நமது வெற்றியைத் தீர்மானிப்பவை எவை?

நாம் எடுக்கப் போகும் ஆயுதம் எது என்பதை நமது எதிரிதான் தீர்மானிக்கிறார் என்பார்கள். இதேபோன்றுதான், நாள்தோறும் உருவாகிற புதிய கண்டுபிடிப்புகளும், அறிவுசார் வளர்ச்சியுமே நமது வெற்றியைக் தீர்மானிக்கின்றன.

நாம் வெற்றிகரமான மனிதராக இருக்க வேண்டுமென்றால், பணியாற்றுகிற துறையில் நமது அறிவை வளர்த்துக் கொண்டே இருக்க வேண்டும். அப்படியிருந்தால்தான் ஒரு தொழிலில், ஒரு வேலையில் நாம் நிலைத்திருக்க முடியும்.

தொழில்நுட்ப வளர்ச்சிக்கேற்ப வளருவது என்பது உங்களுக்குத் தெரியாதா? தெரிந்திருக்கலாம். ஆனால் எத்தனை பேர் அதை முன்கூட்டியே கணித்து அது சார்ந்த பயணத்தில் தங்களை ஈடுபடுத்திக் கொண்டிருக்கிறோம்..? இந்தக் கேள்விக்கு முன்பாக, நான் சில யதார்த்தங்களைச் சொல்கிறேன்.

உங்கள் கண்ணுக்குத் தெரிந்த 10 துறைகளை எடுத்துக் கொள்ளுங்கள். அந்த அனைத்துத் துறைகளிலுமே, கடந்த 20 ஆண்டுகளில் மாபெரும் மாற்றங்கள் நிகழ்ந்திருக்கின்றன.

வங்கித் துறையை எடுத்துக் கொண்டால், வங்கித் துறையின் செயல்பாடுகள் எல்லாமே மாறிவிட்டன.

வாடிக்கையாளர்களை நோக்கிய செயல்பாடுகள், முழுக்க கணினி மயமாக்கப்பட்டுள்ளது இல்லையா? மாற்றங்களுக்கு மாறாத வங்கிகள் ஓரங்கட்டப்பட்டு விட்டன.

அந்தக் கால ஊழியர்கள் இருக்கும் வங்கி என்றாலே, வாடிக்கையாளர்கள் உள்ளேயே வருவதில்லை.

இவர்களுடன் போராடி நேரத்தை வீணடிப்பதைவிட, வங்கியையே மாற்றிக் கொள்ளலாம் என்ற முடிவுக்கு வந்து விடுகிறார்கள். விளைவு தங்களை மாற்றிக் கொள்ளாத வங்கிகள், காலாவதி ஆகிக் கொண்டிருக்கின்றன.

அதேபோல ஆட்டோமொபைல் துறையை எடுத்துக் கொண்டால், வருடா வருடம் புதுப்புது மாடல் கார்கள், பைக்குகள் வெளிவருகின்றன.

20 வருடம் முன்பு, ஒரு மெக்கானிக் கடை வைத்திருந்தவர், இன்றைக்கு அதே ஒர்க் ஷாப்பில் அதே கருவிகள் மற்றும் அது மட்டுமே தெரிந்த ஊழியர்களை வைத்துக் கொண்டு செயல்படவே முடியாது.

நிறைய புது விஷயங்களுக்கு அவர் அப்டேட் ஆகி இருக்க வேண்டும். இல்லையேல், இந்த மெக்கானிக் ஷாப்காரர் அவுட் டேட் ஆகி விடுவார்.

இதேபோன்று, எலெக்ட்ரானிக்ஸ் துறையில் எவ்வளவு புதுமைகள் புகுந்திருக்கின்றன? கடந்த 20 ஆண்டுகளில், தகவல் தொழில்நுட்பம் பற்றிச் சொல்லவே வேண்டாம்.

நாளொரு மேனியும், பொழுதொரு வண்ணமுமாக சாஃப்ட்வேர் ப்ராடக்ட்ஸ், இணையதளங்கள், மொபைல் போன் ஆப்ஸ்கள் என எல்லாமே புதிது புதிதாக வளர்ந்து கொண்டேயிருக்கின்றன.

நாம் லேண்ட் லைன் போனிலிருந்து பேஜருக்கு மாறுவதற்குள்ளேயே, செல்போன் வந்தது. அடுத்து ஆண்ட்ராய்ட் போன். இன்று உலகமே உள்ளங்கைக்குள் வந்துவிட்டது.

இன்று கையடக்க யாஷிகா கேமராவால் படம் எடுக்கும் எவரையும் பார்க்க முடியாது. காரணம், 10 ஆண்டுகளுக்கு முந்தைய அறிவோடு நீங்கள் இந்தத் துறையை அணுக முடியாது.

வரி சார்ந்த விஷயம், வருடந்தோறும் புதிய புதிய வரி விதிப்புகள், குறிப்பாக இந்த ஜி.எஸ்.டி. வந்த பிறகு, நிறைய ஆடிட்டர்களே அதைக் கற்றுக் கொள்ள வகுப்புகளுக்குச் சென்றார்கள்.

எனவே எந்தத் துறையில் நீங்கள் பணியாற்றி வருகிறீர்களோ, நாள்தோறும் நீங்கள் அதன் வளர்ச்சி பற்றிப் படித்தே ஆக வேண்டும்.

புதுப்புது விஷயங்களைக் கற்றுக் கொள்ள வேண்டும். அதை தினசரி நடவடிக்கையில் செயல்படுத்த ஆரம்பிக்க வேண்டும். இப்படி நிறைய துறைகளை சொல்லிக் கொண்டே போகலாம்.

சட்டத்துறையை எடுத்துக் கொண்டால், நாள்தோறும் கோர்ட்டுகளில் எவ்வளவு தீர்ப்புகள் வழங்கப்படுகின்றன.

அதையெல்லாம் தெரிந்து கொண்டால்தான் ஒரு நல்ல வழக்கறிஞராக மாற முடியும். வாடிக்கையாளர்களுக்கு ஆதரவாக வாதாடும்போது மேற்கோள் காட்ட முடியும். வெற்றிகளைக் குவிக்க முடியம்

கல்வித் துறையிலும் ஏகப்பட்ட மாற்றங்கள். தனியார் பள்ளிகளின் வரவால் அரசுப் பள்ளிகளின் தரமே மாறி விட்டது. ஆன்லைன் மூலம் கல்வி கற்கும் வாய்ப்புகள் கிடைத்துவிட்டதால், நாடு தாண்டியும் குருவை ஏற்றுக் கொள்ள முடிகிறது.

இதிலிருந்து நாம் தெரிந்து கொள்ள வேண்டியது என்ன..? நாம் பள்ளி, கல்லூரியில் படித்த ஏட்டுப் படிப்பு, ஒரு நல்ல வேலைக்கான அடித்தளம்.

வேலையில் சேர்ந்தவுடன், நீங்கள் படிக்க ஆரம்பிக்கிறீர்கள் இல்லையா.? அதுதான் உங்கள் வாழ்க்கைக்கானது. அந்தப் படிப்பில் தொடர்ந்து ஈடுபட்டால், வாழ்க்கை வளமாகிவிடும். வேலையிலும் வளர்ச்சி காண முடியும்.

துறை சார் அறிவை வளர்த்துக் கொள்ள என்ன செய்ய வேண்டும்? எந்தத் துறையில் இருக்கிறீர்களோ அந்தத் துறையைச் சார்ந்த அமைப்புகள், சங்கங்களில் உறுப்பினராகுங்கள்.

அதில் இது மாதிரியான புதுப்புது விஷயங்கள் பற்றிய தகவல்கள் உங்களுக்கு தெரியவரும். 2-வது இந்தத் துறை சார்ந்த செய்திகள் வருகிற தினசரிகள், புத்தகங்கள், நூல்களைத் தேடி அதைத்தொடர்ந்து படிக்கும் வண்ணம் ஏற்பாடு செய்து கொள்ளுங்கள்.

3-வது இது மாதிரியான துறைகள் சார்ந்த கருத்தரங்குகள், கூட்டங்களில் பங்கேற்பதன் மூலம் புதிய தொழில்நுட்பங்களைக் கற்றுக் கொள்ளலாம்.

அடுத்ததாக நீங்கள் வெளிநாடுகளுக்குப் பயணிக்கலாம். ஏனென்றால், அங்கு என்னவெல்லாம் தொழில்நுட்பங்கள் வருகிறதோ அதெல்லாம் தான் இந்தியாவில் அறிமுகப்படுத்தப்படுகிறது.

உதாரணத்திற்கு ஆட்டோமொபைல் துறையில் இருந்தீர்களானால், ஜெர்மனியில் நிறைய புதிய தொழில்நுட்பங்கள் வருகிறது.

நீங்கள் எந்திரத் துறையில் இருந்தீர்களானால், இங்கிலாந்தில், ஜப்பானில் இதுமாதிரியான இடங்களில் நிறைய புதிய தொழில்நுட்பங்கள் வந்து கொண்டேயிருக்கிறது. அந்த நாட்டில் அந்தத் தொழில்துறையில் லேட்டஸ்ட் டெக்னாலஜி என்ன பயன்படுத்துகிறார்கள் என்று பார்த்து தெரிந்து கொள்ளலாம்.

இன்னொன்று, கண்காட்சிகள். உலகம் முழுவதும் நிறைய சர்வதேசக் கண்காட்சிகள் நடக்கின்றன. ஒரு ஆட்டோமொபைல் கண்காட்சியை நீங்கள் சென்னையில், மதுரையில் பார்ப்பதைவிட, டெல்லியில், ஜெர்மனியில் பார்த்தீர்களானால், இன்னும் புதிய உலகளாவிய தொழில்நுட்பங்களை விரைவில் கற்றுக் கொள்ள முடியும். அடுத்தவர்களுக்கும் பயிற்றுவிக்க முடியும்.

ஆக, உங்கள் வேலையில் நீங்கள் தொடர்ந்து நிலைத்திருக்க வேண்டுமானால், அடுத்தவர்களை விட முன்னேறிச் செல்ல வேண்டுமானால், நீங்கள் அவசியம் செய்ய வேண்டியது உங்களை பணி சார்ந்த அறிவாளியாக மேம்படுத்திக் கொண்டே இருப்பதுதான்.

உங்கள் அறிவை வளர்த்துக் கொண்டேயிருப்பது தான், உங்களுக்கான சிறந்த ஆயுதம். ஓடுகிற நீருக்கு பேர்தான் நதி.

தேங்கி நிற்கிற நீரை யாரும் மதிப்பதில்லை. ஆக உங்கள் அறிவை வளர்த்துக் கொண்டே வந்தால், ஆயுதம் கூர் தீட்டப்பட்டுக் கொண்டே இருக்கும். உங்கள் துறையில் நிலைத்திருக்க முடியும்.

நீங்கள் பார்க்கிற வேலையில், முதலாளியே கதறுகிற அளவுக்குத் திறனைக் காட்டுங்கள். அதன் பலன் நிச்சயம் உங்களுக்கு வந்தே தீரும்.

– இராம்குமார் சிங்காரம் எழுதிய ‘நீங்கள் இன்னும் ஏன் கோடீஸ்வரர் ஆகவில்லை’ நூலிலிருந்து…

http://ramkumarsingaram.com

You might also like