அறிவுமதியின் சிறுகதையும், தமிழன்பன் கிரிக்கெட்டும்!

ராசி அழகப்பன் ‘தாயின் விரல் நுனி’ – தொடர் 12 

ப.உ.ச என அழைக்கப்படும் ப.உ.சண்முகம் அவர்களை கேள்விப்பட்டு இருக்கக்கூடும்.
ஏனென்றால் அவர் டாக்டர் கலைஞர் கருணாநிதி அவர்களின் அமைச்சரவையில் உணவு அமைச்சராக இருந்தவர்.

பின்னாளில் புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர். அவர்கள் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தைத் தொடங்கியதும் கூடவே வந்து விட்டவர். அமைச்சராகவும் இருந்தவர்.

அவர் நன்றாகப் பேசுவார் என்று பலருக்குத் தெரியும். நன்றாக எழுதுவார் என்பது சிலருக்கே தெரியும். அப்படி எழுதக் காரணமாக இருந்தது தாய் வார இதழ்.

அப்படி என்ன அவர் எழுதினார் என்றால் ஒவ்வொரு திருக்குறளுக்கும் ஒரு சிறுகதை எழுத, அதற்கு ஓவியர் ஜெயராஜ் படம் வரைய அழகாக மூன்று பக்கங்கள் வரும்படி வலம்புரிஜான் அவர்கள் ஒரு வாய்ப்பை வழங்கினார்.

‘ஒரு குறள் சிறுகதை‘ என்று தலைப்பில் சுவையாக எழுதினார் ப.உ.ச.

அவருடன் மாதந்தோறும் ஒரு கவிதையை மணிமொழி எழுதிக் கொண்டு வந்தார்.
சூரியகாந்தன், ரகுநாத், கஸ்தூரி ரங்கன் அலுவலக ஆஸ்தான எழுத்தாளர்கள்.

பொன்.ஜெயந்தன் வானவில் என்று சினிமா செய்திகளை தொகுத்து கொடுத்துக் கொண்டிருந்தார்.

பிக்பாஸில் பிரபலம் உமா சம்பத் அவர்களின் தந்தை ஆர்.சி.சம்பத் பிலிம் இன்ஸ்ட்டிடியூட்டில் படித்தவர்.

அவர் அவ்வப்போது ஃபிரீலேன்ஸராக எழுதிக் கொண்டிருந்தார்.

அப்படி எழுதிய ஒரு கவிதை பிரபலமாக பேசப்பட்டது.

அது இதுதான்.

“திருமணம்

சொர்க்கத்தில் நிச்சயிக்கப்படுகிறது

என்கிறீர்கள்.

சரி

அவ்வளவு உயரத்தில்

ஏதாவது ஒரு

அசம்பாவிதம் நடந்தால்

எப்படிக் காப்பாற்றுவது?”

– என்று கிண்டலும் கேலியுமாக எழுதி இருப்பார்.

அதை மேடைதோறும் வலம்புரிஜான் அவர்கள் பேசினார்.

கவிஞரும் எழுத்தாளருமான ஆண்டாள் பிரியதர்ஷினி இன்று பிரபலமாக எல்லோருக்கும் தெரியும். ஆனால் அவரின் முதல் சிறுகதை வந்தது ‘தாய்’ இதழில் தான்.

“இலட்சியங்களுக்கு இரங்கற்பா”

இது தான் அவரது முதல் சிறுகதை என்று ஆசிரியர் அடிக்கோடிட்டார்.

அந்தக் காலகட்டத்தில் மிகப் பிரபலமான எழுத்தாளர்களும் இந்த இதழில் எழுதிக் கொண்டிருந்தார்கள்.

இதயம் பேசுகிறது, ஆனந்த விகடன், குமுதம் போன்ற பத்திரிகைகளில் எழுதிக் கொண்டிருந்த எழுத்தாளர் சிவசங்கரி ‘பிராயச்சித்தம்’ என்று ஒரு தொடர் எழுதினார்.

அதேசமயம் ‘நாளொரு மேனி’ என்று சுஜாதாவும் ஒரு தொடர்கதை எழுதிக் கொண்டிருந்தார்.

‘முத்தமிட நேரமில்லை’ என்ற தொடரை அனுராதா ரமணன் எழுதிக் கொண்டிருந்தார்.

அப்போது பிரபலமாக இருந்த நடிகை லக்ஷ்மி ‘நினைவுகள் பசுமையானவை’ என்ற ஒரு தொடரை எழுதினார்கள். அது அவருடைய வாழ்க்கையின் பிம்பங்கள்.

நான் சுயத்தன்மையோடு எழுதத் துவங்கிய காலகட்டம்.

‘தெருக்கூத்தைக் காப்பாற்றியாக வேண்டும்’ என்று வேட்டவலம் கே.எஸ்.கண்ணன் அவருடைய கருத்தை நான் வெளியிட்டேன்.

“அவரவர் வாதம் அப்படியே“ என்று கலைஞர்களின் எண்ணங்களைத் தொகுத்தேன்.

இசை மேதைகள் வீணை சிட்டிபாபு, டி.என்.கிருஷ்ணன், பாலமுரளி கிருஷ்ணா, புல்லாங்குழல் ரமணி போன்றவர்களின் கருத்துக்களைத் தாங்கி ‘தாய்’ பிரசுரம் செய்தது.

அப்போதே “எம்.எஸ்.வியை விட இளையராஜா ஜீனியஸ்“ என்ற ஒரு வாதத்தை கிளப்பி கலந்துரையாடலாய் வெளியிட்டது. அது பிரபலமாக அப்போது பேசப்பட்டது.

சொன்னால் ஆச்சரியமாக இருக்கும் ‘பைரவி பதில்கள்’ வலம்புரி ஜானின் கவித்துவ வரிகள் தாங்கி வருவது.

அதைப் படிப்பதற்கு என்று ஒரு வாசகர் வட்டம் இருந்தது. ஒரு வாசகர் கேட்ட கேள்வியையும், அதற்கு ஆசிரியர் தந்த பதிலையும் இங்கே நினைவுபடுத்துகிறேன்.

ஜனவரி 10, 1982 – இதழில் அருப்புக்கோட்டை வேலாயுதம் என்ற ஒரு வாசகர் ஒரு கேள்வி கேட்டிருந்தார்.

கேள்வி: புரட்சித் தலைவரை முதன்முதலில் எந்த நாளில் சந்தித்தீர்கள். நினைவிருக்கிறதா?

பைரவி பதில்: 1971 ஆம் ஆண்டு, மே மாதத்தில் முதன் முதலில் சந்தித்தேன்.
மாணவர்கள் சார்பில் கொண்டாடப்பட்ட கலைஞர் கருணாநிதியின் பிறந்தநாள் விழாவிற்காக நன்கொடை வாங்கச் சென்றேன். பணத்தைத் தந்து பாசத்தைப் பொழிந்தார். அதுதான் முதல் சந்திப்பு.

இப்படியாக ஒரு பதில்.

நினைவலைகளை இவ்வாறு திருப்பிக் கொண்டு செல்கிற போது அரசு மணிமேகலை எழுதுவது நினைவிற்கு வந்தது. அவர் காயிதே மில்லத் கல்லூரி பேராசிரியர். நல்ல பேச்சாளர்.

‘மாதர் மையம்‘ என்ற தலைப்பில் பெண்களின் பிரச்சினைகளை ஒரு தொடராக எழுத அது வெளிவந்தது.

இங்கே ஒன்றை நினைவு கூற வேண்டும். ஜெயகாந்தன் அவர்கள் எப்படி கம்போசிங்கில் இருந்து சிறுகதை, கவிதை எழுத வந்தாரோ அது போல் தாயிலும் ஒருவர் இருந்தார்.

ஜெயகாந்தன் அவர்களைப் போல இவரும் எழுத்து வல்லமை கொண்டவர் என்பதற்காக குறிப்பிடவில்லை. இந்த ஒப்பீடு கம்போசிங் அதிலிருந்து அவர் எழுதுகிறார் என்பதற்காகவே.

சகாயம், முன்பல் நீண்ட கருத்த உடல் கொண்ட திருநெல்வேலிக்காரர். அவருடைய எழுதியதை ஆசிரியரிடம் காண்பித்ததும் உடனே அவர் இதை பிரசுரம் செய்ய வேண்டும் என்று அவரிடமே கம்போசிங் செய்ய கொடுத்தார்.

‘நெஞ்சின் அலைகள் நினைவின் நிழல்கள்‘ எதைப் பற்றியது என்று சொன்னால் இயேசுநாதர் பற்றியது.

நிறைய வாசகர்களைக் கவர வேண்டும் என்பதற்காகவே ஹேமா ஆனந்த தீர்த்தனின் கதைகளை வாங்கி அனைவரும் வெளியிடுவது வழக்கம்.

அதேபோல் தான் தாய் ஒரு தொடர் வெளியிட்டது. அதன் பெயர் ‘ரேகா சதீஷ் ராஜி’
தலைப்பிலேயே அவர் என்ன எழுதியிருப்பார் என்று புரிந்து கொள்ளலாம் தானே?!

ஒவ்வொரு துறையாக ஒவ்வொரு வாரமும் சிறப்பிதழ் வெளியிட்டு வாசகர்களை கவர வேண்டும் என்பது அப்போதைய திட்டத்தில் ஒன்று. அதேபோல் கிரிக்கெட் சிறப்பிதழ் ஒன்றும் தயாரிக்கப்பட்டது.

இப்போது குமுதத்தில் தொடர்ந்து பிரபலமாக எழுதிக் கொண்டிருக்கிற திருவேங்கிமலை சரவணன் அப்பொழுது அவர் இந்த இதழ் தயாரிக்க பெரும் உதவியாக இருந்தார்.

அப்போது தபாலில் பம்மல் ஆர். ராம்கோ என்று ஒரு வாசகர் புதுவிதமான கிரிக்கெட் குறளை எழுதி அனுப்பியிருந்தார். அதைப் பார்த்துவிட்டு உடனே வெளியிடவும் செய்தார் ஆசிரியர்.

அதில் ஒரு குறள்.

“ரன்எடுத்து வாழ்வாரே வாழ்வார் மற்றெல்லாம்

டக்கெடுத்து பின் செல்பவர்”

அப்படியே புரட்டிக் கொண்டு வந்தபோது கவிஞர் ஈரோடு தமிழன்பன் கிரிக்கெட் பற்றி எழுதிய ஒரு கவிதை கண்டதும் ஆச்சரியப்பட்டேன்.

அந்த கவிதை இதுதான்.

வாழ்க்கையும் கிரிக்கெட்டும்:

வாழ்க்கைக் கிரிக்கெட்டில்
அவாய்மை குவிக்கும்
ஓட்டங்களைக் கணக்கிட்டால்
கவாஸ்கர் பற்றிய
நமது – கர்வம்
கரைந்து போய்விடும்.

ஒவ்வொருமுறையும்
ரணம் பட்ட உடம்போடு வாய்மை
ரன் அவுட் ஆகிறது”

இதில் அவாய்மை என்ற சொல்லைப் பயன்படுத்தி உள்ளார். அதன் பொருள் பொய்மை என்பதாகும்.

நகைச்சுவை நாடகங்களிலும், திரைப்படத்திலும் கொடிகட்டிப் பறந்த நகைச்சுவை நாயகன் எஸ்.வி.சேகர் கூட ஒரு கவிதை எழுதி இருக்கிறார்.

அந்தக் கவிதை,

“கருப்பாய் குழந்தை
யாரோ அடித்ததும்
கதறக் கதற
அழுத்து கண்ணீர் விட்டு…”

இது அவருடைய கவிதைப் பார்வை.

பாவலர் அறிவுமதி பற்றி நீங்கள் கேள்விப்பட்டிருப்பீர்கள்.

அவர் தனக்கென்று ஒரு தனி அடையாளத்தை கவிதை உலகத்திலும், திரைப்பட உலகத்திலும் எழுதி (ஆங்கிலம் கலக்காத தமிழ்ப் பாடல்களை எழுதுபவர்) உலகமெங்கும் அறிப்பட்டிருக்கிறார்.

அந்த நாளில் அறிவுமதி வீடு பலருக்கும் அடைக்கலம் தந்த வீடு.

அவரை ஒருமுறை சந்தித்து நீங்கள் சிறுகதையை புதுக்கவிதை வடிவில் எழுதினால் என்ன என்று கேட்டேன்.

அதற்கு அவர் எழுதலாமே என்றார்.

எழுதித் தாருங்கள் என்று சொன்னதும் அவர் ‘தண்ணீரின் தாகங்கள்‘ என்ற தலைப்பிட்டு ஒரு சிறுகதையை புதுக்கவிதையில் அழகிய வடிவில் எழுதி அளித்தார்.

அது இதுதான்:

காதலனும் காதலியும் மனம்விட்டு காதலித்துக் கொண்ட பிறகு ஒரு காலகட்டத்திற்குப் பின் காதலி வேறு ஒருவனை திருமணம் செய்து கொள்கிறாள்.

வேறு வழி தெரியாமல் தனித்து நின்ற அந்தக் காதலன் – நீ கட்டிய கணவனோடு உன் வாழ்க்கையை செம்மையாய் நடத்து – என்று சொல்லி தன்னுடைய எண்ணங்களை வெளிப்படுத்துகிற காதலனாக அது வெளிவந்தது.

அந்த சிறுகதை – புதுக்கவிதை வடிவத்தில் வந்ததைப் பாருங்கள்.

முதலில் அந்த சிறுகதை இப்படித்தான் துவங்குகிறது,

“எனது
உதடுகளின் மேல்
வாலிபம் வந்து
அமர்வதற்கு முன்னதாக
உதய காலம் ஒன்றின் முற்றத்தில்…
அன்பே!
உன்னை நான் சந்தித்தேன.
நீ போகிறாய்
மெல்லமெல்ல…”

எனத் தொடங்கும் அந்த சிறுகதை புதுக்கவிதை வடிவம் இறுதியிலே எவ்வாறு அடையாளப்படுத்துகிறது என்று பாருங்கள் –

“ஒரு
வானவில்லைப் போல்
வளர்ந்த காதல்
இதோ
உடைந்த வளையல் துண்டாய்
புழுதியில்
கிடக்கிறது”

காதலின் வலியை இவ்வாறாக அவர் வளையல்களின் மூலமாக சொல்வதை நாம் காண முடிகிறது.

பின்னொரு நாளில் ஒரு கவிதையில்,

“குளத்தில் கல்லெறிந்தேன்
நிறைய வளையல்கள்“ என்று எழுதி இருப்பார்.

வளையல்கள் என்பது அவருடைய மனதில் அழுந்திக் கிடக்கிற ஒரு படிமம்.

தாய் இதழில் நானும் பிரபுவும் போட்டி போட்டுக் கொண்டு எழுதினோம். அப்பொழுது நான் வாரத்திற்கு 10க்கும் மேற்பட்ட பக்கங்களில் எழுதுவேன்.

இலக்கியம், சமூகம், திரைப்படம் இசை என்ற எல்லா வடிவங்களிலும் எழுதிக் கொண்டிருந்ததால் ஒரே பெயரை நான் பயன்படுத்துவதை விரும்பாத காரணத்தால் வேறு பெயர்களிலும் வேலன்டினா, மதி, ராசி, ராஜா, ராசி அழகப்பன் என்ற பெயர்களில் எழுதினேன்.

அத்தி என்ற பெயரில் வந்த ஒரு நேர்காணல் அனைவராலும் அப்போது பேசப்பட்டது.

ஒவ்வொரு கலைஞனின் அப்டேட் தான் அந்தப் பகுதி. அதற்கு வலம்புரிஜான் “ஆமாங்க அது என்ன ஆச்சு“ என்று வித்தியாசமாக தலைப்பிட்டு இருந்தார்.

எம்.ஜி.வல்லபன் ‘பிலிமாலயா’ என்ற இதழை நடத்திக் கொண்டிருந்தார். அது என்ன ஆயிற்று என்பது கேள்வி?

நடிகை விதுபாலா ‘பிரயாகா‘ மலையாளப் படம் என்ன ஆயிற்று என்பதான பதில்.

ரதி என்ற திரைப்படத்தை இயக்கிய கமல தியாகராஜன் பற்றிய ஒரு நேரடி கேள்வி.
அதை விட முக்கியமான விஷயம்.

பாரதிராஜா இயக்கிய ‘16 வயதினிலே‘ படக் கதை எழுதிய ஆர்.செல்வராஜ் இயக்குனராகி ‘புதிய அடிமைகள்‘ என்றொரு படத்தை எடுத்தார், இயக்கினார். அது ஒரு கலைப் படம் என்று பேசப்பட்டது.

அது என்ன ஆயிற்று என்பதுதான் தெளிவு.

இசையமைப்பாளர் சந்திரபோஸ் அவர்கள் ‘நெருப்பு நீராகிறது‘ என்ற படத்தில் நடித்தார். ஆனால் வெளி வரவே இல்லை.

இது என்ன ஆயிற்று?

இது என்ன புதிதான வித்தியாசம் என்று கேட்கக் கூடும்.

ஏதோ கேள்விப்பட்டோம் என்று கிசுகிசுவாக எழுதாமல் நேரடியாக கலைஞர்களின் உள்ளம் பதிவை வெளிட எண்ணியதுதான் ஜர்னலிச நேர்மை.

கவிவேந்தர் மு.மேத்தா அவர்களின் தொடர் கவிதை ‘தாய்’ இதழை பெருவாரியாக முன்னிலையில் வாசகர்களிடம் கொண்டு போய் சேர்த்தது.

அது வாசகனுக்கு புத்தம் புதிய செய்திகளையும் பரவசமான மொழிநடையையும் வழி செய்தது.

இப்படியாக எல்லோரையும் கவர்ந்து வந்த தாய் பல்வேறு புதிய செயல்களிலும் ஈடுபட்டது.

(தொடரும்…)

24.03.2022  12 : 30 P.M

You might also like