உத்தரகாண்ட்: 70 தொகுதிகள், 8 முனைப் போட்டி!

சட்டசபைத் தேர்தல் நடைபெறும் 5 மாநிலங்களில் உத்தரகாண்டும் ஒன்று. தேர்தல் செய்திக்கு முன்னால் இந்த மாநிலத்தை பற்றியும் கொஞ்சம் அறிவோம்.

உத்தரப்பிரதேசத்தில் இருந்து பிரித்து 2000-ம் ஆண்டில் உருவாக்கப்பட்ட மாநிலம் இது. ஆரம்பத்தில் இதன் பெயர் உத்தராஞ்சல். 2006-ம் ஆண்டு உத்தரகாண்ட் என மாற்றப்பட்டது.

முழுக்க முழுக்க இமயமலை நிலப்பரப்பில் அமைந்துள்ள மாநிலம். வளமான பூமி.

இந்து கோயில்கள் அதிகம் உள்ளதால் ‘தேவபூமி’ என அழைக்கப்படும் புண்ணிய தேசம். பத்ரிநாத், கேதார்நாத், ஹரித்துவார், ரிஷிகேஷ் போன்றவை குறிப்பிட்டு சொல்லக்கூடிய ஆன்மீகத் தலங்கள்.

இனி அரசியலுக்கு வருவோம். உத்தரகாண்டில் பாஜக ஆட்சி நடைபெறுகிறது. புஷ்கர் சிங் தாமி முதலமைச்சராக இருக்கிறார்.

பிப்ரவரி 14-ம் தேதி ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறுகிறது. மொத்தம் 70 தொகுதிகள். கடந்த 2017-ம் ஆண்டு தேர்தலில் பாஜக 57 இடங்களில் வெற்றி பெற்று ஆட்சி அமைத்தது. திரிவேந்திர சிங் ராவத் முதல்வர் ஆனார்.

உள்கட்சி மோதல் காரணமாக 2021 மார்ச்சில் பதவி விலகினார். திரத் சிங் ராவத் முதல்வர் ஆனார். அவரும் கடந்த ஜூலையில் பதவியை ராஜினாமா செய்தார்.

புதிய முதல்வராக புஷ்கர் சிங் தாமி பொறுப்பேற்றார். ஆம். உத்தரகாண்ட் மாநிலம் ஐந்து ஆண்டுகளில் மூன்று முதல்வர்களை பார்த்துள்ளது. பிரதான எதிர்க்கட்சியாக காங்கிரஸ் உள்ளது.

கடந்தத் தேர்தலில், காங்கிரஸ் 11 தொகுதிகளில் மட்டுமே வெல்ல முடிந்தது. அதிலும் இரண்டு எம்.எல்.ஏ.க்கள், பின்னர் பாஜகவில் சேர்ந்து விட்டனர்.

தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட பின்னர் பாஜக மற்றும் காங்கிரஸ் ஆகிய இரு கட்சிகளில் இருந்தும் கட்சித் தாவல் நடக்கிறது.

70 தொகுதிகள் கொண்ட இந்த மாநிலத்தில் 8 முனைப் போட்டி நிலவுகிறது என்பது வியப்பான உண்மை.

பாஜகவும், காங்கிரசும் தனித்து நிற்கிறது. இரு கட்சிகளுமே 70 தொகுதிகளிலும் வேட்பாளர்களை நிறுத்தியுள்ளது.

டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலின் ஆம் ஆத்மி கட்சியும் 70 இடங்களில் போட்டியிடுகிறது. கடந்த தேர்தலில் ஆம் ஆத்மி இந்த மாநிலத்தில் போட்டியிடவில்லை.

இந்த மாநிலம் உ.பி.யில் இருந்து பிய்த்து எடுக்கப்பட்டு உருவான மாநிலம் என்பதால், உபியில் செல்வாக்காக உள்ள சமாஜ்வாதி மற்றும் பகுஜன் சமாஜ் கட்சிகளும் கோதாவில் குதித்துள்ளன. இந்தக் கட்சிகளும் 70  தொகுதிகளிலும் வேட்பாளர்களை களம் இறக்கியுள்ளது.

உத்தரகாண்ட் கிராந்தி தளம் எனும் பிராந்திய கட்சியும் 70 இடங்களில் நிற்கிறது.

ஐதராபாத் எம்.பி. ஒவைசியின் ஏ.ஐ.எம்.ஐ.எம் கட்சி 22 இடங்களில் போட்டியிடுகிறது.

இடதுசாரிகளும் தங்கள் இருப்பைக் காட்டிக் கொள்ள 10 தொகுதிகளில் வேட்பாளர்களை நிறுத்தியுள்ளனர். ஆனால் நிஜமான போட்டி பாஜகவுக்கும், காங்கிரசுக்கும் தான்.

அண்மையில் நடந்த கருத்து கணிப்பில் பாஜக 35 முதல் 40 இடங்களில் வெல்லும் என தெரிய வந்தது. காங்கிரசுக்கு 27 முதல் 33 தொகுதிகள் கிடைக்கும் என கணிப்பு சொல்கிறது. இழுபறி நிலை என தேர்தல் கணிப்பாளர்கள் கணித்துள்ளனர்.

ஆளும் கட்சிக்கு எதிரான வாக்குகள் சுக்குநூறாக பிரிந்து செல்வதால், தங்களுக்கு  வெற்றி கிடைக்கும் என பாஜக நம்புகிறது.

-பி.எம்.எம்.

11.02.2022  3 : 30 P.M

You might also like