– சைதை துரைசாமி, சென்னை மாநகராட்சி முன்னாள் மேயர்.
தன்னை அறியாதவருக்கும், உதவி தேவைப்படுபவர்களுக்கும் தேடிப்போய் உதவி செய்பவர் எம்.ஜி.ஆர். மனிதநேயம் என்றால் எம்.ஜி.ஆர்., – எம்.ஜி.ஆர். என்றால் மனிதநேயம்.
மனிதநேயம் என்பது சாதி, மதங்களை கடந்து முகம் தெரியாத மனிதர்களுக்கு பிரதிபலன் பாராது செய்யும் உதவி. அப்படி வாழ்ந்த புரட்சித்தலைவர் அவதரித்த நாள்தான், மனிதநேய நாள் இன்று (ஜனவரி 17).
மனிதநேயத்தின் மனித அவதாரமாக கலியுக வள்ளல் வாழ்ந்தார் என்பதற்கு உதாரணமாக ஒருசில சம்பவங்களை மட்டும் பதிவிடுகிறேன்.
1961-ம் ஆண்டு கோடம்பாக்கம் ரெயில்வே பாலம் மூடிக்கிடந்த நேரத்தில், கனமழையில் உடல் தொப்பலாக நனைந்திருக்க, கை ரிக்ஷாவை இழுக்க முடியாமல் ஒரு முதியவர் கிடுகிடுவென நடுங்கிய காட்சியை காரிலிருந்து கவனித்த புரட்சித் தலைவருக்கு நெஞ்சம் துடிக்கிறது, கண்கள் கலங்குகிறது.
உடனடியாக, தமிழகம் முழுவதுமுள்ள அனைத்து கை ரிக்ஷா தொழிலாளர்களுக்கும் மழைக்கோட்டு வழங்க ஏற்பாடு செய்தார்.
தார்ப்பாய் மழைக்கோட்டு சுமையாக இருக்கும் என்பதால், அப்போது அறிமுகமாகியிருந்த விலை அதிகமான பிளாஸ்டிக் சீட்டில் தைத்து 25 ஆயிரம் பேருக்கு கொடுத்தார்.
தமிழக முதலமைச்சராக இருந்த அறிஞர் அண்ணா வெளிநாட்டில் சிகிச்சை பெற்று திரும்பிய நேரத்தில் காங்கிரஸ் கட்சி உறுப்பினர் அனந்தநாயகி,
“முதலமைச்சருடைய வெளிநாட்டு சிகிச்சைக்கு எவ்வளவு பணம் செலவானது? அது சொந்த பணமா, அரசு பணமா? அல்லது கட்சி பணமா?” என்று சட்டமன்றத்தில் கேள்வி எழுப்பினார்.
அதற்கு பதிலளித்த அண்ணா, ‘‘எனது சிகிச்சைக்கு முழு செலவான ரூ.1 லட்சத்து 25 ஆயிரமும் என் அன்பு தம்பி எம்.ஜி.ஆர். தான் கட்டினார். கட்சியும் செலவழிக்கவில்லை, அரசு பணமும் அல்ல” என்று விளக்கம் கொடுத்தார்.
அதுவரை, அண்ணாவுக்கான செலவை நான் செய்தேன் என்று யாரிடமும் எம்.ஜி.ஆர். சொன்னதே இல்லை. அதுதான் எம்.ஜி.ஆரின் மனிதநேயம்.
– நன்றி: தினத்தந்தி – 17.01.2022