நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல்: இன்றுடன் பிரச்சாரம் நிறைவு!

தமிழகத்தில் 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள், 490 பேரூராட்சிகளில் உள்ள மொத்தம் உள்ள 12,838 வார்டு உறுப்பினர் பதவிகளுக்கான நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் நாளை மறுநாள் (பிப்ரவரி 19-ம் தேதி) ஒரே கட்டமாக நடைபெற இருக்கிறது.

இந்தத் தேர்தலில் போட்டியிடும் அரசியல் கட்சியினர் கடைசி கட்ட தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளனர்.

தேர்தல் நடத்தை விதிகளின்படி, அரசியல் கட்சிகளின் தேர்தல் பொதுக்கூட்டங்கள், ஊர்வலங்கள் உள்ளிட்ட அனைத்து பிரசார நிகழ்ச்சிகளும், வாக்குப்பதிவு நடைபெறும் 48 மணி நேரத்துக்கு முன்னதாக முடித்துக் கொள்ள வேண்டும் என்பதால், தேர்தல் பிரச்சாரம் இன்று மாலை 6 மணியுடன் நிறைவு பெறுகிறது.

மாலை 6 மணிக்கு மேல் பிரச்சாரம் செய்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், தேர்தல் நடைபெறும் வார்டுகளுக்கு தொடர்பு இல்லாதவர்கள் அங்கிருந்து வெளியேற வேண்டும் என்று மாநிலத் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

மாநில தேர்தல் ஆணைய அலுவலகத்தில் தேர்தல் ஆணையர் பழனிகுமார் தலைமையில் காவல்துறை அதிகாரிகள் மற்றும் தேர்தல் நடத்தும் அலுவலர்கள் பங்கேற்ற ஆலோசனைக் கூட்டம் நேற்று நடைபெற்றது

இந்தக் கூட்டத்தில் தேர்தல் முன்னேற்பாடுகள் குறித்தும், வாக்குச்சாவடி மற்றும் வாக்கு எண்ணும் மையங்களின் பாதுகாப்பு குறித்தும் ஆலோசனை நடத்தப்பட்டது. சட்டம், ஒழுங்கு பாதுகாப்பு, வாக்குப்பதிவு இயந்திரங்களை எடுத்துச் செல்வது குறித்தும் விவாதிக்கப்பட்டது.

தேர்தல் நடைபெறும் 19-ம் தேதியன்று காலை 7 முதல் மாலை 5 மணி வரையிலும், வாக்குப்பதிவு நடைபெறும். கொரோனா பாதித்தவர்களுக்காக மாலை 5 மணி முதல் 6 மணி வரை வாக்களிக்க நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது.

வாக்குகள் வரும் 22-ம் தேதி எண்ணப்பட உள்ளது.

நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலை முன்னிட்டு வரும் 19-ம் தேதி அனைத்து பள்ளிகளுக்கும் விடுமுறை அறிவித்து பள்ளிக்கல்வித்துறை ஆணையர் நத்தகுமார் உத்தரவிட்டுள்ளார். 50%க்கு அதிகமான ஆசிரியர்கள் தேர்தல் பணியில் இருந்தால் அந்த பள்ளிகளுக்கு 18-ம் தேதியும் விடுமுறை அளிக்கலாம் என கூறப்பட்டுள்ளது.

இதேபோல் தேர்தலை முன்னிட்டு, இன்று முதல் 19-ம் தேதி வரை டாஸ்மாக் கடைகள் இயங்க தடை விதித்து மாநில தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

வாக்கு எண்ணிக்கை நடைபெறும் நாளான பிப்.22-ம் தேதி அன்று வாக்கு எண்ணிக்கை நடைபெறும் பகுதிகளிலும், அருகில் 5 கி.மீ. சுற்றளவில் உள்ள பகுதிகளிலும் டாஸ்மாக் கடைகளை மூட உத்தரவிடப்பட்டுள்ளது.

17.02.2022 12 : 30 P.M

You might also like