தெரியாது என்பதைத் தெரியப்படுத்தலாமா?

பில் கேட்ஸ், மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தின் முதன்மை செயலதிகாரியாக இருந்த நேரம். ஐரோப்பிய மைக்ரோசாஃப்டின் கிளைக்குத் தலைமை அதிகாரியை நியமிக்க, ஒரு நேர்காணலை நடத்தினார். கிட்டத்தட்ட ஐந்தாயிரம் பேர் வந்திருந்தார்கள்.

ஒரு பெரிய அறையில் எல்லோரும் குழுமியிருந்தார்கள். எல்லாவற்றையும் கவனித்தபடி ஒரு பக்கத்தில் உட்கார்ந்திருந்தார், கோவிந்தராஜு.

உள்ளே நுழைந்த பில் கேட்ஸ், 5000 பேரைப் பார்த்ததும் கொஞ்சம் அதிர்ந்துதான் போனார். ‘ஆள் தேர்வை சீக்கிரம் முடிக்கணும், சிம்பிளா வைக்கணும்’ என்ற முடிவோடு, பொதுவாக வந்திருந்த அனைவருக்கும் வணக்கம் வைத்தார்.

“உங்களில் யாருக்கெல்லாம் ஜாவா தெரியும்? தெரியாதவர்கள் கிளம்பலாம்” என்றார்

2000 பேர் இடத்தை காலி செய்தார்கள் நம்ம கோவிந்தராஜுக்கும் ஜாவா தெரியாதுதான் இருந்தும் போகவில்லை. இப்படியே இங்க இருந்தா, எதையும் இழக்கப் போறது இல்ல என்னத்தான் நடக்குது பார்ப்போம்” என்றபடி அங்கேயே இருந்து விட்டார்.

அடுத்த கேள்வி, “உங்களில் யாரெல்லாம் நூறு பேருக்கு மேல் ஆட்களை நிர்வகித்து இருக்கிறீர்கள்? அவர்கள் மட்டும் இருக்கலாம்” என்றார் பில்கேட்ஸ்.

இன்னொரு 2000 பேர் வெளியேறிவிட்டனர்.

கோவிந்தராஜு ஒருத்தரைக்கூட நிர்வகித்தது கிடையாது. இருந்தும் அடுத்த கேள்வி என்னவாக இருக்கும் என்பதை அறிய அமைதியாக அமர்ந்திருந்தார்.

மேலாண்மை பட்டம் பெறாதவர்கள் தயவுசெய்து. சொல்லி முடிக்கும் முன்பே 500 இருக்கைகள் காலி. “அதையெல்லாம் படிக்க நமக்கு எங்கே நேரம் இருந்தது?” பெருமூச்சுவிட்டபடி பில்கேட்ஸின் புத்திசாலித்தனத்தை வியந்தபடி அமர்ந்திருந்தார் கோவிந்தராஜு

“ஐரோப்பிய மொத்த கண்டத்திற்கு முழுமையான தலைமைப் பதவியாச்சே? கண்டம் முழுக்க சுற்ற வேண்டி இருக்குமே எத்தனை மொழிகள் தெரிந்திருக்கும் என்று பார்ப்போம்.” என்று அடுத்தக் கேள்வியைக் கேட்டார் பில்கேட்ஸ்.

“உங்களில் யாருக்கெல்லாம் செர்போக்ரோட் மொழி தெரியும்?” செர்போக்ரோட் உலகில் அரிதாகப் பேசப்படும் மொழி இப்ப அரங்கில் இரண்டே பேர் இருந்தார்கள்.

அதில் ஒருவர் யாரென்று உங்களுக்குத் தெரியும் அது, “எவ்வளவோ பண்ணிட்டோம். இதைப் பண்ண மாட்டோமா?” என்ற நினைப்பில் நம்ம கோவிந்தராஜு இன்னொருவர் இளைஞர், கல்விக் களை தாண்டவமாடியது இளைஞனுக்கு அடித்ததடா யோகம் என்று எண்ணினார்.

ஆனாலும், மனசுக்குள் பயம்தான். பில்கேட்ஸ் இருக்கையில் அமர்ந்தார். மூன்று பேரும் ஒரு வட்ட டேபிளைச் சுற்றி உட்கார்ந்தார்கள்.

“இப்ப நீங்க ரெண்டு பேர்தான் இந்த மொழி தெரிந்தவர்கள் இருக்கிறீர்கள். செர்போக்ரோட் மொழியில் மைக்ரோசாஃப்ட நிறுவனத்தைப் பற்றி, அதன் தொழில்நுட்பத் திறன் பற்றி விவாதம் செய்யுங்கள் அதன் அடிப்படையில் உங்களில் ஒருவரைத் தேர்வு செய்கிறேன்” என்றார்.

கோவிந்தராஜுவிடம் “பேசுங்கள்” என்றார்.

சின்ன வயது என்பதால் நெஞ்சை நிமிர்த்தியபடி அமர்த்திருந்தான் இளைஞன் மூளைக்காரன் போல!

பதற்றப்படாமல் வருவது வரட்டும் என்று பேச ஆரம்பித்தார்.. கோவிந்தராஜு.

மெதுவாக, “தம்பிக்கு எந்த ஊரு?” கேட்டது தமிழில்.

“தூத்துக்குடி பக்கம். நீங்க?” என்றான் அவன்.

சரளமான உரையாடல் அரங்கேறியது.

ஒரு ஜாலிக் கதைதான் இது. தெரியாது என்பதைத் தெரியாது என்று காட்டிக் கொள்ளாமல் இருந்தாலே, சில நேரங்களில் நமக்குப் பிரமாதமான வாய்ப்புகள் வந்து சேரலாம்.

‘நின்று கொண்டே இருப்பதைவிட, சென்று கொண்டே இருப்பது மேல் என்கிறது சீனப் பழிமொழி.

போட்டியில் கலந்து கொள்ளாதவன் பரிசுக்குத் தகுதியற்றவன் என்பதையும் மனதில் கொண்டு, துணிந்து களமிறங்குங்கள். ஒருவேளை வெற்றி வசப்படலாம்.

– இராம்குமார் சிங்காரம் எழுதிய ‘ஒரு கதை… ஒரு விதை…’ என்ற நூலிலிருந்து…

http://ramkumarsingaram.com

You might also like