உருவாகிறது பலமான மூன்றாவது அணி?

திடீர் திருப்பங்களின் பின்னணி!

மேற்கு வங்க மாநில சட்டசபைத் தேர்தலில் திரிணாமூல் காங்கிரஸ் கட்சியை பா.ஜ.க.வால் தோற்கடிக்க முடியவில்லை.

ஆனால் நந்திகிராமில், திரிணாமூல் காங்கிரஸ் தலைவர் மம்தா பானர்ஜியை  தோற்கடித்தது.

தேர்தலில் தோற்ற நிலையில் மம்தாவுக்கு தொடர்ச்சியாக நெருக்கடிகளைக் கொடுத்து வருகிறது பாஜக.

இதனால் 2024-ம் ஆண்டு நடைபெறும் பொதுத் தேர்தலில் பாஜகவை வீழ்த்தியே தீர வேண்டும் என தீர்மானித்து கொஞ்ச வாரங்களுக்கு முன்பு டெல்லி சென்றார். சோனியாவை சந்தித்தார். அந்தப் பேச்சு மம்தாவுக்கு ஏமாற்றம் அளித்தது. சோர்வுடன் கொல்கத்தா திரும்பினார்.

விதை போட்ட ஆளுநர்கள்

இப்போது – காங்கிரஸ் நீங்கலான, வலிமையான மூன்றாவது அணி அமைவதற்கான வாய்ப்புகள் கடந்த சில நாட்களில் பிரகாசமாகி உள்ளன.

மூன்றாம் அணி முளைப்பதற்கு சில மாநிலங்களின் ஆளுநர்கள் விதை போட்டுள்ளனர் எனக் கூறலாம்.

மகாராஷ்டிராவில் உத்தவ் தாக்கரே முதலமைச்சராக பதவி ஏற்றது முதலே, அவருக்கு  ஆளுநர் குடைச்சல் கொடுத்து கொண்டே இருக்கிறார். மேற்குவங்க கதையும் அது தான்.

நீட் விவகாரத்தில் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி. முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுடன் மோத ஆரம்பித்துள்ளார்.

ஆளுநர்கள் மீதான அதிருப்தி, எதிர்க்கட்சி முதல்வர்கள் ஒருங்கிணைய பாதை அமைத்துக் கொடுத்துள்ளது.

சில தினங்களுக்கு முன்பு மேற்குவங்க சட்டசபையை ஆளுநர் ஜக்தீப் தங்கர் முடக்கி வைத்தார்.

இந்த விவகாரத்தில் மம்தாவுக்கு ஆதரவாக குரல் கொடுத்தார் மு.க.ஸ்டாலின்.

அவருக்கு நன்றி சொன்ன மம்தா, அப்போது மூன்றாவது அணி அமைப்பது குறித்து பேச்செடுத்தார். ஓ.கே சொல்லி விட்டார் ஸ்டாலின்.

அடுத்ததாக தெலுங்கனா முதல்வர் கே.சந்திரசேகர் ராவுடன் தொலைபேசியில் தொடர்பு கொண்டு விவாதித்தார்.

சந்திரசேகர் ராவ், இந்த நாள் வரை பாஜகவின் ஆதரவாளராகவே செயல்பட்டு வந்தார்.

பாஜக அரசின் திட்டங்களை கண்ணை மூடிக்கொண்டு ஆதரித்தார். இப்போது மூன்றாவது அணி அமைக்கும் மம்தாவின் ஐடியாவை ஏற்றுக்கொண்டுள்ளார். மம்தாவே எதிர்பாராத நிகழ்வு இது.

மம்தாவிடம் பேசிய கையோடு பேட்டி அளித்த அவர், ’’பாஜகவுக்கு எதிரான கட்சிகளை ஒன்று திரட்ட போகிறேன். மகாராஷ்டிர முதல்வர் உத்தவ் தாக்கரேயை சந்திக்க முடிவு செய்துள்ளேன். மம்தாவை நேரில் சந்திப்பேன்’’ என அறிவித்தார்.

தாக்கரேயிடம் இருந்து உடனடி பதில் வந்துள்ளது. அவர், சந்திரசேகர் ராவுக்கு ஞாயிற்றுக்கிழமை மும்பையில் விருந்தளிக்கிறார்.

அரசியல் அரங்கில் இது ஒரு திருப்பமாகவே பார்க்கப்படுகிறது

சந்திரசேகர் ராவ் – தாக்கரே சந்திப்பில், மூன்றாம் அணிக்கான பிள்ளையார் சுழி போடப்படுவது உறுதி என்கிறார்கள் இரு தரப்பினரும்.

மாற்றம் ஏன்? 

தெலுங்கானாவில் காங்கிரசோ, தெலுங்கு தேசமோ ஆளும் கட்சியான தெலுங்கானா ராஷ்டிரிய சமிதிக்கு (டிஆர்எஸ்) சவால் விடுக்கும் வகையில் ஒரு சக்தியாக இல்லை.

ஆனால் பாஜக விசுவரூப வளர்ச்சி அடைந்து வருகிறது. 2018-ம் ஆண்டு நடந்த தெலுங்கானா சட்டசபைத் தேர்தலில் பாஜக 7 சதவீத வாக்குகளை வாங்கியது.

2019-ல் நடந்த மக்களவைத் தேர்தலில் பாஜகவின் வாக்குச் சதவீதம் 20% ஆக உயர்ந்தது.

உச்சகட்டமாக கடந்த ஆண்டு இறுதியில் நடந்த இரு சட்டசபை இடைத் தேர்தலில் டிஆர்எஸ் கட்சியை பாஜக வீழ்த்தியது.

இனியும் பாஜகவின் குரலை எதிரொலித்தால், தெலுங்கானா தனது கையை விட்டு  போய்விடும் என்ற யதார்த்த நிலையை உணர்ந்துள்ளார் சந்திரசேகர ராவ்.

அதனால் தான் மம்தாவைக் காட்டிலும், பாஜகவுக்கு எதிராக மூன்றாவது அணியை கட்டமைக்கும் முயற்சியில் தீவிரமாக ஆர்வம் காட்டுகிறார்.

டெல்லியில் ஆலோசனை

5 மாநில சட்டசபைத் தேர்தல் முடிவு வெளியான பின், டெல்லியில் மூன்றாவது அணியை உருவாக்கும் ஆலோசனைக் கூட்டம் நடைபெறும் எனத் தெரிகிறது.

மம்தா, சந்திரசேகர் ராவ், ஸ்டாலின், உத்தவ் தாக்கரே, பினராயி விஜயன், அரவிந்த் கெஜ்ரிவால் ஆகிய முதல்வர்களோடு சமாஜ்வாதி, ஆர்.ஜே.டி., மதசார்பற்ற ஜனதா தளம் உள்ளிட்ட கட்சித் தலைவர்களும் இந்தக் கூட்டத்தில் பங்கேற்கலாம் என நம்பப்படுகிறது.

சிக்கல்

மூன்றாம் அணி உருவாவதில் சிக்கல் இல்லாமலும் இல்லை.

தமிழ்நாட்டில் திமுக கூட்டணியில் காங்கிரஸ் உள்ளது.

மகாராஷ்டிராவில் சிவசேனா ஆட்சியில் காங்கிரசும் அங்கமாக உள்ளது.

தமிழகத்தில் காங்கிரசை கழற்றி விடுவதில் தி.மு.க.வுக்கு தயக்கமோ, சங்கடங்களோ இருக்காது.

ஆனால் தாக்கரேக்கு சிக்கல் உண்டு.

இதனை எப்படி தீர்க்கப் போகிறார்கள் என்பதை காலம் தீர்மானிக்கும்.

– பி.எம்.எம்.

17.02.2022  6 : 30 P.M

You might also like