மணிப்பூர் – இறுதிக்கட்ட வாக்குப்பதிவு தீவிரம்!

5 மாநில சட்டசபைத் தேர்தலில் உத்தரகாண்ட், கோவா, பஞ்சாப் ஆகியவற்றில் ஒரே கட்டமாக வாக்குப்பதிவு முடிந்தது.

403 தொகுதிகளை கொண்ட உத்தரபிரதேச மாநிலத்தில் 7 கட்டங்களாகத் தேர்தல் நடத்தப்படுகிறது. இதுவரை 6 கட்ட வாக்குப்பதிவு முடிந்துவிட்டது. இறுதிக்கட்ட வாக்குப்பதிவு வரும் 7-ம் தேதி நடைபெற உள்ளது.

வடகிழக்கு மாநிலமான மணிப்பூரில் 2 கட்டங்களாகத் தேர்தல் நடத்த முடிவு செய்யப்பட்டிருந்தது. அதன்படி முதல் கட்டமாக 38 தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு கடந்த 28-ம் தேதி நடந்தது.

2-வது மற்றும் இறுதிக்கட்ட தேர்தல் இன்று நடைபெறுகிறது.

காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியது. மக்கள் நீண்ட வரிசையில் நின்று தங்களது ஜனநாயக கடமையை ஆற்றி வருகிறார்கள். மாலை 4 மணி வரை வாக்குப்பதிவு நடைபெறுகிறது.

10 மாவட்டங்களில் 22 தொகுதிகளில் நடைபெறும் இந்த தேர்தலில் மொத்தம் 8.38 லட்சம் பேர் வாக்களிக்கிறார்கள்.

இதற்காக 1,247 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டு உள்ளது. கொரோனா விதிமுறைகளை பின்பற்றி வாக்குப்பதிவு நடைபெற்றது.

92 வேட்பாளர்களின் நிலைமையை இன்றையத் தேர்தல் முடிவு செய்யும்.

காங்கிரசில் இருந்து 18 வேட்பாளர்களும், பா.ஜனதாவில் இருந்து 12 வேட்பாளர்களும், தேசிய மக்கள் கட்சியில் இருந்து 11 வேட்பாளர்களும் போட்டியில் உள்ளனர். ஜனதா தளம், நாகா மக்கள் முன்னணி கட்சியில் இருந்து தலா 10 பேரும் களத்தில் உள்ளனர்.

மாநில முதல்வராக மூன்று முறை பதவி வகித்த காங்கிரஸ் மூத்தத் தலைவர் இபோபி சிங்கும் முக்கிய வேட்பாளர்களில் ஒருவர் ஆவார்.

இறுதிக்கட்டத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களில் 17 பேர் குற்ற பின்னணி கொண்டவர்கள்.

முதற்கட்ட தேர்தலின்போது ஏற்பட்ட வன்முறையால் சுராசாந்த்பூர், காங்போக்பி, இம்பால் கிழக்கு மாவட்டங்களில் அமைக்கப்பட்டிருந்த 12 வாக்குச்சாவடிகளில் மறு வாக்குப்பதிவுக்கு உத்தரவிடப்பட்டு இருந்தது.

அந்த வாக்குச்சாவடிகளில் இன்று வாக்குப்பதிவு நடைபெறுகிறது.

தேர்தலையொட்டி பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தது. 20 ஆயிரம் துணை ராணுவ வீரர்களும், 5 ஆயிரம் காவல் துறையினரும் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.

05.03.2022  12 : 30 P.M

You might also like