வாக்கு எண்ணும் மையங்களில் 3 அடுக்கு பாதுகாப்பு!

– சிசிடிவி மூலம் 24 மணி நேரமும் கண்காணிப்பு

தமிழகத்தில் சென்னை, திருச்சி, மதுரை, கோவை உட்பட 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள், 489 பேரூராட்சிகளில் மொத்தமுள்ள 12,820 வார்டு கவுன்சிலர் பதவியிடங்களுக்கு ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற்றது.

12,870 வார்டு கவுன்சிலர் பதவிகளுக்கு 57,746 பேர் போட்டியிட்டனர்.

19 ஆம் தேதி காலை காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு துவங்கி விறுவிறுப்பாக நடந்தது.

மாநிலம் முழுவதும் வாக்குச்சாவடி மையங்களில் 55,337 கட்டுப்பாட்டு இயந்திரங்கள், 1,06,121 வாக்குப்பதிவு இயந்திரங்கள் பயன்படுத்தப்பட்டது.

தேர்தல் பணியில் 1.32 லட்சம் ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்களும், பாதுகாப்பு பணியில் 1.13 லட்சம் காவல்துறையினரும் ஈடுபடுத்தப்பட்டனர்.

மொத்தமுள்ள 30,745 வாக்குச்சாவடி மையங்களில் 25,735 வாக்குச்சாவடிகளில் சிசிடிவி கேமரா பொருத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டது. 5,000 வாக்குச்சாவடிகள் வெப் கேமரா மூலம் கண்காணிக்கப்பட்டது.

இறுதி நிலவரப்படி தமிழகத்தில் மொத்தமாக 60.70% வாக்குகள் பதிவானது. பேரூராட்சியில் 74.68 சதவீதம், நகராட்சியில் 68.22 சதவீதம், மாநகராட்சியில் 52.22 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளது.

சென்னையில் 43.59 சதவீதம் பேர் மட்டுமே வாக்களித்துள்ளனர்.

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் வாக்குப்பதிவு முடிந்தவுடன் வாக்குச்சாவடி முகவர்கள் முன்னிலையில் தேர்தல் அதிகாரிகள் வாக்குப்பதிவு இயந்திரங்களுக்கு சீல் வைத்தனர்.

பிறகு தேர்தல் அலுவலர்கள் முன்னிலையில் துப்பாக்கி ஏந்திய பலத்த காவல் துறையினரின் பாதுகாப்புடன் வாகனங்களில் வாக்குப்பதிவு இயந்திரங்கள் ஏற்றப்பட்டு அந்தந்த வாக்கு எண்ணும் மையங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

சென்னையில் 15 இடங்கள் உட்பட தமிழகம் முழுவதும் அமைக்கப்பட்டுள்ள 268 வாக்கு எண்ணும் மையங்களுக்கு விடிய விடிய வாக்குப்பதிவு இயந்திரங்கள் கொண்டு செல்லப்பட்டு அறையில் அடுக்கி வைத்து அந்த அறைக்கு முகவர்கள், அதிகாரிகள் முன்னிலையில் சீல் வைக்கப்பட்டது. அதன் பின்னர் அந்த அறைகளுக்கு துப்பாக்கி ஏந்திய காவல்துறை பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

ஒவ்வொரு வாக்கு எண்ணும் மையத்துக்கும் மூன்றடுக்கு காவல்துறை பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

அதன்படி வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டு பூட்டி சீல் வைக்கப்பட்டுள்ள ஸ்டிராங் ரூம் அருகே துப்பாக்கி ஏந்திய காவல்துறையினர், அதற்கடுத்து 2-வதாக வாக்கு எண்ணும் மைய வளாகத்தில் சட்டம், ஒழுங்கு காவல்துறையினர், 3வதாக வாக்கு எண்ணும் மையத்தின் வெளியே போக்குவரத்து காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

வாக்குப் பதிவு இயந்திரம் வைக்கப்பட்டு சீல் வைக்கப்பட்ட அறையில் வெப் கேமரா மூலம் 24 மணி நேரமும் காவல்துறையினர் மற்றும் தேர்தல் ஆணைய அதிகாரிகள் கண்காணித்து வருகின்றனர்.

இதற்காக காவல் கட்டுப்பாட்டு அறை ஒன்றும் மற்றொன்று தேர்தல் அதிகாரிகள் கட்டுப்பாட்டு அறை என இரண்டு கட்டுப்பாட்டு அறைகள் அமைக்கப்பட்டுள்ளது.

சென்னையைத் தவிர அந்தந்த மாவட்ட கண்காணிப்பாளர்கள் தலைமையில் பாதுகாப்புப் பணியில் காவல்துறையினர் ஈடுபட்டு வருகின்றனர்.

தமிழகம் முழுவதும் உள்ள 268 வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள இடங்கள் மற்றும் வாக்கு எண்ணும் மையங்களின் உள் மற்றும் வெளிப்பகுதியில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு 24 மணி நேரமும் கண்காணிக்கப்பட்டு வருகிறது.

நாளை காலை 8 மணிக்கு வாக்கு எண்ணிக்கை தொடங்குகிறது. அதற்கான ஏற்பாடுகளை மாநில தேர்தல் ஆணையம் செய்து வருகிறது. முதலில் தபால் வாக்குகள் எண்ணப்பட்டு அறிவிக்கப்படும்.

அதைத் தொடர்ந்து வேட்பாளர்கள் அல்லது வேட்பாளர்களின் முகவர்கள் முன்னிலையில் சீல் வைக்கப்பட்ட இயந்திரம் சீல் அகற்றப்பட்டு, அதைத் தொடர்ந்து வாக்கு எண்ணிக்கை நடைபெறும்.

ஒவ்வொரு சுற்று வாக்கு எண்ணிக்கை முடிந்தவுடன் அங்குள்ள வேட்பாளர்கள், முகவர்கள் முன்னிலையில் அறிவிக்கப்படும்.

மேலும், பொதுமக்கள் தெரிந்து கொள்ளும் வகையில் ஒலிபெருக்கி மூலமும் சுற்று முடிவுகள் அறிவிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

21.02.2022 12 : 30 P.M

You might also like