– வேட்பாளர்களுக்கு மாநில தேர்தல் ஆணையம் உத்தரவு
தமிழகத்தில் 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள், 489 பேரூராட்சிகள் என 648 நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு கடந்த 19-ம் தேதி தேர்தல் நடைபெற்றது.
தேர்தலில் வேட்பாளர்கள் செலவிட்ட தொகைக்கான கணக்கை முறைப்படி உரிய படிவத்தில் பராமரிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டிருந்தது.
அந்தப் படிவத்தில் குறிப்பிட்டிருந்த விதிமுறைகள்:
“பராமரிக்கப்பட்ட கணக்கின் உண்மை நகலை, தேர்தல் முடிவு அறிவிக்கப்பட்ட நாளிலிருந்து 30 நாட்களுக்குள் தாக்கல் செய்ய வேண்டும்.
மாநகராட்சி கவுன்சிலர் பதவிக்கு போட்டியிட்டவர்கள், மாவட்டத் தேர்தல் நடத்தும் அலுவலர்களான மாவட்ட ஆட்சியர்களிடமும், சென்னை மாநகராட்சியில் போட்டியிட்டவர்கள், மாநகராட்சி ஆணையரிடமும் தாக்கல் செய்ய வேண்டும்.
நகராட்சி கவுன்சிலர் பதவிக்கு போட்டியிட்டவர்கள், நகராட்சி ஆணையரிடமும், பேரூராட்சி கவுன்சிலர் பதவிக்கு போட்டியிட்டவர்கள், செயல் அலுவலர்களிடமும், கணக்கை தாக்கல் செய்ய வேண்டும்.
போட்டியின்றித் தேர்வு செய்யப்பட்டவர்களும், தேர்தல் செலவு கணக்கு விபரத்தை உரிய அலுவலரிடம் தாக்கல் செய்ய வேண்டும். செலவு கணக்கு தாக்கல் செய்ததற்கான ஒப்புதலை, வேட்பாளர்கள் பெற்றுக் கொள்ள வேண்டும்.
தாக்கல் செய்யாத வேட்பாளர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்; மூன்று ஆண்டுகளுக்கு உள்ளாட்சித் தேர்தல்களில் போட்டியிட தகுதியற்றவர் என அறிவிக்கப்படுவர்” எனக் குறிப்பிடப்பட்டிருந்தது.
அதன்படி இந்த நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிட்ட வேட்பாளர்கள் அனைவரும் தேர்தல் செலவுக் கணக்கை ஒப்படைக்க வேண்டும்.
26.02.2022 4 : 30 P.M