விறுவிறுப்பான சைக்கோ த்ரில்லர் படமாக ஹாலிவுட் தரத்தில் ‘லாக்’ படம் உருவாகியுள்ளது. ‘அட்டு’ படத்தின் இயக்குநர் ரத்தன் லிங்காவின் அடுத்த படைப்பு இது.
உலகில் வாழும் ஒவ்வொரு மனிதருக்கும் ஒரு கனவு உண்டு. அதை நோக்கிய பயணத்தையே அவர்கள் வாழ்க்கையாக வாழ்கிறார்கள்.
சிலருக்கு அந்தக் கனவுகள் பலிக்கின்றன. சிலருக்குப் பாதிதான் நிறைவேறுகின்றன. சிலருக்குக் கனவுகள் தொடக்கத்திலேயே கருகிப் போய்விடுகின்றன.
இந்த சமுதாயத்தில் நாம் பழகும் மனிதர்கள் நல்லவர்களா? கெட்டவர்களா? என்பதை நாம்தான் கண்டறிய வேண்டும்.
ஏனெனில் இந்த உலகில் நம்மை நாம்தான் காப்பாற்றிக் கொள்ளமுடியும். இல்லாவிட்டால் அதற்குண்டான விளைவுகளை நாம் அனுபவித்தே தீர வேண்டும். இதுவே ‘லாக்’ படத்தின் கரு.
சமூக விரோதிகளும் தீயசக்திகளும் மனிதர்களின் கனவில் கனலை மூட்டி விடுகிறார்கள். கனவு பூவாக மலரும் முன்பே மிதித்துச் சிதைத்துவிடுகிறார்கள். அந்த நகரத்தில் சைக்கோ கொலைகாரர்கள் ஊடுருவுகிறார்கள். அடுத்து தங்கள் பசிக்காக ஜூலி மீது கண்வைக்கிறார்கள்.
மிருகங்களின் கொடூர கரங்களிலிருந்து எப்படி ஜூலி தப்பிக்கிறாள்? சைக்கோ கொலையாளிகள் என்ன ஆனார்கள்? என்பதைப் பரபரப்பாக சொல்லும் படம்தான் லாக்.
அடுத்தடுத்து முடிச்சுகள், திருப்பங்கள் எனக் கதை நகர்கிறது.
படத்தில் நாயகனாக சுதிர், நாயகியாக மது நடிக்க, இரண்டாவது நாயகியாக ஹரிணி நடிக்கிறார்.
தவிர நடன இயக்குநர் பாரதி, சீனிவாச வரதன் ஆகியோரும் நடித்துள்ளனர். இவர்கள் அனைவருக்குமே ஏற்கெனவே சில படங்களில் தோன்றிய அனுபவம் உண்டு.
பா. மகிழ்மதி