மனதை அமைதிப்படுத்தும் ஏழு வழிகள்.
1) உளமாற மன்னியுங்கள்.
உங்களை சங்கடப் படுத்தியவர்களை, உங்களுக்கு துரோகம் இழைத்தவர்களை, மனதிலே சுமந்து கொண்டு அலையாதீர்கள். அவர்களை மன்னித்து விடுங்கள். அதுவே அவர்களுக்கான தண்டனை.
அதற்காக மீண்டும் அவர்களிடம் நட்பு பாராட்ட வேண்டியது அவசியமில்லை.
நீங்கள் செய்வது உங்கள் மனதை சுத்தப்படுத்தும் வழி மட்டுமே. இப்படி நீங்கள் மன்னிக்க ஏற்றுக்கொண்டால், நீங்கள் பலவீனமானவர் என்று அர்த்தம் அல்ல.
உங்களுக்கு செய்ய வேண்டிய வேலைகள் பல உள்ளது, இப்படி பகைமை சுமந்து கொண்டு, மனதை அலட்டிக் கொள்ள வேண்டாம் என உறுதி கொள்ளுங்கள்.
2) மனதார மன்னிப்பு கேளுங்கள்
தெரிந்தோ, தெரியாமலோ நம்மால் யாராவது எந்த வகையிலாவது பாதிக்கப்பட்டு இருந்தால், மனதார மன்னிப்பு கேளுங்கள். மீண்டும் அந்தத் தவறை செய்யக்கூடாது என உறுதி கொள்ளுங்கள்.
3) நன்றி கூறுங்கள்
தாய், தந்தையை, உற்றார் உறவினர்களை, மனைவி / கணவன் குழந்தைகளை, சுற்றமும் நட்புகளையும், இந்த இடத்தையும் சமூகத்தையும், அறிவும் ஆற்றலும், உடலும் ஆரோக்கியமும், தொழிலும் சம்பாதியமும், வசதி வாய்புகளையும், தந்தமைக்கு மனமார்ந்த நன்றியை நித்தமும் கூற மறவாதீர்கள்.
4) இயற்கையை போற்றுங்கள்
பருவம், காலம், உயிரினங்கள், மரம் செடி கொடிகள், என இயற்கை அளித்துள்ள அனைத்தையும் இரசித்து போற்றுங்கள். ஒர் அணு முதல் பல்லாயிர கணக்கான அணுக்களின் கலவையில் உருவாக்கப்பட்டுள்ள படைப்புகளின் பிரம்மாண்டத்தை கண்டு மகிழுங்கள்.
இவைகள் எல்லாம் உங்களை சுற்றி தங்களது விதிப்படி வாழ்ந்து கொண்டு உள்ளது என அறிந்து அவைகளை போற்றி அன்பு செலுத்துங்கள்.
5) உங்களுக்கான நேரத்தை ஒதுக்குங்கள்
தினமும் உங்கள் வசதிக்கு ஏற்ப உங்களுக்கான நேரத்தை ஒதுக்குங்கள். இந்த நேரத்தில், நீங்கள் உங்களை சீர்தூக்கி ஆராய்ந்து உங்கள் செயல்பாடுகளை பார்வையிடுங்கள்.
எதையும் நியாயப்படுத்தவோ, காரணா காரியங்களை விளக்கவோ முயற்சிக்க வேண்டாம். இதுவரை நீங்கள் கடந்து வந்த பாதையை திரும்பிப் பாருங்கள்.
நீங்கள் எப்படிப்பட்டவர் என்பதை இந்தக் காலம் தான் சொல்ல வேண்டும். உங்களுக்கு நீங்கள் உண்மையானவராக இருந்தால் பாதை நிச்சயம் தெளிவு பெறும்.
6) உணவுப் பழக்கத்தை மாற்றுங்கள்
முடிந்த மட்டும் ஆரோக்கியமான இயற்கை உணவு வகைகளை தேர்வு செய்யுங்கள். பசிக்கு மட்டுமே உணவு என்பதில் உறுதியாக இருங்கள். விரதமும் புரதமும் ஆரோக்கியமே.
7) நம்பிக்கையுடன் ஏற்றுக்கொள்ளுங்கள்
மனிதனை இவ்வுலகில் வாழ வைப்பதும் வழிநடத்துவதும் அவனது நம்பிக்கையே. நடந்ததும், நடப்பதும், நடக்கப் போவதும் என எல்லாம் நம்பிக்கை சார்ந்தது.
இதை எந்த அளவிற்கும் நீங்கள் ஏற்றுக் கொள்கின்றீர்களோ அந்த அளவிற்கு உங்களது மனது பக்குவப்படும். எதையும் எதிர்க்க எதிர்க்கத் தான் அது முரண்டு பிடித்தது வலுப்படுத்திக் கொள்ளும். ஏற்றுக்கொண்டு விட்டால் அது தானாக அடங்கி விடும்.
முதலில் இது சிரமமானதாக இருந்தாலும், உங்களது உறுதியைப் பொருத்து, சிறிது நாட்களில் அது தனக்கான வழியை அதுவே வகுத்துக்கொண்டு, எண்ண ஓட்டங்கள் அமைதி பெறத் தொடங்கும்.
இதுவே உங்கள் வாழ்கை முறையாக மாறிவிடும். பின்னர் நீங்களே வியக்கும் அளவுக்கு எல்லாம் சாதாரணமாக, இன்பமயமாக இருப்பதை உணர்வீர்கள்.
– நன்றி: முகநூல் பதிவு