‘சும்மா இரு!’ என்பது சித்தர் தத்துவம். அது இப்போதும் சில நேரங்களில் பயன்படும்.
வேலையே இல்லாமல் வெட்டியாக இருக்க முடியுமா? சில நேரங்களில் மட்டும் இருக்க வேண்டும் என்கிறார்கள் வெற்றியாளர்கள். இது எந்நேரமும் வெட்டியாக இருப்பவர்களுக்குப் பொருந்தாது.
சரி, ஏன் வெட்டியாக இருக்க வேண்டும்… எதற்காக இருக்க வேண்டும்… எப்போது இருக்க வேண்டும்..?
மிகவும் பிஸியாக, எந்நேரமும் வேலை, வேலை என்று மிக ஆக்டிவாக, ஓடிக் கொண்டே இருப்பவர்களுக்கு ஓர் ஓய்வு தேவை.
எந்தச் சிந்தனையும் இல்லாமல், எந்த மெனக்கெடலும் இல்லாமல், எந்தப் பொழுது போக்கிலும் ஈடுபடாமல், மூளையைக் கழற்றி வைத்தது போல சும்மா இருப்பது உடலுக்கும் மனதுக்கும் நல்லது என்கிறார்கள்.
ஆண்டு முழுவதும் மனிதர்களுடனேயே பழகி வரும் யானைகளை பதினைந்து நாட்கள் புத்துணர்வு முகாமுக்கு அனுப்பி இயற்கையோடு வாழ வைக்கிறார்களே, அதுபோல மனிதர்களுக்கான புத்துணர்வு முகாம்தான் இந்த நாட்கள்.
வருடத்தில் ஒரு 3 நாளாவது சும்மா இருக்க நேரம் ஒதுக்குங்கள், எதுவுமே செய்யாமல் இருங்கள். ஆனால், எதுவெல்லாம் செய்ய வேண்டும் என்று தோன்றுகிறதோ அதைச் செய்யுங்கள்.
தூங்க வேண்டும் என்று தோன்றுகிறதா… தூங்குங்கள். காலாற நடக்க வேண்டும் என்று மனம் விரும்புகிறதா… செய்யுங்கள்.
அறிமுகமே இல்லாத மனிதர்களுடன் பழகத் தோன்றுகிறதா, கண்ணில் படும் பேருந்தில் ஏறிப் பயணியுங்கள்.
உங்களுக்கு தெரியாத, வித்தியாசமான விஷயங்களைச் செய்யுங்கள். புத்தகம் படிக்கத் தோன்றினால், உங்கள் வேலை சம்பந்தப்பட்ட புத்தகமாக இல்லாமல், மன நோயாளிகளைக் காப்பாற்றுவது எப்படி? என்ற ரீதியில், தொடர்பே இல்லாத புத்தகத்தைப் படிக்க நேரம் ஒதுக்குங்கள்.
பக்கத்து வீட்டுப் பெரியவரிடம் வலியச் சென்று பேசுங்கள். இதுவரை நீங்கள் யோகாவே செய்தது இல்லையா? யோகா செய்யுங்கள். அறிமுகமே இல்லாத கிராமத்திற்கு போய் பாருங்கள்.
ஏதாவது ஒரு பார்க்குக்குச் சென்று வானத்து நட்சத்திரத்தை எண்ணுங்கள். ஒவ்வொரு மரத்திலும் எத்தனை விதமான இலைகள் இருக்கிறது என்று ஆராயுங்கள். வரைந்து பாருங்கள். இதுவரை நீங்கள் இப்படிப்பட்ட வேலைகளைச் செய்திருக்க மாட்டீர்கள்.
வெளியில் இருந்து பார்த்தால் உங்களை பைத்தியம் என்று சொல்வார்கள், பரவாயில்லை. இதுதான் குழந்தை மனது.
எதையும் ஆராயும் நாட்களாக இந்த வெட்டி நாட்கள் அமையட்டும். இப்படியும் ஒரு உலகம் இருக்கிறதா என்று ரசித்துப் பாருங்கள்.
அன்றைக்கு உங்கள் வழக்கமான அலுவல் ஏதும் இருக்கக் கூடாது. ஒரே திசையில் சிந்திப்பதிலிருந்து மனதுக்கு ஓய்வு கொடுப்பதே சும்மா இருப்பது.
இப்படிச் செய்கிறபோது நிறைய புது ஐடியாக்கள் கிடைக்கலாம். ஒரு புதிய தொழில் சார்ந்த சிந்தனை கிடைப்பதற்கு வாய்ப்பு ஏற்படலாம்.
ஏதாவது புதிதாக எழுதுவதற்கு வாய்ப்பு கிடைக்கலாம். பகிர்ந்து கொள்வதற்கு புதிய எண்ணங்கள் கிடைக்கலாம்.
தினமும்கூட சில நிமிடங்கள் ஒதுக்கி இதனைச் செய்யலாம். அலுவலகத்தில் இருந்து வீட்டுக்குச் செல்லும் வழியை வாரம் ஒருநாள் மாற்றுங்கள். அது சற்று சுற்று வழியாக இருந்தாலும், அதன் போக்கில் சென்று அதை அனுபவியுங்கள்.
உங்கள் எண்ணத்தை மாற்றிக் கொடுக்கும் ஒரு வித்தியாசமான செயலை செய்யும்போது உங்கள் வழக்கமான சிந்தனை மாறி, புதிய சிந்தனைகள் தோன்றும். மூளை தன்னைத் தானே உற்சாகப்படுத்திக் கொள்ள நீங்கள் அளிக்கும் வாய்ப்பு இது.
நம்முடைய மூளைக்கு, சிந்தனைக்கு, மனதுக்கு ஒரு புதுவிதமான உலகத்தை நாம் காண்பிக்கப் போகிறோம்.
ஒரே சிந்தனையில் இருந்த மனது மாறுகிறபோது நமக்குள் ஒரு புத்தாக்கம் ஏற்படலாம். விவசாயம் செய்கிற நிலத்தை கொஞ்ச நாள் வெறுமையாக விட வேண்டும் என்று சொல்வார்கள்.
மூன்று வேளை சாப்பாடு என்று தொடர்வதற்கு ஒரு இடைவேளை போல, விரதங்கள் இருப்பார்கள். இதனால், சும்மா இருக்கும் வயிறு, சுத்தமாகும்.
மூளையை 2 நாள் ஃப்ரீயாக விட வேண்டும். வேலையில் அலுப்புத் தட்டாமல் இருப்பதற்கு இதுபோன்ற புத்துணர்வு தேவை.
நாம் என்ன செய்கிறோம்…? ரிலாக்ஸ் செய்கிறேன் பேர்வழி என்று 3 நாளில் டூர் போய் அங்கே இதைவிட பிசியாக காலையில் 5 மணிக்கு எழுந்து சுற்றிப் பார்த்து, அறைக்குத் திரும்பியதும், சாப்பிடக்கூட நேரம் இல்லாமல் அடுத்த ஸ்பாட் பார்க்கக் கிளம்புவோம்.
சுற்றுலா முடிந்து வீட்டுக்கு அலுப்போடு வந்து, ஆபீஸூக்கு ஒரு நாள் லீவு போட்டாதான் என்ன..? என்று யோசிப்போம்.
வேலையில் இருந்து விடுபட்டு நம்மை நாமே ஆசுவாசப்படுத்திக் கொள்ள இடம் தேவை, நேரம் தேவை, சில நாட்கள் தேவை. அதைத்தான் வெட்டியாக இருங்கள் என்கிறேன்.
இந்த நாட்களில் உங்களின் மூளையில் அடியில் புதைந்து கிடக்கும் சில ஐடியாக்களும் வெளிவரும். மேலும், மூன்று நாட்கள் இருந்துவிட்டு, 4-வது நாள் சென்றால், உங்களால் ரொம்ப எளிதாக வேகமாக அலுவலக வேலைகளைச் செய்யமுடியும்.
வாழ்க்கையில் முன்னேற்றம் ஏற்படும். இது ஒரு வித்தியாசமான முயற்சி.
வெட்டித்தனமாக பொழுதைக் கழிக்காமல் ஆக்கபூர்வமாக சும்மா இருந்து பாருங்கள்.
இதேபோன்று இன்னொரு விஷயத்தையும் சொல்கிறேன், ‘நோ’ சொல்லாமல் கேட்டுக் கொள்ளுங்கள்.
இந்தக் காலகட்டத்தில், நாம் எல்லோருக்கும் நல்லவராக இருக்க முடியாது. எல்லா விஷயத்திலும் விட்டுக் கொடுக்கவும் முடியாது. நமக்கென்று சில விருப்பங்கள். கொள்கைகள் இருப்பவரே வெற்றியாளராக இருப்பார்கள் அதற்கு ‘நோ’ சொல்லத் தெரிய வேண்டும்.
“இல்லை… வரமாட்டேன்… செய்ய மாட்டேன்… வர இயலாது… செய்ய முடியாது… விருப்பமில்லை…” இப்படி எதிர் வார்த்தைகளைப் பிரயோகிக்க வேண்டிய இடங்கள் சில உண்டு. அங்கே நம்மை விட்டுக் கொடுத்தால், நேர விரயமும், வருமான இழப்பும், பிறரது வெற்றிக்கு உதவுவதுமாக போய் முடியும்.
இப்படி எதிர்மறையாக சொன்னால் மட்டுமே. நம்முடைய வெற்றியை தக்க வைத்துக் கொள்ள முடியும். பிறர் நம்மை தப்பாக நினைக்க மாட்டார்களா? சரியான திமிர் பிடித்தவர்… அகம்பாவம் கொண்டவர்… மண்டைக் கனம் பிடித்தவர் என்றெல்லாம் ஏச மாட்டார்களா.. மாட்டார்கள்.
அதுவும் சரிதான் என்று கடந்து போய் விடுவார்கள். ஏனென்றால், நமக்கு நம்முடைய வாழ்க்கை, நம்முடைய வெற்றி முக்கியம். நம்முடைய முன்னேற்றம் முக்கியம்.
எல்லாவற்றுக்கும் நாம், “ஓகே. தாராளமாக, இதோ வந்து விட்டேன்” என்று போவதாகக் கொள்வோம். நண்பர் ஒருத்தர் வருவார். “என் காதலிக்கு பர்த் டே. நல்ல கிஃப்ட் வாங்கணும். நீங்க சூப்பரா செலக்ட் பண்ணுவீங்க. வாங்க போகலாம்…” என்பார். போவோம்.
இன்னொரு நண்பர் வருவார். ‘வாங்க பாஸ், பக்கத்துல பார்க்குக்குப் போகலாம்! நல்லா காத்து வரும்!’ என்பார். போவோம். இன்னொருத்தர் வந்து, இன்னைக்கு மஹாளய அமாவாசை. வாங்க, கோவிலுக்குப் போகலாம் என்பார். மாற்று மதத்தவராக இருந்தாலும் அழைக்கிறாரே என்று போக ஒப்புக் கொள்வோம்.
அடுத்தவர் வந்து, ‘வாங்க… அந்த சமூக சேவைக்கான விஷயத்துக்கு போகலாம்!’ என்று கூப்பிட்டால் உடனே தலையசைத்து விடுவோம். ‘சினிமாவுக்கு..?’ ‘ஓ.கே. இதோ வந்து விட்டேன்’. புட்பால் மேட்ச் பார்க்கலாம் என்றால் போவோம்.
இப்படி எல்லாருக்காகவும் ‘எஸ்’, ‘எஸ்’ என்று சொன்னால், நம் வீட்டு வேலையையும் நமது வருமானத்தையும் யார் பார்ப்பது. நம் வாழ்க்கை என்ன ஆவது?
நாம் முன்பே சொன்னது போல், ஒரு நாளைக்கு 24 மணி நேரம் தான், இதில் 8 மணி நேரம் தூங்கி விடுகிறோம். 8 மணி நேரம் வருமானத்துக்கான உழைப்பு. மீதியுள்ள 8 மணி நேரத்தை நாம் எப்படி கழிக்கிறோம் என்பதில்தான் நம்முடைய வெற்றி அடங்கியிருக்கிறது.
அதை வருவோர், போவோருக்கெல்லாம் தாரை வார்த்து விட்டு நிற்பது நல்லதா…
‘அவர மாதிரி கேனை வேறு யாரும் கிடையாது. எங்கே வேணும்னாலும் கூப்பிடலாம். மண்டையாட்டிட்டு வந்துடுவாரு… என்றுதான் பெயர் கிடைக்குமே தவிர, ‘அவரு ரொம்ப நல்லவருப்பா!’ என்று யாரும் சர்டிஃபிகேட் கொடுக்க மாட்டார்கள்.
அதேசமயம், குருட்டாம் போக்கில் நோ சொல்லவும் கூடாது. நல்ல வாய்ப்புத் தட்டிப் போகவும் கூடும். எது நமக்கு தேவை, நமக்கு என்பதில் தெளிவாக இருங்கள், தேவையற்ற வேலைகளை இழுத்துப் போட்டுப் கொள்வதைத் தவிருங்கள்.
உங்கள் நேரத்தைக் கைவசம் வைத்துக் கொண்டால் சிறப்பான வாய்ப்பு வரும்போது அதற்கு அந்த நேரத்தைப் பயன்படுத்தலாம்.
சின்ன வருமானம் தரும் வேலைகளை அதிகம் உள்வாங்கிக் கொண்டு அதிலேயே உழன்றால், பெரிய வருமானம் தரும் பணி வரும்போது அதற்கு நேரம் ஒதுக்க இயலாமல் போகலாம். எனவே, சிறிய வருமான விஷயத்தில் கவனம் வையுங்கள். ‘நோ’ சொல்வதற்கு அது பயன்படும்.
தேவையில்லாத பொருட்களை வாங்கிக் குவிப்பவன், தேவையானவற்றை விற்கும் நிலைக்குத் தள்ளப்படுவான் என்பதைக் கவனத்தில் கொள்ளுங்கள்
முக்கியமான ‘நோ’ சொல்கிற போது அடுத்தவர் முகத்தில் அடித்தாற் போல சொல்லாதீர்கள். “இல்லைங்க, நிறைய வேலை இருக்கு. இன்னொரு நாள் பார்க்கலாம்!” என்று பணிவாகச் சொல்லுங்கள். “நீங்கள் கூப்பிட்டதற்கு ரொம்ப நன்றி!” என்று அமைதியாக, அன்பாகச் சொல்லுங்கள்.
வாழ்க்கையில் தேவையான விஷயத்திற்கு ‘எஸ்’ -சும், தேவையில்லாத விஷயத்திற்கு ‘நோ’ – வும் சொல்ல வேண்டும். அப்படியிருந்தால்தான் வெற்றி பெற முடியும்.
– இராம்குமார் சிங்காரம் எழுதிய ‘நீங்கள் ஏன் இன்னும் கோடீஸ்வரர் ஆகவில்லை’ என்ற நூலிலிருந்து…