எம்.ஜி.ஆருடன் தேவிகா நடித்த ஒரே படம்!

தமிழ் சினிமாவின் முன்னாள் நாயகிகள் ஒவ்வொருவருக்கும் தனித்தனி சிறப்புகள் உண்டு. அதில், நடிப்பில் தனித்துவமான சிறப்பைப் பெற்றவர் தேவிகா. நடிகை கனகாவின் தாய்.

அந்த காலக்கட்டத்தின் முன்னணி ஹீரோக்களான எம்.ஜி.ஆர், சிவாஜி, ஜெமினி, எஸ்.எஸ்.ஆர் உட்பட பலருடன் ஜோடியாக நடித்திருக்கும் தேவிகாவின் இயற்பெயர் பிரமிளா தேவி.

ஏவி.எம்.மின் ‘முதலாளி’ படத்தில் எஸ்.எஸ்.ஆர் ஜோடியாக அறிமுகமான தேவிகா, தமிழ், தெலுங்கு என 150-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்திருக்கிறார்.

ஹீரோயின்களுக்குள் கடும்போட்டி இருந்த காலகட்டத்தில் தனக்கென தனி ரூட்டில் பயணித்தவர் தேவிகா. தேவிகாவின் நடிப்பை மிளிரச் செய்தவர் இயக்குநர் ஸ்ரீதர்.

அவர் இயக்கிய ‘நெஞ்சம் மறப்பதில்லை’, ‘நெஞ்சில் ஓர் ஆலயம்’, ‘சுமைதாங்கி’ படங்களில் தேவிகாவின் நடிப்புக்கு நிகர் அவரேதான். அவரை உயரத்துக்கு கொண்டு சென்ற படங்களில் இந்தப் படங்களுக்கும் முக்கிய பங்கு உண்டு.

‘நெஞ்சம் மறப்பதில்லை’ படத்தில் இரண்டு வேடங்களில் வரும் அவர் நடிப்பை பாராட்டாதவர்களே இருக்க முடியாது. அதில் இடம்பெறும் ‘நெஞ்சம் மறப்பதில்லை’ (சோகம் / மகிழ்ச்சி) பாடலும் தேவிகாவின் நடிப்பும் இன்றுவரை பேசப்பட்டுக் கொண்டிருக்கின்றன.

இந்தப் படம் வெளியாவதற்கு முன் வந்த ‘நெஞ்சில் ஓர் ஆலயம்’ படத்திலும் தேவிகா காதல், சோகத்தை அப்படியே இறக்கி வைத்திருப்பார்.

இந்தப் படத்தில் ‘சொன்னது நீதானா, சொல் சொல்.. என்னுயிரே..’ பாடலில் காதல் சோகத்தை இன்னும் உருக்கிக் கொட்டியிருப்பார் தேவிகா. கூடவே சுசீலாவின் குரலும் அந்தப் பாடலை வேறொரு இடத்துக்கு கொண்டு சென்றிருக்கும்.

எம்.எஸ்.வி இசையில் உருவான இந்தப் பாடல்கள் இப்போதும் காதல் உணர்வை அசங்காமல் கடத்துகிறது.

எம்.எஸ்.வி அப்போது வேடிக்கையாக சொன்னாராம், “நான் சுசீலாவை பாட வச்சேனா? தேவிகாவை பாட வச்சேனா? அப்படி கரெக்டா பொருந்துதே” என்று. அந்தளவுக்கு நடிப்பில் ஒன்றிப்போகும் திறமைதான் தேவிகாவின் தனித்துவம்.

இப்படிப்பட்ட தேவிகா, புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆருடன் ஒரே ஒரு படத்தில் மட்டுமே நடித்திருக்கிறார். அந்தப் படம் ‘ஆனந்த ஜோதி’.

வி.என்.ரெட்டி, ஏ.எஸ்.ஏ சாமி இயக்கிய இந்தப் படத்தில், எம்.ஆ.ராதா, அசோகன், எஸ்.வி.சகஸ்கரநாமம், ஜாவர் சீதாராமன், வீரப்பா, மனோரமா உட்பட பலர் நடித்துள்ளனர். பி.எஸ்.வீரப்பா தயாரித்த படம் இது.

எம்.எஸ்.வி இசையில், பொய்யிலே பிறந்து பொய்யிலே வளர்ந்த புலவர் பெருமானே, பனியில்லாத மார்கழியா.., நினைக்கத் தெரிந்த மனமே உனக்கு… ஆகிய பாடல்கள் அப்போது ரிபீட் மோடில் இருந்தவை.

எம்.ஜி.ஆர், கவிஞர் மணியரசனாகவும், உடற்பயிற்சி ஆசிரியர் ஆனந்தனாகவும் நடித்திருப்பார். இந்தப் படத்தில் கமல்ஹாசன் குழந்தை நட்சத்திரமாக நடித்திருப்பார்.

இந்தப் படம் ஹிட் என்றாலும் தேவிகாவும் எம்.ஜி.ஆரும் அடுத்த சேர்ந்து நடிக்கவே இல்லை.

-அலாவுதீன்

22.12.2021   10 : 50 A.M

You might also like