சர்வதேச அளவில் 20 விருதுகளைப் பெற்றுள்ள ‘வாய்தா’ திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா இன்று மாலை நடைபெறுகிறது.
வராஹா சுவாமி பிலிம்ஸ் நிறுவனத்தின் சார்பில் கே.வினோத்குமார் தயாரிக்க, சி.எஸ்.மகிவர்மன் இப்படத்தை இயக்கியுள்ளார்.
இயக்குநர் தமிரா இயக்கிய ‘ஆண்தேவதை’ படத்தில் உதவி இயக்குநராக பணியாற்றியவர் சி.எஸ். மகிவர்மன்.
‘ஜோக்கர்’, ‘கே.டி. என்கிற கருப்பத்துரை’ உள்ளிட்ட படங்களில் பெரும் பாராட்டைப் பெற்ற மு.ராமசாமி, கதை நாயகனாக நடிக்கிறார். இவர், தமிழில் நவீன நாடகச் செயல்பாடுகளை முன்னெடுத்தவர்.
படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில், புகழ் மகேந்திரன் தோன்றுகிறார். இவர், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தலைவர்களில் ஒருவரான சி.மகேந்திரனின் மகன்.
மேலும், நாசர், ஜெசிகா பவுலின், ‘நக்கலைட்ஸ்’ பிரசன்னா மற்றும் நேஷனல் ஸ்கூல் ஆப் டிராமாவைச் சேர்ந்த கலைஞர்கள் சிலரும் தோன்றுகின்றனர்.
பிரபல ஒளிப்பதிவாளர் விஜய் மில்டனிடம் நீண்ட காலமாக உதவியாளராக பணியாற்றிய சேது முருகவேல் அங்காரகன், இந்தப் படத்திற்கு ஒளிப்பதிவு செய்துள்ளார்.
‘அசுரன்’, ‘வட சென்னை’, ‘சூரரைப் போற்று’ உள்ளிட்ட படங்களில் பிரம்மாண்டமாக செட் அமைத்திருந்த கலை இயக்குநர் ஜாக்சன் இந்தப் படத்திலும் பணியாற்றி இருக்கிறார்.
சி.லோகேஷ்வரன் இசையமைப்பாளராக அறிமுகமாகிறார்.
இந்தப் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் மோஷன் போஸ்டரை விஜய் சேதுபதி அண்மையில் வெளியிட்டார்.
அதில், மு.ராமசாமி, கழுதையுடன் நீதிமன்ற கூண்டுக்குள் இருப்பது போன்ற காட்சியும், ‘சாமானியர்கள் மேல் நடத்தப்படும் வன்முறை’ என்ற வாசகமும் கவனத்தை ஈர்த்துள்ளது.
மோஷன் போஸ்டரின் இறுதியில், சட்டம் குறித்து நாசர் பேசும் வசனம் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. எனவே படம் பெரிய எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளது.