உள்ளாட்சித் தேர்தல்: சென்னையில் பலமுனைப் போட்டி!

தமிழகத்தில் வருகிற 19-ந் தேதி நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெறுகிறது.

ஏற்கனவே கடந்த 2011-ம் ஆண்டு உள்ளாட்சி தேர்தல் நடத்தப்பட்டது. அதன் பிறகு தற்போது நடைபெற உள்ளது. மொத்தம் 12,838 பதவிகளுக்கு தேர்தல் நடக்கிறது. இந்த தேர்தலில் வேட்புமனு தாக்கல் முடிந்து நேற்று இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியானது.

இந்தத் தேர்தலில் தி.மு.க. கூட்டணி அமைத்து போட்டியிடுகிறது. தி.மு.க. கூட்டணியில் ம.தி.மு.க., விடுதலைச் சிறுத்தைகள், இந்திய கம்யூனிஸ்டு, மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு, மனித நேய மக்கள் கட்சி, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் உள்ளிட்ட கட்சிகள் உள்ளன.

அ.தி.மு.க. தனித்து போட்டியிடுகிறது. தேர்தலில் தங்களின் பலத்தை நிரூபிக்கும் வகையில் பல கட்சிகள் தனித்து களம் இறங்கி உள்ளன.

அ.தி.மு.க. கூட்டணியில் இருந்த பா.ஜனதா தனித்து போட்டியிடுகிறது. அ.தி.மு.க. கூட்டணியில் இருந்த பா.ம.க.வும் தனியாக களம் காண்கிறது.

தே.மு.தி.க., நாம் தமிழர் கட்சி, மக்கள் நீதி மய்யம், அ.ம.மு.க., ஆம் ஆத்மி, விஜய் மக்கள் இயக்கம் உள்ளிட்ட கட்சிகளும் தனித்து போட்டியிடுகின்றன.

இதன் காரணமாக சென்னையில் பலமுனைப் போட்டி ஏற்பட்டுள்ளது. சென்னை மாநகராட்சியில் கடந்த 2011-ம் ஆண்டு நடந்த உள்ளாட்சி தேர்தலில் 200 வார்டுகளில் 169 இடங்களை அ.தி.மு.க. கைப்பற்றி அமோக வெற்றி பெற்றது.

கடந்த சட்டசபை தேர்தலில் வட மாவட்டங்களில் அ.தி.மு.க. தோல்வியை தழுவியது. எனவே நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் வெற்றி பெற அந்த கட்சி சபதம் எடுத்துள்ளது.

ஏற்கனவே சட்டசபை தேர்தலில் வட மாவட்டங்களில் பெரும்பாலான இடங்களை கைப்பற்றிய தி.மு.க. தலைமையிலான கூட்டணி உள்ளாட்சி தேர்தலிலும் தொடர்கிறது.

சட்டசபைத் தேர்தல் வெற்றியை தக்கவைக்கும் முயற்சியாக 200 வார்டுகளையும் கைப்பற்றுவதில் தி.மு.க. கூட்டணி தீவிரம் காட்டி வருகிறது.

பா.ஜனதா கட்சி சென்னை மாநகராட்சியில் 200 வார்டுகளிலும் வேட்பாளர்களை நிறுத்தி உள்ளது.

இந்தக் கட்சி கணிசமான ஓட்டுகளை பெறுவதன் மூலம் தி.மு.க.வுக்கு நேரடி போட்டியாகவும், மாநிலத்தில் 3-வது பெரிய கட்சி என்ற அந்தஸ்தை பெறவும் திட்டமிட்டுள்ளது.

பா.ம.க., நாம் தமிழர் கட்சி, தே.மு.தி.க., மக்கள் நீதி மய்யம், அ.ம.மு.க., விஜய் மக்கள் இயக்கம், ஆம் ஆத்மி ஆகிய கட்சிகளும் தங்களது செல்வாக்கை நிலைநாட்ட தனித்து களம் இறங்கி உள்ளன.

சென்னை மாநகராட்சியில் மொத்தமுள்ள 200 வார்டுகளில் 2,672 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். இதேபோல தாம்பரம் மற்றும் ஆவடி மாநகராட்சிகளிலும் பலமுனைப் போட்டி ஏற்பட்டுள்ளது.

08.02.2022  5 : 30 P.M

You might also like