்பது பழச்சாறு எடுத்துக் கொள்வது சருமம் பொலிவாக வைத்துக் கொள்ள உதவுகிறது. இயற்கையான ஃபேஸ் வாஷ் வெயில் காலத்தில் உங்கள் சருமத்திற்கு பாதுகாப்பை அளிக்கிறது.

டோனர்:

சருமத்தைப் பாதுகாப்பாக வைத்துக் கொள்வதால் இதன் பங்கு அதிகம்.

அதிக வெயில் காரணமாக வியர்வையினால் சருமம் எண்ணெய் பசையாக மாறுவதால், திறந்த துளைகளில் எண்ணெய் தேங்குவதைத் தடுப்பதற்கு டோனர்கள் அவசியம் தேவை.

இயற்கையான ரோஸ் மற்றும் குங்குமப்பூ கொண்ட டோனர் பயன்படுத்தலாம். இது சருமத்திற்கு பொலிவு மற்றும் புத்துணர்ச்சியை கொடுக்கிறது.

அதிகப்படியான வியர்வை மற்றும் மாசு காரணமாக அதிகமாக சுரக்கும் எண்ணெய் சரும துவாரம் திறந்திருக்கும். இந்த துளைகளை மூடுவதற்கு டோனர்கள் உதவுகிறது.

ஐஸ் கட்டி மசாஜ்:

ஐஸ் கட்டி மசாஜ் சருமத்தில் மாசு தங்கவிடாமல் அதிக எண்ணெய்ப் பசை சுரக்க விடாமல் தடுக்கிறது. முகத்திற்கு புத்துணர்ச்சியை ஏற்படுத்துகிறது. வெயிலில் சென்று விட்டு வீட்டிற்கு வரும் போது எவ்வளவு அழகாக இருந்தாலும் பொலிவிழந்து தான் காணப்படுவோம்.

அந்த சமயம் வியர்வை அடங்கியதும் ஐஸ் கட்டி கொண்டு மசாஜ் செய்யும் போது முகத்தில் உள்ள மாசு நீங்கி பொலிவு பெறும்.

ஐஸ் கட்டிகளை சுத்தமான வெள்ளை துணியில் கட்டி முகம் கழுத்து பகுதிகளில் வட்ட வடிவமாக மசாஜ் செய்ய வேண்டும். இப்படி செய்வதன் மூலம் கோடையிலும் உங்கள் சருமம் பளபளக்கும்.

தொடர்ந்து செய்வதன் மூலம் முகப்பருக்கள், கரும்புள்ளி, வியர்வையால் ஏற்படும் அரிப்பு மற்றும் சுருக்கம் நீங்கி முகம் ஆரோக்கியமாகவும் அழகாகவும் இருக்கும்.

ஃபேஸ் மாஸ்க்:

வெயில் காலத்தில் சருமத்திற்கு ஈரப்பதம் போதுமான அளவிற்கு இருக்க வேண்டும்.

அப்போதுதான் சருமம் பார்ப்பதற்கு அழகாக தெரியும். சருமம் ஈரப்பதமாக இருப்பதற்கு ஃபேஸ் மாஸ்க் தேவைப்படுகிறது.

இந்த மாஸ்க் வாரத்தில் இரண்டு நாட்கள் பயன்படுத்த வேண்டும். ஃபேஸ் மாஸ்க் போடுவதற்கு முன், உங்கள் முகத்தை நன்றாக சுத்தம் செய்து பிறகு மாஸ்க் போட வேண்டும்.

இது உங்கள் சருமத்தை சரிசெய்யது ஈரப்பதத்துடன் இருப்பதற்கு உதவுகிறது.

ஓட்ஸ் மற்றும் தேன் ஃபேஸ் மாஸ்க் இதை எளிதாக வீட்டில் தயார்படுத்தலாம்.

இரண்டு ஸ்பூன் ஓட்ஸ் எடுத்து தேவையான அளவு தேன் கலந்து ஊற விட்டு பிறகு அதை அரைத்து இரவு நேரத்தில் முகத்தில் தடவி காலையில் முகத்தை வெதுவெதுப்பான தண்ணீரில் கழுவி வந்தால் ஈரப்பதம் உங்கள் முகத்தில் அப்படியே இருக்கும்.

இந்த மாஸ்க் போடுவதன் மூலம் முகப்பரு, வறட்சி, கரும் திட்டுகள் மற்றும் எண்ணெய் போன்ற பல்வேறு தோல் பிரச்சனைக்கு தீர்வாக அமைகிறது.

இந்த வெயில் காலத்தில் இருந்து உங்கள் சருமத்தைப் பாதுகாக்க உதவும்.

அதே போன்று வெயிலில் செல்லும் போது சன் ஸ்கிரீன் பயன்படுத்துவது அவசியமாகும்.

வெளிப்பூச்சி எவ்வளவு இருந்தாலும் அது கொஞ்ச நேரம் தான் இருக்கும்.

ஆகவே தேவையான அளவு தண்ணீர் மற்றும் பழச்சாறு பருகுவது உங்களை உள்ளிருந்து நீர் சத்து குறையாமல் பாதுகாத்து சருமத்தை ஈரப்பதத்துடன் இருக்கச் செய்யும்.

– யாழினி சோமு

You might also like