தமிழக முன்னாள் முதல்வர் பாரத ரத்னா டாக்டர் எம்.ஜி.ஆரின் 105-வது பிறந்தநாளை (ஜனவரி-17) உலகம் முழுவதும் உள்ள அவரது ரசிகர்களும், அவரது தொண்டர்களும் சிறப்பாகக் கொண்டாடி வருகின்றனர்.
கிராமம், நகரம் என எல்லாத் தெருக்களிலும், பொது இடங்களிலும் எம்.ஜி.ஆரின் திருவுருவப் படத்தை வைத்து மலர் தூவி, மரியாதை செலுத்தி, அவர்களால் முடிந்த அளவு இனிப்புகளையும், அன்னதானம் வழங்கியும் எம்.ஜி.ஆர் மீதான தங்களது அன்பையும் மரியாதையையும் வெளிப்படுத்தி வருகின்றனர்.
எம்.ஜி.ஆரின் பிறந்தநாளையொட்டி பிரதமர் நரேந்திர மோடி தமிழில் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில், “பாரத ரத்னா எம்.ஜி.ஆரை அவரது பிறந்தநாளில் நினைவு கூர்கிறேன்.
சமூகநீதி, அதிகாரமளித்தல் ஆகியவற்றில் முதன்மையான சிறந்த தலைவராக அவர் பரவலாகப் போற்றப்படுகிறார்.
அவரது திட்டங்கள் ஏழைகளின் வாழ்வில் பெரும் மாற்றத்தைக் கொண்டு வந்தன. அவரது திரையுலக பெருந்திறனும் அனைவராலும் போற்றப்படுகிறது” என பதிவிட்டுள்ளார்.
இதேபோல், தமிழக அரசு சார்பில் சென்னை கிண்டியில் உள்ள தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர். மருத்துவ பல்கலைக் கழக வளாகத்தில் சிறப்புடன் கொண்டாடப்பட்டது.
தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர். மருத்துவ பல்கலைக்கழக வளாகத்தில் அமைந்துள்ள எம்.ஜி.ஆரின் உருவச்சிலைக்கு தமிழ்நாடு அரசின் சார்பில், அமைச்சர்கள், நாடாளுமன்ற – சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் ஆகியோர் பங்கேற்று மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.